TNPSC Thervupettagam

செலாவணி, இருப்பை அதிகரிக்கும் சேமிப்புகள்

February 22 , 2024 186 days 262 0
  • சங்ககால ஒளவையார் தமது கொன்றைவேந்தனில் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று ஆணையிட்டார். அதன்படி, முதலில் மேல்படிப்புக்காகவோ, வேலைக்காகவோ இடம் பெயர்ந்த இந்தியர்களும், அந்நிய நாடுகளில் குடி உரிமை பெற்று அங்கு நிலையாகத் தங்கிவிட்ட இந்திய வம்சாவளியினர் என்றறியப்படும் இந்தியர்களும் ஆண்டுதோறும் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கும் பணம் இந்திய நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பினை 2023-ஆம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியுள்ளது.
  • மொத்த அந்நிய செலவாணிக் கையிருப்புக்கு ஏறத்தாழ 20% பங்களிப்பினை வழங்கியுள்ளதன் மூலம் ஆண்டுக்குரிய தொகை அனுப்புகைகள் 2023-இல் மிக அதிகபட்சமான 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகக் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு சுருக்கக் குறிப்பு 2023 தொடர்பான உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மேலும் தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தினைப் பிடித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றில் பணவீக்கம் குறைந்து வருகிறது. தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் திறன் சார்ந்த உழைக்கும் வர்க்கத்தினரின் தேவை அந்த நாடுகளில் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்பின் அளவு மொத்த அந்நிய செலாவணி அனுப்புகையில் 36% ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவர்களால் அனுப்பப்படும் சேமிப்பு 18%.
  • 2008-ஆம் ஆண்டு முதல், பொருளாதார வளர்ச்சிக் காலங்களிலும் மோசமான தளர்ச்சிக் காலகட்டங்களிலும் இன்னும் சொல்லப்போனால் கொவைட் 19 நோய்தொற்று பேரழிவு பெரும் பரவலுக்கு முந்தையதும், பிந்தையதுமான காலங்களிலும் தரவரிசைப்பட்டியலில், இந்தியா ஒவ்வொரு வருடமும் முதல் இடத்தினைப் பெற்று வந்திருக்கிறது.
  • உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலை: இந்தியாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பு அளவில், 2023-ஆம் ஆண்டு வழக்கமான, கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டது. இந்த நிலை, 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சற்றேக்குறைய 586 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் நிலைநின்றது. 2023-இன் செப்டம்பர் - அக்டோபர் காலத்தில், குறுகிய முதலீட்டாளர்களால் 5 பில்லியன் அமெரிக்க டாலர் திரும்பப் பெற்றதன் காரணமாக அந்நிய செலாவணிக் கையிருப்பு குறைந்தது.
  • அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் பணவியல் இறுக்கமான கொள்கையினைத் தளர்த்திடும் எனவும், உள்நாட்டு மீட்புக்கு உதவிபுரிவதற்கான வட்டி விகிதத்தினைக் குறைக்கும் எனவும் கருதிவரும் சந்தை எதிர்பார்ப்புகளிலிருந்து நிச்சயமற்ற தன்மைகள் உருவாகி வந்தன.
  • 2022 மார்ச் மாத உக்ரைன் - ரஷியா மோதலினால் கச்சா எண்ணெய், கோதுமை, நிலக்கரி ஆகிய வினியோகத் தொகுதிகளில் (சப்ளை செயின்) ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக, 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நுகர்வோர் விலை நிலை 9.1% ஆக உயர்ந்தது. அடுத்த 13 மாதங்களில் அதிக வட்டியுடன் கூடிய, விலை-எதிர்ப்பு நிலை நடவடிக்கைகள் செப்டம்பர் 2023- இல் விலைவாசி 3% ஆக வீழ்ச்சியடைய வழிவகுத்தன.
  • அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஓர் எளிதான பணக்கொள்கையைத் தொடங்கிடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகள் நிலவிவந்தன. இந்திய ரிசர்வ் வங்கியும் 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் நுகர்வோர் விலைவாசி உயர்வை 5%-ஆகக் குறைத்து வெற்றி கண்டது. மேலும், வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக, 6.50% நிலைபெற வைக்கப்பட்டிருக்கிறது.
  • 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் அதிக நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கியது. ஊக வணிகர்கள் தங்கள் குறுகிய கால இந்திய முதலீடுகளை விற்கத் தொடங்கினார்கள். அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்வதும் அதிகரிப்பதும் அவர்களால்தான். தாராளமயமாக்கல் கொள்கைகளை இருபது வருடங்களாக பின்பற்றி வந்த பிறகு திடீரென்று மூலதன முதலீடுகளின் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாது.
  • சரக்குகள் மற்றும் சேவைகளின் அதிக ஏற்றுமதி, பன்னாட்டுப் பயணிகள் சுற்றுலா வருவாய் மற்றும் "இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) உள்நாட்டுத் தயாரிப்பு முயற்சிகளை முடுக்கிவிடுவது ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்துவதன் மூலம்தான் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்களுக்குத் தீர்வுகாண முடியும்.
  • அமெரிக்க பெடரல் ரிசர்வ், இறுதியாக டிசம்பர் 13 அன்று, 5% வட்டியை இனி குறைக்கப் போவதில்லை என்றும் அது 2024-இன் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் முடிவு எடுத்தது. இது உலகச் சந்தைகளை அதிர வைத்தது. இந்தியாவிற்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது.
  • இந்திய ரூபாயின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு இதுவரையில்லாத அளவிற்கு ரூ. 83.40 ஆகச் சரிந்து போனது. ஆயினும் அன்று அந்நிய செலாவணி 615 பில்லியனாக உயர்வு அடைந்தது. இவையனைத்தும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளின் வெளிப்பாடுகள்.
  • அந்நிய செலாவணியின் (ஆக்கக்) கூறுகள்: அந்நிய செலாவணிக் கையிருப்பு என்பது சர்வதேச வர்த்தகத்தினின்று வெறும் நிகர ஆதாயங்கள் உருவாக்கித் தரும் வருவாய்களை உள்ளடக்குவதாகும். இது, பொருள்களின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளுக்கு இடையே உள்ள நேர்மறையான வேறுபாடாக வரையறுக்கப்படுகிறது.
  • யாதொரு வகையான கனிம வளங்களும் முக்கியத்துவம் வாய்ந்த ஏற்றுமதிகளும் இல்லாத, அத்தியாவசியப் பொருள்களுக்கும் உணவிற்கும், எரிபொருளுக்கும் மிகவும் பிறரைச் சார்ந்தே இருக்கவேண்டியுள்ள நாடுகள் தகவல் தொழில்நுட்பம் நிதிச்சேவைகள் அல்லது சுற்றுலாவை உள்ளடக்கிய சேவைத் துறையினைத்தான் சார்ந்திருக்க வேண்டும்.
  • அந்நிய நாட்டு நேரடி முதலீடுகளில் பெரும்பாலானவை பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிலிருந்து வருவனவாகும். மிக மலிவாகக் கிடைக்கப் பெறும் உழைப்பினையும் உற்பத்திப் பொருளையும் உள்நாட்டுச் சந்தை, வெளிநாட்டுக்கான ஏற்றுமதிச் சந்தை ஆகிய இரண்டிற்காகவும் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதில் நீண்டகால அந்நிய நாட்டு நேரடி முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
  • கவர்ச்சிகரமான சலுகைகள், வரிக் குறைப்பு மற்றும் தாராளமான வரி விலக்கு மற்றும் பிற சலுகைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
  • புலம்பெயர்ந்த இந்தியர்களின் பணம் அனுப்புகை அந்நிய செலாவணியில் 20% ஆகும். அவர்கள் யாவரும் தங்களது சொந்த நாடுகளில் விடப்பட்டுள்ள தங்கள் குடும்பங்களுக்கு, வழக்கமானதோர் அடிப்படையில், குடும்பத்திலுள்ளோரின் பராமரிப்புக்கான வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பணம் அனுப்பி வருகின்றனர்.
  • கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் அதிகப் பயனாளிகளைக் கொண்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட, உள்நாட்டினை நோக்கி வரும் பணம் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, வெளிநாட்டிலிருந்து பெறப்படும் பணத்தின் வாயிலாகப் பயன்பெற்று வரும் குடும்பங்களில் வறுமை குறைந்து வருகின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
  • இந்தியத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் அது சீரானது. மேற்கத்திய முன்னேறிய நாடுகளில் குடியேறிய இந்தியர்களால் அனுப்பப்படும் தொகைகள் பேரழிவுக் காலங்களில் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகின்றன. இவ்வகையான நிதி அனுப்புகைகள் மூலம் அவர்கள் செய்துள்ள உதவி, கைம்மாறு ஏதும் கருதாமல் மனிதாபிமான அடிப்படை ஒன்றின் கீழ் மட்டுமே செய்யப்பட்டதாகும். அவை, பன்னாட்டுப் பணம் சார்ந்த நிதியத்தால், கைம்மாறு கருதாத பணமாற்றங்கள் என அழைக்கப்பெற்றன.
  • முன்னேறிய நாடுகளில், பொருளாதார மந்தநிலையிலுங்கூட, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வேலை தேடிக் கொண்டிருந்தனர். அப்படி இருந்தும், தங்களுக்குக் கிடைத்து வந்த வேலையின்மை நிவாரணத் தொகையில் இருந்து தாங்கள் சேமித்த பணத்தை, தங்களது ஆதரவினைத் தொடர்ந்து வழங்கிட உழன்று கொண்டிருந்தனர்.
  • இக்கட்டான காலகட்டங்களில், சொந்த நாட்டில் விடப்பட்டிருந்த குடும்பங்கள் தவியாய்த் தவித்தபோது, (எடுத்துக்காட்டாக, கேரளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும்) செயல் மறவர்களாய், இந்தியப் புலம்பெயர்ந்தோர் நீண்டகால மறுகட்டமைப்புப் பணிகளுக்கான உடனடி நிவாரணமாக அமைந்திடும் வகையில் நிதியுதவி செய்ததனைக் காண முடிந்தது.

நன்றி: தினமணி (22 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories