TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு: சுரண்டப்படும் தகவல் உழைப்பாளிகள்

June 21 , 2023 517 days 367 0
  • செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்ஜிபிடி, டால்-இ, மிட்-ஜர்னி போன்ற பல மென்பொருள்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதை அறிமுகப்படுத்திய நிறுவனங்கள் மக்களிடமிருந்து மாதந்தோறும் கட்டணம் வசூலித்து லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் இயங்க, அதற்குப் பின்னால் பல ஆயிரம் பணியாளர்களின் உழைப்பு இருக்கிறது. அவர்கள் ‘தகவல் குறிப்பாளர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள், தகவல் குறிப்பாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் உருவாக்கப்படுகின்றன என்பது துயரமான உண்மை.

எப்படி இயங்குகிறது?

  • செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் தாமாக இயங்குவதில்லை. சாட்ஜிபிடி-யிடம் ஒரு கேள்வி கேட்டதும் அதற்குச் சரியான பதிலைக் கொடுக்கிறது. இப்படி சரியான பதிலைக் கொடுக்கப் பல லட்சம் தகவல்கள், செய்திகள், குறிப்புகள் கொடுத்து அதைப் பயிற்றுவிக்க வேண்டும். சில குறிப்புகளைக் கொடுத்து செயற்கை நுண்ணறிவைப் படம் வரையப் பணித்தால், அது ஒரு புதிய படத்தை நொடிகளில் வரைந்து கொடுக்கும். இந்தச் செயல்பாட்டுக்குப் பின்னால் இருப்பது ‘லேபிள்’ என்கிற வழிமுறை. அதாவது, அந்தப் படம், அதன் வண்ணங்கள், வடிவங்கள் ஆகியவை பற்றிய குறிப்புகள் அனைத்தும் மனிதர்களால் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் - அதாவது, ‘லேபிள்’ செய்யப்பட்டிருக்கும். ‘லேபிள்’ செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள்தான் ‘தகவல் குறிப்பாளர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள்.
  • செயற்கை நுண்ணறிவு எல்லா நேரங்களிலும் சரியான விடையை வழங்கிவிடாது. கற்றலில் இருந்து செயற்கை நுண்ணறிவு வழங்கும் விடைகளின் துல்லியத்தைப் பல நேரம் மனிதர்கள் சரிபார்த்து உறுதிசெய்வதில் இருந்தே மென்பொருள்கள் தங்கள் கற்றலை மேம்படுத்திக்கொள்கின்றன. இந்த வேலையைச் செய்வதும் ‘தகவல் குறிப்பாளர்கள்’தான்.

மனிதர்களின் முழு உதவி:

  • செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் ஆபத்தான, சட்டத்துக்குப் புறம்பான தகவலைக் கொடுத்தால், அதை நீக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வெடிகுண்டை எப்படி உருவாக்க வேண்டும் என சாட்ஜிபிடி-யிடம் ஒருவர் கேட்டால், அது எந்தத் தகவலையும் அவருக்கு வழங்கக் கூடாது. சாட்ஜிபிடி மாதிரியான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயிற்றுவிக்க, பல நேரம் இணையத்தில் இருந்துதான் தகவல்களை எடுத்துக் கொடுப்பார்கள். இணையத்தில் ‘வெடிகுண்டு செய்வது எப்படி’ என்கிற தகவல் இருந்து, அதைச் சாட்ஜிபிடி-யின் தரவுத் தளத்தில் சேர்த்துவிட்டால், ஒருவேளை யாரேனும் வெடிகுண்டு செய்வதைப் பற்றிக் கேட்டால், சாட்ஜிபிடி பதிலளித்துவிடும். இது சமூகத்துக்கு ஆபத்து; சட்டத்துக்குப் புறம்பானதும்கூட. அதனால், இந்த மாதிரியான ஆபத்தான பதில்கள் என்றால், அதை மனிதர்கள் பயிற்றுவிக்கும்போதே ஆபத்துக் குறிப்புகளைக் கொடுத்து இந்தப் பதில்களை நீக்கிவிடுவார்கள்.
  • இந்தப் பணிகளைச் செய்ய இன்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கப் படவில்லை. தகவல் சரிபார்ப்பில் மனிதர்களின் முழு உதவியுடன்தான் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் சரியாக வேலை செய்கின்றன என்பது கவனத்துக்குரியது.

