TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களுக்கு ஆபத்தா

July 11 , 2023 555 days 437 0
  • செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) என்னும் சொல் இன்று பரவலாகப் பல தளங்களில் புழங்கினாலும் அந்தக் கருத்தாக்கம் புதியது அல்ல. செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவுள்ள இயந்திரங்கள் என்னும் சிந்தனை 1960களிலேயே அறிமுகமாகிவிட்டது. இயந்திரங்களின் அறிவை எப்படி நிரூபிப்பது என்பதுதான் அறிவியலாளர்கள் அன்று எதிர்கொண்ட சவால். செயற்கை நுண்ணறிவின் திறமையைப் பரிசோதிப்பதற்கு மிகச் சரியான விளையாட்டாக செஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு:

  •  1997இல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு இயந்திரமான ‘டீப் ப்ளூ’ (Deep Blue) உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்ப்ரோவை செஸ் போட்டியில் தோற்கடித்தது. ஆனால், கேரி இந்தத் தோல்வியால் துவண்டுவிடவில்லை. இயந்திரங்களின் சாத்தியப்பாடுகளைப் புரிந்துகொண்டு மனிதர்களும் கணினிகளும் போட்டிபோடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதன் மூலம் விளையாடப்படும் புதிய செஸ் வடிவத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
  • ‘ஃப்ரீஸ்டைல் செஸ்’ (Freestyle Chess) என்றழைக்கப்படும் புதிய செஸ் வடிவம் மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்கள் தனித் தனியாகப் பணி யாற்றுவதால் கிடைப்பதை விடச் சிறந்த விளைவுகளை ஈட்ட முடியும் என்பதற் கான உதாரணம்.
  • மனிதர்களின் அறிவு, இயந்திரங் களின் செயற்கை நுண்ணறிவு இணைந்த இந்தக் கூட்டியக்கமே மேம் படுத்தப்பட்ட நுண்ணறிவு (Augmented Intelligence). மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு என்பது மனிதர்களின் அறிவாற்றல் திறன் களை இயந்திரத்தின் உதவியுடன் மேம்படுத்துவதே.
  • கணினியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ்.வேர்டு உள்ளிட்ட கோப்புகளில் உள்ள உச்சரிப்புப் பிழைகாட்டி (Spell check), மனிதர்களின் மொழித் திறன் இயந்திரத்தின் துணையுடன் மேம்படுத்தப்படுவதற்கான மிக எளிய உதாரணம். வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ‘கூகுள் மேப்’கள் ஓட்டுநர்களின் வழிகண்டறியும் திறனை இயந்திரத்தின் துணையுடன் மேம்படுத்துவதாகும்.

இதுவரை கண்டிராத சவால்கள்:

  • அண்மையில் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) மனிதர்களின் கைகளுக்கு அகப்பட்ட சக்தி வாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வடக்கு மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தத்துவப் பேராசிரியர், புர்கா மீதான தடை அறம் சார்ந்ததா என்பது குறித்த ஒரு மாணவரின் கட்டுரையை, அந்த வகுப்பு மாணவர்கள் எழுதியவற்றில் ஆகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தார்.
  • புதிய தகவல்களை உருவாக்குதல், கட்டுரை எழுதுதல், கோட்பாடுகளை விளக்குதல், புதிய கருத்துருக்களை வளர்த்தெடுத்தல் ஆகிய திறன்களை உள்ளடக்கிய ‘சாட்ஜிபிடி’ என்னும் செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயன்படுத்தி அந்தக் கட்டுரையை எழுதியதாகப் பின்னர் அந்த மாணவர் ஒப்புக்கொண்டார்.
  • ‘சாட்ஜிபிடி’ போன்ற கருவிகள் டிஜிட்டல் யுகத்தில் தலைமைப் பொறுப்பு வகிப்போருக்கு முன் எப்போதும் இல்லாத, இதுவரை கண்டிராத சவால்களையும் சாத்தியங்களையும் அளிக்கின்றன. தொழிற்புரட்சிக் காலத்தில் மனிதர்களின் உடல் வலிமைக்கும் இயந்திரத்துக்கும் இடையே போட்டி நிலவியதில் இயந்திரமே வென்றது.
  • டிஜிட்டல் யுகத்தில் மனிதர் களின் மூளை வலிமைக்கு இயந்திரங்கள் சவால் விடுகின்றன. உயிரின உலகத்தை மனிதர்கள் ஆட்சிசெய்வதற்கு அவர்களின் அறிவுத் திறனே காரணம். மனிதர்களின் தனித்துவமான இந்த ஆற்றல், நவீன இயந்திரங்களின் முன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.
  • நவீன இயந்திரங்களால் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்களின் திறன்களை மேம்படுத்த, மனிதர்களின் முக்கியத்துவத்தை நிலைத்து நிற்கவைப்பதுதான் டிஜிட்டல் யுகத்தில், தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு மிகக் கடினமான சவால்.
  • இந்தப் புதிய உலகத்தை எதிர்கொள்வதற்கு மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான கூட்டியக்கம் வெற்றிச் சூத்திரமாகச் செயல்பட முடியும். தலைமைப் பொறுப்பில் உள்ளோர் தங்களது மனித வளத்தை மேலும் பயனுள்ளதாக்கும் வகையில் அவர்களின் திறன்களை எப்படி மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

