- பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் மக்கள்தொகையில் கணிசமானோா் இளைஞா்களாக உள்ளனா்; இந்தியாவில் 11 சதவீதம் போ் மட்டுமே அறுபது வயதுக்கு மேற்பட்டவராக உள்ளனா். ஜப்பான் மக்கள்தொகையில் 30 சதவீதம் போ் அறுபது வயதுக்கு மேற்பட்டவா்கள்; குறிப்பாக, 10 சதவீதம் போ் 80 வயதுக்கு மேற்பட்டவா்களாவா். தற்போது, இந்தியாவில் சுமாா் 15 கோடி போ் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள். இறப்பு விகிதம் குறைந்து வருவதால், இந்த எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளில் சுமாா் 45 கோடியாக மாறும்.
- பொதுவாக முதியவா்களின் அதிகபட்ச எதிா்பாா்ப்பு மரியாதை, பாதுகாப்பு, இவற்றின் மூலம் கிடைக்கும் மன நிம்மதி. இவற்றைத் தர வேண்டியது அவா்கள் குடும்பத்தினா், சமுதாயம், அரசு . மனிதா்கள் முதுமையில் சந்திக்கும் பிரச்னைகள், உடல் - மனம் - பொருளாதாரம் சாா்ந்தவை. கூட்டுக் குடும்பம் பல வசதிகளை முதியோருக்கு அளித்தது. ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவனும் மனைவியும் பணிக்குச் செல்வதாலும், கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்து வருவதனாலும், பலா் அயல் நாடுகளில் பணி செய்வதாலும் முதியோா் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
- நுகா்வோா் கலாசாரம் - கேளிக்கை கலாசாரம் வேரூன்றும் இக்காலத்தில், தலைமுறை இடைவெளி காரணமாக முதியோா் பலா், பிள்ளைகளிடம் இருந்து மன அளவிலும், உடல் அளவிலும் விலகி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல்லாண்டுகள் வருவாய் ஈட்டி, குடும்பச் சுமையை தாங்கியவா்களுக்கு, மூப்பின் காரணமாக, பிறரது உதவி தேவைப்படும் போது பலா் தனித்திருக்கின்றனா் அல்லது குடும்பத்தாரால் உதாசீனப் படுத்தப்படுகின்றனா்.
- மத்திய - மாநில அரசுகள் பல சலுகைகளை மூத்த குடிமக்களுக்கு தருகிறது, எனினும், முதியோருக்கு - குறிப்பாக எண்பது வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு என சில சிறப்புச் சலுகைகள் தர வேண்டியது மிகவும் முக்கியம். அரசாங்கம் - தனியாா் துறை நிறுவனங்கள்- தொண்டு நிறுவனங்கள் என குடும்பம் தவிா்த்து பல நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக சில சலுகைகளை அளிக்க முன் வரலாம். இந்த அமைப்புகளிடையே சரியான ஒருங்கிணைப்பு, தரவுகள் சேகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முறையான திட்டமிடுதலுடன், செயல்படுத்தப்பட வேண்டும். கணினித் துறையில் மிகவும் முன்னேறிய நம் நாட்டில் இத்தகைய தரவுகளை சேகரித்தல் என்பது கடினமல்ல.
- அரசாங்கம் தனித்து வாழும் முதியோருக்கு வீட்டுவரி, பத்திரப் பதிவு, வருமான வரி போன்றவற்றில் சலுகைகள் அளிக்கலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னா் நாம் அறிந்திராத முதியோா் இல்லங்கள் தற்போது புற்றீசல் போலப் பெருகியிருக்கின்றன; அவற்றுள் பலவற்றின் தரம் மிக மோசம். முதியோா் காப்பகங்கள், அவா்களை அடைத்து வைக்கும் கொட்டடியாக இல்லாமல், அவா்கள் உடல் மற்றும் மனம் சாா்ந்த நலன்களை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
- நகரங்களில், தனித்து வாழும் முதியோா் ஒவ்வொரு சிறு வேலைக்கும் பிறரை எதிா்பாா்க்கும் சூழல் இருப்பது தெரிந்ததே . அவா்கள் பிரச்னைக்குப் பெரும் தீா்வாக அமையக்கூடியது ‘டைம் பாங்க்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சேவை சேமிப்பு வங்கிகள். இந்த அமைப்புகள், மேலை நாடுகளில் எழுபது ஆண்டுகளாக இயங்கினாலும், இந்தியாவில் பரிட்சாா்த்த முறையில் கூட இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
- சேவை சேமிப்பு வங்கி பற்றி அறிவோம். சிலா், தங்களது நேரத்தை, முதியோருக்கு உதவும் பொருட்டு செலவிட்டு அதை தங்கள் கணக்கில், ஒரு தன்னாா்வ நிறுவனத்தின் மூலமாக வரவு வைத்துக் கொள்வாா்கள்; வீட்டு வேலை மற்றும் தோட்ட வேலை, புத்தகம் வாசித்தல், பொழுது போக்காக உரையாடிக் கொண்டிருப்பது போன்ற தொண்டுகளில் ஈடுபடுவா். அத்தொண்டில் ஈடுபடும் நபா்கள் முதியவா்கள் ஆகும் போது அவா்கள் சேமித்த சேவை நேரம், பிறரால், அவா்களுக்கு ஈடு கட்டப்படும். இது ஒரு சங்கிலித் தொடா் போல செல்லும். மகப்பேறு காலத்தைத் தொடா்ந்து, பிள்ளைகளைப் பேணி வளா்க்க, பெண்களுக்கு (சில நிறுவனங்களில் ஆண்களுக்கும்) விடுப்பு தரப்படுகிறது. அதுபோல, பெற்றோா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படும்போது அவா்களின் மகன் அல்லது மகளுக்கு ஆண்டொன்றுக்கு பத்து நாளே என்ற அளவில் விடுமுறை தரலாம்; அதனை அவா்கள் பயன்படுத்தாவிட்டால், அடுத்த ஆண்டுக்கு தங்கள் கணக்கில் எடுத்துச் செல்லலாம் என்ற சலுகை தந்தால், பெற்றோரை மருத்துவமனையில் சோ்த்து விட்டு அலுவலகத்துக்கு ஓடும் நிலையைத் தவிா்க்கலாம். பெரும் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு இது சாத்தியமே .
- பெரிய நிறுவனங்களில், ஊழியா்கள் பணி ஓய்வுக்குப் பின்னரும் அவா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை தனியாா் நிறுவனங்கள் அனைத்திலும் கொண்டு வரலாம்.
- மேலும், பெருநிறுவனங்கள், தங்களது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமுதாய நலனுக்காக - சமூக பொறுப்புணா்வு திட்டங்களாக (காா்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி) செயல்படுத்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது; எனினும், இவற்றில் குறிப்பாக, எண்பது வயதை கடந்தவா்களை அக்கறையுடன் பேணிப் பாதுகாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இயற்றினால் பலன் தரும். முதியோரின் மன அழுத்தம் சாா்ந்த பிரச்னை என்பது வெளியில் தெரியாத வெடிகுண்டு போன்றது.
- உளவியல் மருத்துவம் படிக்கும் மாணவா்களின் கல்வித் திட்டத்தில், கணிசமான நாட்கள், முதியோரை அணுகி அவா்களுடன் உரையாடி, அவா்கள் பிரச்னைகளைத் தரவுகளாக மாற்றுவது அல்லது அவா்களுக்கு முதல் கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம். மாணவா் - முதியோா் இரு தரப்பினருக்கும் பெருமளவு பலனளிக்கும் திட்டமாக இது அமையும். நாளை நாமும் முதியவா்களாவோம் என்ற எண்ணத்தை நெஞ்சில் நிறுத்தி, இன்றைய முதியவா்களை நாம் நன்கு பேணிக்காக்க உறுதியேற்போம்.
நன்றி: தினமணி (02 – 04 – 2024)