இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மொத்த நீரில், ஏறக்குறைய 80% விவசாயத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ உணவுப் பயிர் உற்பத்தி செய்வதற்கு 2-3 மடங்கு தண்ணீரை அதிகமாக இந்தியா பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சொட்டுநீர்ப் பாசன முறையின் மூலமாகக் குறைந்த நீரைப் பயன்படுத்தி நல்ல லாபம் தரக்கூடிய வகையில் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்ய முடியும் என ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள பழங்கால நீர்ப் பாசன முறைப்படி திறந்த வாய்க்கால் மூலமாக நீரை எடுத்துச் சென்று பயிருக்குக் கொடுப்பதால், அதிக அளவிலான நீர் வாய்க்கால் வழியிலும் மற்றும் ஆவியாதல் மூலமாகவும் வீணாக்கப்படுகிறது. ஆனால், சொட்டுநீர்ப் பாசன முறையானது நீரைப் பயிரின் வேர்ப் பகுதிக்குச் சிறிய குழாய் மூலமாக நேரடியாகக் கொடுப்பதால் நீர் விரயம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
ஒரு துளியில் அதிக விளைச்சல்
சொட்டுநீர்ப் பாசனத்தின் மகத்துவத்தைப் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள் மட்டுமல்லாமல், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மத்திய அரசின் நீர் வள அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ‘ஒரு துளியில் அதிக விளைச்சல்’ என்ற குழுவும் கோடிட்டுக் காட்டியுள்ளது. சொட்டுநீர்ப் பாசன முறையில், பயிரின் வேர்ப் பகுதிக்கு மட்டும் நீரைக் கொடுப்பதால், பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் நீரை 70% வரையில் சேமிக்க முடியும் எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பயிர்களுக்குத் தேவைப்படும் உரங்களை நீரில் கலந்து குழாய் மூலமாகக் கொடுப்பதால், உரங்கள் வீணாகாமல் பயிர்களுக்குச் செல்வதுடன், அதற்காகும் செலவும் குறைகிறது. நீரைச் சேமிப்பதன் மூலமாக, நீர் இரைக்கப் பயன்படும் மோட்டாரின் பயன்பாட்டைக் குறைத்து, 30-40% வரை மின்சாரத்தைச் சேமிக்க முடியும். பயிர்களுக்குத் தேவையான அளவு, தேவைப்படும் நேரத்தில் மட்டும் நீர் கொடுப்பதால், சொட்டுநீர்ப் பாசன முறையில் பயிரிடப்படும் பயிர்களின் உற்பத்தி 30% முதல் 90% வரை அதிகரிக்கிறது. குறைந்த சாகுபடிச் செலவு மற்றும் அதிக உற்பத்தியால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானம் 2-3 மடங்கு அதிகம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பரப்பளவு வளர்ச்சி
1990-91 முதல், சொட்டுநீர்ப் பாசனத்தைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு அதன் முதலீட்டில் குறைந்தபட்சமாக 50%ஐ மானியமாக மத்திய அரசு வழங்கிவருகிறது. தேசிய சொட்டுநீர்ப் பாசன இயக்கம் 2010-11 ஆண்டிலும், பிரதம மந்திரி கிரிஷ்சி சிஞ்சாயி திட்டம் 2015 ஆண்டிலும் மத்திய அரசால் தொடங்கப்பட்டு, சொட்டுநீர் உபயோகத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலமாகப் பயிரிடப்படும் பரப்பளவு, 1991-92-ம் ஆண்டு 70,859 ஹெக்டேரிலிருந்து 2016-17-ல் 4 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சொட்டுநீர்ப் பாசனத்தை ஊக்குவிப்பதற்காக மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அறிவித்து, இப்பாசனத்தை விவசாயிகளிடம் தீவிரமாகப் பிரபலப்படுத்திவருகிறது. தமிழக அரசு சொட்டுநீர்ப் பாசனத்தைப் பல்வேறு பயிர்களில் உபயோகப்படுத்துவதற்காக குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு 75% மானியம் அளித்து நடைமுறைப்படுத்திவருகிறது. 2016-17
புள்ளிவிவரப்படி 54 லட்சம் ஹெக்டேரில் சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தமிழகத்தில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
பல்வேறு நன்மைகள் இருந்தபோதிலும், சொட்டுநீர்ப் பாசனப் பரப்பளவில் பாராட்டத்தக்க அளவில் பெரிய வளர்ச்சியை இந்தியா இதுவரையிலும் அடையவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயமாகும். மத்திய அரசால் 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சொட்டுநீர்ப் பாசன வளர்ச்சிக்கு வழிமுறை அறியும் குழுவானது, ஏறக்குறைய 7 கோடி ஹெக்டேர் பரப்பளவு சொட்டுநீர்ப் பாசனத்துக்கு உகந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2016-17-ல் இந்தியாவின் சொட்டுநீர்ப் பாசனப் பரப்பளவானது 42.4 லட்சம் ஹெக்டேர்களாக உள்ளது. அதாவது, மொத்த நீர்ப் பாசனப் பரப்பில் வெறும் 4% மட்டுமே சொட்டுநீர்ப் பாசனப் பரப்பாக உள்ளது.
தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குறைந்த நீரில் விவசாயம் செய்வதற்கு சொட்டுநீர்ப் பாசனம் ஒரு தீர்வாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே, சொட்டுநீர்ப் பாசனத்தின் பரப்பளவை அதிகரிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் துரிதமான முறையில் எடுக்க வேண்டும்.
பெரும்பாலான விவசாயிகளுக்குப் பருத்தி, நிலக்கடலை, கரும்பு, துவரை, வெங்காயம் போன்ற பயிர்கள் சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகப் பயிரிட முடியும் என்பது தெரியாமல் இருக்கிறது. அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் எடுத்து செல்வது மிக அவசியமாகிறது. அதேபோல், சொட்டுநீர்ப் பாசன முறையை நிலத்தில் அமைத்த பிறகு, அதற்கான மானியத் தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் நீண்ட நாட்கள் காக்க வேண்டியுள்ளது. இது விவசாயிகளின் கடன் சுமையை அதிகரிக்கிறது. எனவே, மானியத்தொகையைக் காலம் கடத்தாமல் விவசாயிகளுக்குக் கொடுப்பதால், சொட்டுநீர்ப் பாசன முறையை வேகமாக விவசாயத்தில் கொண்டு செல்ல முடியும்.