நேரத்தை மிச்சப்படுத்தும் கருவிகள்:

  • ஊழியர்கள் தமது அலுவல்சார்ந்த விவரங்களைக் கையாள்வதற்கான தளங்கள் (Employee Self Service), பணித்திட்ட மேலாண்மை (Project management), நேர மேலாண்மை (Time management), சொத்துக் கண்காணிப்பு (Asset tracking) ஊழியர்களுக்கு இடையிலான தொடர்பாடல் (Internal Communication) ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு, ஊழியர்களுக்குப் பதிலாக மனிதர்களைப் போலவே வாடிக்கையாளர்களுடன் பேசக்கூடிய சாட்பாட்கள் (Chatbot) ஆகியவை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற் கான சில உதாரணங்கள். மின்னஞ்சல்கள், கடிதங்கள், அறிக்கைகள் உள்ளிட்டவற்றை எழுதுவதற்கும் பெரிய உரை களைச் சுருக்குவதற்கும் ‘சாட் ஜிபிடி’யைப் பயன்படுத்தலாம். ஊழியர்களால் மிச்சப்படுத்தப் படும் நேரம் நிறுவனத்தால் மிச்சப்படுத்தப்படும் நேரமே.

நம்பகமானவையா?

  • ‘சாட்ஜிபிடி’ போன்ற கருவி களின் வருகை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கல்விப்புலம் சார்ந்த கட்டுரைகள் அல்லது செய்திக் கட்டுரைகள் எழுதுவது தொடர்பான அறம்சார் கேள்விகளை எழுப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் திரட்டப்படும் தகவல்கள், எந்த அளவுக்கு நம்பகமானவையாகவும் சார்பற்றவையாகவும் இருக்கும் என்ற கேள்வி உள்ளது.
  • குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுத் தொகுப்பின் தரத்தில்தான் இதற்கான விடை அடங்கியுள்ளது. கடந்த மே மாதம் அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது வாதங்களுக்கு வலுச்சேர்ப்பதற்காக ‘சாட்ஜிபிடி’யால் திரட்டித் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலியான வழக்குகளை முன்னிறுத்தி வாதிட்டதற்காக மன்னிப்புக் கேட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
  • இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்போரின் வெற்றிக்கான மந்திரம், மனிதர்களின் நம்பகத்தன்மைவாய்ந்த அறிவாற்றலைச் செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு மேம்படுத்துவதே. ‘செயற்கை நுண்ணறிவு மனிதர்களைப் பதிலீடு செய்துவிடுமா?’ என்று கேட்கப்படும் கேள்விக்கான விடையை இப்படிச் சொல்லலாம்: “மேம்படுத்தப் பட்ட நுண்ணறிவு மனித அறிவாற்றலைப் பதிலீடு செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம்”.

நன்றி: இந்து தமிழ் திசை (11  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories