- செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பல்வேறு துறைகளில்தடம்பதிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் - ஒருபக்கம் பலர் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், சிலர் அது மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு மிகப் பெரும் தலைவலியாக மாறக் கூடும் என்று எச்சரித்து வருவதைப் பார்க்கிறோம்.
- செயற்கை நுண்ணறிவின் மைல்கல்லாகக் கருதப்படும் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), 2022இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இந்தத் தொழில்நுட்பம் மனித மூளையை விஞ்சும் நுண்ணறிவாகவே பார்க்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில், நுண்ணறிவின் இருப்பிடமான மூளை, மனதின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் பார்ப்பது அவசியம்.
- வேறுபடும் புள்ளி: செயற்கை நுண்ணறிவால் மனித அறிவுக்கு எட்டாத செயல்பாடுகளைக் கூடச் செய்யவைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், மனித மூளைக்கே உரித்தான அனுதாப உணர்வு (Empathy), கருணை, அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டதை வைத்து சூழ்நிலைகளை அணுகும் சமயோசித புத்தி போன்றவற்றைச் செயற்கையாக உருவாக்குவது சாத்தியமில்லை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- ஏனென்றால் செயற்கை நுண்ணறிவானது, ஏற்கெனவேவலைதளங்களில் இருக்கும் கணினி நிரல்கள், தரவுகளைத் திரட்டி அவற்றை ஒருங்கிணைப்பதன் அடிப்படையிலேயே கணித்துத் தீர்வுகளை முன்வைக்கிறது; அந்த வகையில், இது மனிதமூளையின் இயற்கையான சிந்திக்கும் செயல்பாட்டி லிருந்து வித்தியாசப்படுகிறது.
- உதாரணத்துக்கு, மனநோய்க்கான அறிகுறிகளாக அரட்டைப்பெட்டியில் (Chatbot) உள்ளீடாகச் செலுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில், ஒருவரதுமனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கணிக்க முடியும். ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறாரா இல்லையா என்பதையும் எந்த விதமான மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதையும் செயற்கை நுண்ணறிவு மூலம் அவருக்குத் தெரியாமலேயே கண்டறிய முடியும்.
- குறிப்பாக, ஒருவரின் சமூக வலைதளப் பதிவுகளின் தரவுகளைக் கொண்டு அவர் மனஅழுத்தத்தில் உள்ளாரா, தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருக்கிறாரா என்பது போன்ற தகவல்களைக் கண்டறிய முடியும். மருத்துவ ஆவணத் தரவுகளின் அடிப்படையில் தனிநபரின் மருத்துவ சிகிச்சை முதல் சுகாதாரம் குறித்த தேசிய அளவிலான கொள்கை முடிவுகளை எடுப்பதுவரை செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது என்பதை மறுக்க இயலாது.
ஆபத்து அதிகம்
- நுண்ணறிவு, அறிவுத்திறன் உள்பட மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய பல செயல்பாடுகளுக்குச் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து மனிதர்கள் இருக்க நேர்ந்தால், உபயோகிக்கப் படாத உடல் உறுப்புகள் சிறுத்துப்போவதுபோல மூளைச் சுருக்கமும் ஏற்பட்டு பலவிதமான நரம்பியல், மனநலப் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இன்று புழக்கத்திலிருக்கும் திறன்பேசிகளின் பயன்பாட்டினால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் கொண்டே செயற்கை நுண்ணறிவினால் மூளை நரம்பியல், மனநலனில் ஏற்படப்போகும் எதிர்மறை விளைவுகளைப் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியும்.
- ஒருபக்கம் தற்கொலையைத் தடுக்க உதவினாலும், இன்னொரு பக்கம் சமூக விரோதிகளின் கையில் அகப்படும் செயற்கை நுண்ணறிவால் போலியான தகவல்களைப் பரப்பி, ஒரு தனி நபரைத் தற்கொலைக்குத் தூண்டுவது முதல் கும்பல் மனப்பான்மையை (Mob attack) ஏற்படுத்தி பெரும் கலவரங்களையும் ஏற்படுத்த முடியும்.
