- அமெரிக்காவில் வசிக்கும் ராபர்ட் வில்லியம்ஸ் கறுப்பினத்தவர். அன்று அவருக்குப் பிறந்த நாள். வீட்டில் தன் மனைவி, குழந்தைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், முந்தைய நாள் இரவு கடை ஒன்றில் ராபர்ட் திருடியதாகவும், கைது செய்வதற்கான ஆணையுடன் வந்திருப்பதாகவும் சொல்லி அவரைக் கைது செய்து விட்டார்கள்.
தவறிழைத்த தொழில்நுட்பம்
- ராபர்ட் கடை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றுபவர். ஒருநாளும் திருடியதில்லை. குறிப்பாக, அவர்கள் சொல்லும் நேரத்தில் அவர் வீட்டில்தான் இருந்தார். ஆனால், காவல் துறையினர் ராபர்ட்டைத் துருவித்துருவி விசாரித்தனர். சாட்சியமாக அவர்கள் காட்டியது திருடப்பட்ட கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த மங்கலான ஒரு ஒளிப்படம். பார்ப்பதற்கு ராபர்ட் போலத்தான் தெரிந்தது. இரண்டு நாள்கள் கழித்துதான் காவல் துறையினருக்கு உண்மை தெரியவந்தது. ராபர்ட் திருடவில்லை.
- தாங்கள் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள் தவறுதலாக அவரைக் காட்டிவிட்டது. மென்பொருள் சொன்னதை நம்பி ராபர்ட்டைக் கைது செய்துவிட்டார்கள். ராபர்ட்டின் நல்ல நேரம் - மென்பொருள் செய்த தவறைக் காவலர்கள் ஒப்புக்கொண்டார்கள். பொதுவாக அப்படியெல்லாம் நடப்பதில்லை. உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் இருக்கும் அபாயங்களில் ஒன்று இந்தச் சம்பவம்.
பாம்பு எண்ணெய்
- இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவு தொடர்பான துறையில் முதலீடுகள் குவிகின்றன. அனைத்து நிறுவனங்களும் தங்கள் மென்பொருள்களில் ஏதோ ஒரு விதத்தில் செயற்கை நுண்ணறிவு இருப்பதாக விளம்பரம் செய்ய வேண்டும் எனத் துடிக்கின்றன.
- தேவையற்ற இந்த அவசரத் துடிப்புதான் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தவறுகளுக்கு இட்டுச் செல்கிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆய்வுகள் செய்யும் அரவிந்த் நாராயணன், முதல் முறையாகப் போலி செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பற்றிப் பேசினார். அதற்கு அவர் ‘ஏஐ ஸ்நேக் ஆயில்’ (AI Snake Oil) என்று பெயரிட்டார்.
- 19ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில், அமெரிக்காவில் தங்க வேட்டைக்குப் புறப்பட்ட மக்கள் பலர், சீனர்களை வேலையாள்களாகக் கொண்டு வந்து சுரங்கங்களைத் தோண்ட வைத்தனர். அப்படி வேலைக்கு வந்த சீனர்கள் உடல்வலியைப் போக்குவதற்காக ஒரு குறிப்பிட்ட பாம்பின் கொழுப்பிலிருந்து செய்யும் மருந்தைப் பயன்படுத்தினார்கள். அந்த மருந்து, ‘பாம்பு எண்ணெய் மருந்து’ என அழைக்கப்பட்டது.
- இதையடுத்து, மோசடிப் பேர்வழி ஒருவர் போலியாகச் சில எண்ணெய்களைக் கலந்து, அது பாம்பு எண்ணெய் மருந்து என்றும் அது சர்வரோக நிவாரணி என்றும் விளம் பரப்படுத்திப் பல்லாயிரம் டாலர்களைச் சம்பாதித்துவிட்டார். அன்றிலிருந்து போலியான பொருள்களுக்கு‘பாம்பு எண்ணெய்’ என்று பெயரிடப்படுவது அமெரிக்காவில் வாடிக்கை. அதை அடிப்படையாகக் கொண்டே போலி செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை அவ்வாறு அழைக்கிறார் அரவிந்த் நாராயணன்.
ஏமாற்று வேலைகள்
- ‘இவை செயற்கை நுண்ணறிவு கொண்டவை. வர்த்தகத்தில் பலவித மாயாஜாலங்களை நிகழ்த்தும்’ என்று மார்க்கெட்டிங் நபர்களால் பொய் சொல்லப்பட்டு, போலியான ஏஐ மென்பொருள்கள் விற்கப்படுகின்றன. இதை நம்பி வாங்கும் நிறுவனங்களும் தாங்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருளைக் கொண்டு தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதாகவும் அதன் மூலம் சரியான முடிவை எடுப்பதாகவும் தவறாக எண்ணிக்கொண்டு ஏமாந்து போகின்றனர்.
- ஏஐ மென்பொருள்கள் இயங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதைப் பற்றி ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒளிப்படம் தொடர்பான செயற்கை நுண்ணறிவு கறுப்பு இனத்தவர்களை, கொரில்லா குரங்குகள் என வகைப்படுத்தி, அவர்களை வருத்தமடைய வைத்தது.
- இது தொடர்பான புகார் வந்ததும் கூகுள் நிறுவனத்தின் ஒளிப்பட மென்பொருள் ‘கொரில்லா’ என எந்த ஒளிப்படத்தையும் லேபிள் செய்வதை அறவே நிறுத்திவிட்டது. பல ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் கறுப்பினத்தவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத சிக்கலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
- குறிப்பாக, முகத்தைக் கொண்டு குறிப்பிட்ட நபரைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் (Facial recognition systems) வெள்ளை இனத்து மக்களைச் சரியாகக் கண்டறிவதும் அதே கறுப்பினத்தவர்கள் என்றால் அதில் நிறைய தவறுகள் நிகழ்வதும் ஆராய்ச்சிகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- இப்படியான சிக்கல்கள் இருக்கும்போது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்று ஒரு மென்பொருளை எப்படி உருவாக்குகிறார்கள்? இது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்று ஒரு மார்க்கெட்டிங் நபர் சொல்லி, சில மாதிரிகளைக் காட்டுவதை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த மென்பொருளை நம்பிப் பலரின் எதிர்காலத்தை அதனிடம் எப்படி ஒப்படைப்பது? இன்று பல நிறுவனங்களின் மனிதவள மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
- கொடுக்கப்படும் தகவல்களில் இருந்து கற்றுக்கொள்வதுதான் இந்த வகை மென்பொருள்களின் அடிப்படை அம்சம். சில பணிகளில் ஏற்கெனவே ஆண்களே அதிக அளவில் பணிபுரிவதால், அதே வேலைக்குச் சுய விவரக் குறிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மென்பொருள் ஆண்களின் சுயவிவரக் குறிப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது தெரியவந்திருக்கிறது.
- செயற்கை நுண்ணறிவில் இப்படியான சிக்கல்கள் இருக்கும்போது போலியான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைக் காவல் துறையோ ஒரு நிறுவனத்தின் மனிதவள மேலாண்மைத் துறையோ பயன்படுத்தினால் எவ்வளவு ஆபத்து என்பது புரிகிறதா?
என்ன தீர்வு?
- ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சரியான மென்பொருள்தானா என்பதைப் பல சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். உண்மையில் இது செலவு பிடிக்கும் விஷயம். ஆனால், சில மாதங்களாவது சோதனை நிலையில் வைத்து, செலவுசெய்து கண்டுபிடித்தால்தான், அந்தச் செயற்கை நுண்ணறிவின் பலனை ஒரு நிறுவனம் ஓரளவுக்குப் பெற முடியும். ஆனால், இன்றைக்குப் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வாங்குவதற்குக் காரணம், மனித வளத்தைக் குறைத்து அதன் மூலம் சம்பளச் செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரித்துக்கொள்ளலாம் என்பதுதான்.
- அப்படியான நிறுவனங்கள் ஒருபோதும் பணத்தைச் செலவுசெய்து செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைச் சோதனை செய்யப்போவதே இல்லை. செலவு செய்யவும் முடியாது. அதேநேரம் சரியான செயற்கை நுண்ணறிவு மென்பொருளும் வேண்டும் என்பது சாத்தியமற்றது. நீங்கள் ஆரம் பத்தில் சிறிதளவாவது பணம் செலவுசெய்து சோதனைகளில் ஈடுபட்டால்தான், பிற்காலத்தில் ஓரளவு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்.
- இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு தொடர்பாகப் பரவிவரும் ஆர்வத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் பல நிறுவனங்கள் முனைப்புக் காட்டுகின்றன. அரவிந்த் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இதைச் சுட்டிக்காட்டியதால், அமெரிக்கா வில் இதற்கான சட்டங்கள் வந்துள்ளன.
- ஐரோப்பாவில் போலி செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைக் கண்காணிப்பதையும் அவை எங்கே, எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் பகுப்பாய்வுகள் சரியாக இருக்கின்றனவா என்பதை ஆராய்வதையும் நிறுவனங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாய மாக்கும் சட்டங்களும் வரவிருக்கின்றன.
- இந்தியாவில் இதுபோன்ற மென்பொருள்கள் ஏற்கெனவே வந்துவிட்டிருக்கலாம். அவற்றின் உண்மைத்தன்மை தெரியாமல் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகலாம். மத்திய அரசு இதற்கான ஒரு வழிகாட்டுதலையும் சட்ட வரையறையையும் விரைவாகக் கொண்டுவர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08– 08 – 2023)