TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு எனும் ஒருவழிப் பாதை

March 16 , 2024 301 days 371 0
  • வரலாற்றை எழுதும் பேனா இன்று செயற்கை நுண்ணறிவின் கைகளில் இருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று, ரஷ்ய-உக்ரைன் போர், சாட்ஜிபிடி-யின் அறிமுகம், இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய நிகழ்வுகள், 2020-க்குப் பிந்தையஆண்டுகளில், 21ஆம் நூற்றாண்டின் திசைவழியைத் தீர்மானிப்பவையாக வரலாற்றைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.
  • மனித குலத்தின் எல்லா அம்சங்களிலும், மனிதர்கள் அல்லாத உயிர்களின் எல்லா நிலைகளிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், போரின் விளைவுகள் அதற்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்து கடந்த வாரம் பார்த்தோம். போரின் விளைவுகள் கண்கூடு. ஆனால், சாட்ஜிபிடி எவ்வாறு காலநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கிறது எனப் பலரும் வியப்புடன் என்னிடம் கேட்டனர்.

சாட்ஜிபிடி பிறந்தது

  • ஓபன்ஏஐ (OpenAI) என்கிற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தயாரிப்பான சாட்ஜிபிடி என்னும் அரட்டைப்பெட்டி (chatbot), பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 2022 நவம்பர் 30 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பாரிய மொழி மாதிரிகள் [Large language models - LLMs] தொழில்நுட்பத்தில் பெருந்தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் இந்த அரட்டைப்பெட்டி, உள்ளீடு செய்யப்படும் கேள்விகள், கட்டளைகளுக்கு நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிலளிக்கிறது.
  • கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் அடிப்படைக் கேள்விகள் தொடங்கி ஆழமான ஆய்வுகள் வரை எல்லாவற்றுக்கும் பதிலளித்த சாட்ஜிபிடியைக் கண்டு உலகம் முதலில் வியந்தது; பிறகு அதிர்ந்தது.
  • மனிதர்கள் ஒரு வாழ்நாள் முழுக்க ஈடுபடும் பணிகளைச் சில நொடிகளில் செய்துமுடிக்கும் வல்லமையை மனிதர்களே சாட்ஜிபிடி-க்கு வழங்கினர்; அது பெரும்பான்மைத் துறைகளில் மனிதர்களைப் பதிலீடு செய்யும் நிலையை உருவாக்கியது. கணினி/ திறன்பேசித் திரையில் தோன்றும் சாட்ஜிபிடி-யின் விளைவுகளைச் சமூக-பண்பாட்டுத் தளத்தில் ஆராயும் அதே வேளையில், திரைக்குப் பின்னால் நிகழ்பவற்றைச் சுற்றுச்சூழல் கண்கொண்டு பரிசீலிக்கவேண்டிய தேவை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் அவசியமாகிறது.

செயற்கை நுண்ணறிவின் பசி

  • தொலைபேசி (75 ஆண்டுகள்), செல்பேசி (16 ஆண்டுகள்), இணையம் (7 ஆண்டுகள்), டிவிட்டர் (5 ஆண்டுகள்), ஃபேஸ்புக் (4.5 ஆண்டுகள்), வாட்ஸ்ஆப் (3.5 ஆண்டுகள்), இன்ஸ்டகிராம் (2.5 ஆண்டுகள்) ஆகியவை 10 கோடிப் பயனாளர்களை எட்டுவதற்குக் குறிப்பிடத்தகுந்த காலத்தை எடுத்துக்கொண்ட நிலையில், சாட்ஜிபிடி-க்குத் தேவைப்பட்டதோ வெறும் 2 மாதங்கள்தாம். மார்ச் 2024 தரவுகளின்படி சுமார் 18 கோடிப் பயனாளர்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துகின்றனர்; ஜனவரி 2024இல் 106 கோடிப் பார்வைகளைச் சாட்ஜிபிடி தளம் பெற்றிருக்கிறது.
  • மலைக்க வைக்கும் இந்த எண்ணிக்கையிலான பயனாளர்களைக் கையாள்வதற்குச் சாட்ஜிபிடி செலவிடும் ஆற்றல் எவ்வளவு; காலநிலை மாற்றத்தின் போக்கில் அது எப்படி எதிரொலிக்கிறது? சாட்ஜிபிடியே பதிலளிக்கிறது: ‘நான் ஓபன்ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு என்பதால், மனிதர்கள் அல்லது இயந்திரங்களைப் போன்ற ஸ்தூல இருப்பு எனக்கு இல்லை; நான் வளங்களைப் பயன்படுத்துவதில்லை. எனினும் என்னைப் போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை இயக்குவதற்குத் தரவு மையங்களும் கணித்தல் (Computing) உள்கட்டமைப்புகளும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. இது கரியமில வாயு வெளியேற்றத்துக்கும்மறைமுகமாககாலநிலை மாற்றத்துக்கும் பங்களிக்கிறது.’
  • 2022ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, தரவு மையங்களில் குளிர்ச்சியைப் பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக மைக்ரோசாஃப்ட் (34%), கூகுள் (22%), மெட்டா (3%) ஆகிய தொழில்நுட்பப் பெருநிறுவனங்களின் தண்ணீர்ப் பயன்பாடு பெருமளவு உயர்ந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறை தற்போது பயணிக்கும் வேகத்தில், அது உறிஞ்சும் நீரின் அளவு 2027இல் 402 முதல் 606 கோடி பில்லியன் கியூபிப் மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது ஓர் ஆண்டில் பிரிட்டன் பயன்படுத்தும் நீரின் அளவில் பாதி.
  • செயற்கை நுண்ணறிவு நுகரும் ஆற்றலின் அளவு, 2026 இல் அதன் தற்போதைய அளவிலிருந்து இரட்டிப்பாகும் என சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் (IEA) அறிக்கைச் (ஜனவரி, 2024) சுட்டிக்காட்டுகிறது. இது ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற பேரளவிலான தொழில்மயமான நாடு ஒன்றைப் புதிதாகப் புவியில் இணைப்பதற்குச் சமமாகும்!

செயற்கை நுண்ணறிவின் இரட்டை வேடம்

  • உமிழ்வு குறைவான கட்டமைப்புகள், மேம்பட்ட காலநிலை மாதிரிகள் போன்றவற்றின் உருவாக்கத்துக்குச் செயற்கை நுண்ணறிவு ஒருபுறம் பங்களித்துவந்தாலும், மறுபுறம் ஆற்றல் நுகர்வு, கரியமில வாயு உமிழ்வு எனத் தன்னளவிலேயே அது பின்னடைவைக் கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் பயன்பாடு இத்தகைய பின்விளைவுகளைக் கொண்டுவருவது ஒருபுறம் என்றால், பயன்பாட்டுக்குப் பிறகு மின்கழிவுகளாக மாறி சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்தும் விளைவுகள் மாற்றமுடியாதவையாகும்.
  • செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றை உருவாக்குவதற்கான மனித உழைப்பு, தரவுகள், அப்பொருள் அதன் ஆயுள்காலம் முழுக்க (உருவாக்கத்திலிருந்து கழிவுக்குச் செல்லும் நிலைவரை) நுகர்ந்த ஆற்றல்/ வளங்கள் ஆகியவற்றின் உலகளாவிய தாக்கம் குறித்து கேட் கிராஃபோர்டு, விளாடன் ஜோலெர் ஆகியோர் இணைந்து எழுதியசெயற்கை நுண்ணறிவின் உடற்கூறியல்’ (2018) என்கிற ஆய்வுக் கட்டுரை [https://anatomyof.ai/index.html], சமகாலத் தொழில்நுட்பம் ஒவ்வொரு நிலையிலும் மனித உடல்களைச் சுரண்டுவதில் ஆழம்பெற்றுள்ளது என்பதைக் கண்டறிந்தது.
  • பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்படும் மின்னணுக் கருவி ஒன்று, மின்கழிவாக மாறி சுற்றுச்சூழலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அந்தக் கருவி/ தொழில்நுட்பத்தை ஒருமுறைகூடப் பயன்படுத்திராத பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேற்குலகின்டிஜிட்டல் குப்பைக் கூடையாக ஆப்ரிக்க நாடான கானாவின் அக்பாக்பிலொஷி (Agbogbloshie) மாறியது இப்படித்தான்.
  • வரலாற்றுரீதியாக மேற்குலகம்தான் காலநிலை மாற்றத்துக்கு முதன்மைப் பங்களித்திருக்கிறது; எனினும் அதன் விளைவுகளைப் பெருமளவு இன்று எதிர்கொண்டிருப்பதோ ஆசிய, ஆப்ரிக்க நாடுகள்தாம். தொழில்மயத்தின் விளைவுகள் இன்னும் எல்லாத்தரப்பினரையும் சென்றடையவில்லை.
  • ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட அதன் எதிர்விளைவுகள் எல்லாத் தரப்பினரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்கொள்வதிலும் நீடிக்கும் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வு, செயற்கை நுண்ணறிவுத் துறையிலும்டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருக்கிறது.

நம்முடைய தேர்வு

  • வளர்ச்சி என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில், செயற்கை நுண்ணறிவு என்னும் ஒருவழிப் பாதையில் மனித குலம் இப்போது நடைபயின்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி கூடாது என்பதல்ல நம்முடைய வாதம்; சமூக இயந்திரத்தின் இயக்கத்துக்குத் தொழில்நுட்பம்தான் எரிபொருள்.
  • புதைபடிவ எரிபொருள் பயன்பாடு நம்மைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இந்தப் புள்ளியில், தொழில்நுட்பம் என்னும் எரிபொருளின் பயன்பாடு - செயற்கை நுண்ணறிவு என்னும் ஒருவழிப் பாதையில் - எங்கு அழைத்துச்செல்லும் என்பது, அதை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது.
  • வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கும் பேனா இப்போது செயற்கை நுண்ணறிவின் கைகளில் இருந்தாலும், அதற்கு மை ஊற்றுவது என்னவோ மனிதர்கள்தாம். செயற்கை நுண்ணறிவிடமிருந்து பேனாவை எடுக்கப் போகிறோமா, இல்லை மைப்புட்டியை அதனிடம் கையளிக்கப் போகிறோமா?
  • செயற்கை நுண்ணறிவுத் துறை தற்போது பயணிக்கும் வேகத்தில், அது உறிஞ்சும் நீரின் அளவு 2027இல் 402 முதல் 606 கோடி பில்லியன் கியூபிப் மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது!

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories