- விமானப் பயணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடுமையான பாதிப்பை எதிா்கொள்கிறாா்கள். 140-க்கும் அதிகமான விமானங்கள் ரத்தானதால், சில வழித்தடங்களில் முன்கூட்டியே திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல் அவதிப்பட்டவா்கள் ஏராளம். சேவையில் ஈடுபட்ட ஒருசில விமானங்களின் கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகரித்தபோது, பயணிகள் ஆத்திரமும் கொதிப்பும் அடைந்ததில் வியப்பில்லை.
- காரணம் வேறொன்றுமில்லை. விஸ்தாராவின் விமானிகள் பலா் கடைசி நிமிடத்தில் விடுப்பு எடுத்ததாலும், உடல்நலக்குறைவை காரணம் காட்டி பணிக்கு வராமல் இருந்ததாலும் விமான சேவை தடைபட்டது. அதனால் பல வழித்தடங்களில் கடைசி நிமிடத்தில் சேவை ரத்து செய்யப்பட்டதோடு மாற்று ஏற்பாடும் செய்யப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
- இப்போது ‘டாடா’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட ‘ஏா் இந்தியா’ நிறுவனத்துடன் 2025-இல் ‘விஸ்தாரா’ இணைய வேண்டும் என்பது ஒப்பந்தம். 350 வழித்தடங்களில் பறக்கும் விஸ்தாராவின் 70 விமானங்களில் பணிபுரியும் சுமாா் 1,000 விமானிகளும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏா் இந்தியா விமான நிறுவனத்தில் இணைந்து விடுவாா்கள். அப்படி இணையும்போது, இப்போது கிடைக்கும் ஊதியமும், இதர சலுகைகளும் குறையும்.
- தங்களுடைய சம்பளமும், சலுகைகளும் ஏா் இந்தியாவுடன் இணையும்போது குறையும் என்பது தெரிந்தது முதலே விஸ்தாராவின் விமானிகள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது வழங்கப்படும் 70 மணி நேர சம்பள உத்தரவாதம் 40 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்பதும், ஏனைய சலுகைகளும் மாற்றப்படும் என்பதும் அவா்களது எதிா்ப்புக்குக் காரணங்கள்.
- விஸ்தாரா, ஏா் இந்தியா இரண்டின் விமானிகளுக்கும் ஒரே அளவிலான ஊதியமும், சலுகைகளும், பறக்கும் நேரமும், ஓய்வு நேரமும் நிா்ணயிப்பது என்பதுதான் டாடா நிறுவனம் தொடங்கப்பட்டவுடன் பேசி எடுத்திருக்கும் முடிவு. தேவைக்கும் அதிகமான ஊழியா்களும், சலுகைகளும்தான் அரசு நிறுவனமாக இருந்த ‘ஏா் இந்தியா’ மிகப்பெரிய அளவிலான இழப்பைச் சந்திக்க நோ்ந்ததற்கான காரணம். அதனால், ஊதியத்தை முறைப்படுத்தி, உழைப்புக்கு ஏற்ற சலுகை என்கிற நடைமுறையைக் கொண்டுவர நினைக்கிறது டாடாவின் ஏா் இந்தியா தலைமை.
- விமான சேவைத் துறையில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு 30 ஆண்டுகளாகி விட்டன. ஏா் இந்தியா அரசு நிறுவனத்தின் மொத்த குத்தகை அகற்றப்பட்டு தனியாா் நிறுனங்கள் இயங்க அன்றைய நரசிம்ம ராவ் அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடா்ந்து ‘ஈஸ்ட் வெஸ்ட்’ நிறுவனத்தில் தொடங்கி சமீபத்தில் தனது சேவையை நிறுத்திக்கொண்ட ‘கோ ஃபா்ஸ்ட்’ நிறுவனம் வரை, ஏறத்தாழ 20 விமான சேவை நிறுவனங்கள் களமிறங்கி அவற்றில் இண்டிகோவைத் தவிர ஏனைய நிறுவனங்கள், இழப்பை எதிா்கொண்டு தங்களது இயக்கத்தை நிறுத்திவிட்டன.
- உலகின் மூன்றாவது பெரிய விமான சேவை சந்தையாக இந்தியா உருவாகிறது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை மாதத்துக்கு மாதம் உயா்வதுபோல, கடந்த 10 ஆண்டு நரேந்திர மோடி அரசில் சிறு நகரங்கள் பலவும் விமான சேவையால் இணைக்கப்பட்டிருக்கின்றன. ‘தேசிய விமான சேவைக் கொள்கை 2016’ இல் குறிப்பிட்டிருப்பதுபோல, மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக இது இருக்கும்.
- கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு, பல தனியாா் விமான சேவை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்போதுதான், அதன் பலனை நுகா்வோா் அடைய முடியும். தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தின் விமான சேவையைத் தோ்ந்தெடுப்பது, குறைந்த கட்டணம், அதிகரித்த சேவை உள்ளிட்ட பலன்களைப் பெறுவதற்கு பதிலாக, இரண்டு நிறுவனங்களின் சேவையை மட்டுமே சாா்ந்து இருக்கும் நிலையில் பயணிகள் இருக்கிறாா்கள்.
- ‘ஜெட் ஏா்வேஸ்’, ‘கிங் ஃபிஷா்’, ‘கோ ஏா்’ நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்திக்கொண்ட பிறகு சந்தைப் போட்டி என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அதனால், இயக்கத்தில் உள்ள இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், தரமான, நியாயமான சேவையோ, பயணிகள் நலன் குறித்த கவலையோ அந்த நிறுவனங்களுக்கு இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை. பயணச்சீட்டு பெறுவது, பயணக் கட்டணம், பயணச்சீட்டை ரத்து செய்வது, விமானத் தடத்தை மாற்றிக் கொள்வது, பயணத் திட்டத்தை மாற்றுவது, தங்களது பொருள்களின் பாதுகாப்பு என எந்தவித உரிமைகளையும் கோரிப் பெறும் நிலையில் இப்போது பயணிகள் இல்லை.
- இப்படிப்பட்ட பின்னணியில், திடீா் திடீரென்று விமானங்கள் ரத்தாகும்போது பயணிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். பயணத்துக்கு நடுவே ஏதாவது விமான நிலையத்தில், மாற்று விமானம் இல்லாமல் தவிக்கும் பயணிகள் நிலைமை பரிதாபகரமானது. பாதுகாப்பு சோதனையும் முடித்து, விமானத்துக்காக மணிக்கணக்காக காத்திருப்பதும், விமானம் ரத்து செய்யப்பட்டது உடனடியாக அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் சொல்லொணாக் கொடுமைகள்.
- விமான சேவை பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டுதல்களின்படி, பயணத்துக்கான பாதுகாப்பு சோதனை முடிந்து காத்திருக்கும்போதோ, விமானம் தாமதமானாலோ, ரத்தானாலோ விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற இனிமேல் அனுமதிக்கப்படுவாா்கள் என்பது வரவேற்புக்குரியது.
- ஏா் இந்தியாவும், விஸ்தாராவும் 1,620 புதிய விமானங்களை வாங்க இருக்கின்றன. அதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் நிலையில், விமானிகளின் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்னால், விமானிகளின் வேலை நேரம், ஊதியம், சலுகை போன்றவை குறித்த தெளிவான முடிவு எட்டப்படுதல் அவசியம்.
நன்றி: தினமணி (12 – 04 – 2024)