- குடும்ப நபர்களின் கைபேசி எண், பிறந்த நாள்கள் முதற்கொண்டு பக்கத்துத் தெருவுக்குச் செல்லும் வழியை அறிவதுவரை திறன்பேசிகள் இல்லாமல் செயல்பட முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம். முன் மூளையின் (Frontal lobe) செயல்பாடுகளான பேச்சாற்றல், பகுத்தறியும் திறன், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், முடிவெடுத்தல், படைப்பாற்றல்; நடுமூளையின் (Parietal lobe) செயல்பாடுகளான தொடு உணர்வு, இசை, கணிதம், போக்குவரத்து வழிகளைக் கண்டறிதல் (Navigation); கீழ்மூளையின் (Temporal lobe) செயல்பாடுகளான உணர்ச்சி வயப்படுதல், நினைவுத்திறன் போன்ற மூளையின் பெரும்பலான செயல்பாடுகளைத் திறன்பேசிக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததன் விளைவைப் பள்ளிகளிலும் மனநல மருத்துவமனைகளிலும் வெளிப்படையாகப் பார்த்து வருகிறோம்.
- இப்படியிருக்க.. இதிலும் பலமடங்கு அதிபுத்திசாலியான செயற்கை நுண்ணறிவு, மாணவர்களைக் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களாகவும், மொழியறிவு அற்றவர்களாகவும் மாற்றிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மனிதர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைத்து மனசாட்சியற்ற, குற்றவுணர்வற்ற சமூக விரோதிகளாகவும் மாற்ற வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி யாளர்களில் ஒருசாரார் கூறுகின்றனர்.
கவலை தரும் போக்கு
- கரோனா பெருந்தொற்றுக்குப் பின், பள்ளி மாணவர்களின் கற்றல்திறன், கவனம், உணர்ச்சிகளை அடக்கும் திறன் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் திறன்பேசிகளின் அதீதப் பயன்பாடுதான். சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு அரட்டைப்பெட்டிகளின் பயன்பாடு மாணவர்களின் வாசித்தல், புரிந்துகொள்ளல், எழுதுதல் போன்ற திறன்களைப் பாதிப்பதுடன் ஆசிரியர்-மாணவர் உறவையும் பாதிக்கும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்பதே பலரின் கவலையாக இருக்கிறது.
- ஆனால், ‘நுண்ணறிவைப் பயன்படுத்த இயலாத மனித ஆற்றலை ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு உருவாக்க ஆரம்பித்துவிட்டது’ என்பது இன்னும் பரவலானகவனத்தைப் பெறவில்லை. எனினும், உள்ளீடு செய்யப் படும் தரவுகளின் அடிப்படையிலேயே செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்குச் சேவையாற்ற முடியும். அந்த வகையில், அச்சுப் புத்தகங்களில் பதிவாகியிருக்கும் மனிதகுலத்தின் அறிவு அதற்கு ஆதாரமாகிறது. தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்துப் பகுத்தறிவதற்கான சாத்தியத்துடன் இயங்கும் அச்சு ஊடகங்கள்வழி செயற்கை நுண்ணறிவின் சிக்கல்களை நாம் எதிர்கொள்ள முடியும்.
- மன அமைதிக்காகப் பெரும்பாலானோர் கடவுளைத்தான் தேடுவார்கள். அந்தக் கடவுளைத் தேடுவதன் மூலம் கிடைக்கும் மன அமைதியை அல்லது கடவுளின் தன்மையையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருப்பது இதன் வீரியத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
- இதனால்தான் உலகளாவிய மதத் தலைவர்கள் சமீபத்தில் வாடிகனில் கூடி இதைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவால் மனிதாபிமானத்தைப் பிரதிபலிக்க முடியாது என்றும் அதனால் இது அகதிகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் என்றும் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வரைமுறைப்படுத்துதல் அவசியம்:
- ஆல்ஃபிரெட் நோபல், ‘டைனமைட்’ வெடிமருந்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும்போது அது மனித குலத்துக்குப் பேராபத்தை விளைவிக்கப்போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. ஆனால், செயற்கை நுண்ணறிவின் ஞானத் தந்தையான ஜெஃப்ரி ஹின்டன், இதை சீக்கிரமே உணர்ந்துவிட்டதை அவரது அறிக்கை தெரிவிக்கிறது.
- திறன்பேசிகளின் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கும், முறைகேடான பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் மெல்லியதாக இருப்பதால்தான் பள்ளிக்கூடம் முதல் படுக்கையறைவரை ஏற்பட்டுவரும் ஆபத்துகளைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகிறோம்; இது செயற்கை நுண்ணறிவுக்கும் பொருந்தும்.
- செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வரைமுறைப் படுத்தாவிட்டால் மனிதகுலமும் மனித மனங்களும் பேராபத்தைச் சந்திக்கும் என உறுதியாகச் சொல்லலாம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் நிறுவனங்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் என அனைவரும் இணைந்து தான் இந்தத் தொழில்நுட்பப் பூனைக்கு மணி கட்ட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2023)