குறைந்த கூலி:

  • செயற்கை நுண்ணறிவு பல புதியவகைப் பணிகளை உருவாக்கியிருப்பது உண்மையில் மகிழ்ச்சிக்குரியது தான். ஆனால், பல நிறுவனங்கள் இந்தப் பணியாளர்களைக் குறைவான ஊதியம் கொடுத்து சுரண்டுவதை இயல்பானதாக ஆக்கிவிட்டன. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ள படித்தவர்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிகுந்த அழுத்தம் தரக்கூடிய இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • பெரும்பாலும் இந்த வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்துவிட முடியும். இதனால் வீட்டில் இருக்கும் பெண்கள், படிக்கும் மாணவர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள் ஆகியோர் இந்த வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேர வேலைக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 முதல் ரூ.150 வரை கொடுப்பார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 4 முதல் 8 மணி நேரம் வரை பணிசெய்ய வேண்டும். வேலை நேரத்தில் இந்தப் பணிகளை மட்டும்தான் செய்கிறாரா என்பதை உறுதிப்படுத்தும் மென்பொருள்களை பணியாளரின் கணினியில் நிறுவனங்கள் பொருத்தியிருக்கும். நொடிப்பொழுது வீணாகிவிட்டாலும், அதை வைத்து ஊதியத்தில் சில நிமிடங்களைக் கழித்துவிடுவார்கள். ஒருவேளை ஒரு மணி நேரம் மட்டும் வேலைசெய்வதாக இருந்தாலும், இருக்கையில் கட்டிவைத்ததைப் போல் தலையைக்கூட அசைக்காமல் வேலை செய்ய வேண்டும்.
  • கூகுள், ஃபேஸ்புக், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட், அமேசான், டிக்டாக் எனப் பல நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயிற்றுவிக்க மிகக் குறைந்த கூலியில் உலகம் முழுக்கப் பல்லாயிரம் பேரை இப்படித்தான் சுரண்டுகின்றன. இந்தப் பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்குப் பல்வேறு உடலியல் பிரச்சினைகளும் உளவியல் சிக்கல்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தேவை ஒழுங்குமுறை:

  • செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளைப் பற்றி ஆய்வு செய்துவரும் திமினிட் கெபுரு போன்ற அறிஞர்கள், இந்தச் சுரண்டலை எதிர்த்து வலுவாகக் குரல் எழுப்புகிறார்கள்; பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் கேள்விகளையும் எழுப்புகிறார்கள். செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களையும் மென்பொருள்களையும் கடுமையான சட்ட வரையறைக்குள் நெறிப்படுத்த வேண்டும் என்பதுதான் பல ஆய்வறிஞர்களின் கோரிக்கை. ஒருபக்கம் நெறிப்படுத்துவதுடன் மறுபக்கம் இதற்காக உழைப்பில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்குச் சரியான ஊதியம் வழங்குவது அவர்களின் உடல்-உளவியல் நல மேம்பாடு சார்ந்த திட்டங்களை வகுப்பது மிகவும் முக்கியம் என்கிறார்கள்.
  • ‘‘செயற்கை நுண்ணறிவு என்னும் தொழில்நுட்பத்தில் சிக்கல் இல்லை; அதைப் பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது. முறையாகப் பயன்படுத்தினால் மனிதகுலத்துக்கு அதனால் பல நன்மைகள் விளையும். ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருக்கும் பெருநிறுவனங்கள்தான் மிகப்பெரும் ஆபத்து” என்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் நவோமி க்ளெய்ன்.
  • செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயன்படுத்தப் பல்வேறு மாதக் கட்டணத் திட்டங்களை அறிவித்திருக்கும் இந்த நிறுவனங்கள், அதற்கு முதுகெலும்பாக உழைப்பைத் தரும் பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுக்க விரும்புவதில்லை. ஒருபக்கம் பயனாளர்களை நெருக்கிக் கட்டணத்தை வசூலிப்பதிலும் மறுபக்கம் தம் பணியாளர்களை நெருக்கி உழைப்பைச் சுரண்டுவதிலும் இந்நிறுவனங்களுக்கு எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாடுகள் இந்தச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை முறைப்படுத்தச் சட்டம் இயற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த நிறுவனங்கள் உழைப்பைச் சுரண்டும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமானது. இந்தச் செயற்கை நுண்ணறிவுப் பணிகளைப் பற்றிய நெறிமுறைகளையும் சட்டப் பாதுகாப்பையும் இந்தியா உருவாக்கியே தீர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தி இந்து (21  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories