- குழந்தைகள் வளர்ப்பு பற்றிப் பேசுவதென்றால் கடல்போல விஷயங்கள் விரிந்துகொண்டே போகும். ஏனெனில், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்த நாம் வளர்ச்சி என்கிற பெயரில் நம் இயற்கைப் பயணத்தைவிட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். ஆனால், இன்றும் பிள்ளை வளர்ப்பிற்கு நாம் தகுதி அடைந்துவிட்டோமா என்கிற எண்ணம்கூட இல்லாமல் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.
- இன்றைய பிள்ளைகள்தாம் நாளைய பெரியவர்கள். நாம் இறந்த பிறகு இந்த உலகில் இருப்பவர்களும் வழிநடத்திச் செல்பவர்களும் அவர்கள்தாம் என்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. இன்றைக்கான தீர்வு மட்டுமே நம் சிந்தனையில் வருகிறது. பிள்ளைகளின் எதிர்காலம் என்றால் அவர்களின் படிப்பு, வேலை, வருமானம், திருமணம், பிள்ளைப்பேறு என்று இவற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம். பிள்ளைகளின் மனம் என்கிற ஒன்றை நாம் எப்போதுமே கணக்கில் எடுப்பதில்லை. ஆனால், இதுதான் அவர்களின் மகிழ்வான, நிம்மதியான வாழ்வுக்கு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்போகும் பாதைக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை. ‘இதைப் பற்றியெல்லாம் எதற்குச் சிந்திக்க வேண்டும்? அவர்களது பாதையையும் தேர்ந்தெடுக்கப்போவது நாம்தானே’ என்கிற மிதப்பில் இருக்கிறோம்போல.
- பிள்ளைகளுக்குப் பள்ளி/கல்லூரிப் படிப்பும் உணவும் உடையும் அளித்துவிட்டால் நம் கடமை முடிந்ததா? அவர்கள் வளர்வதற்கான ஆரோக்கியமான (மன ஆரோக்கியத்தையும் சேர்த்து) சூழலை நாம் உருவாக்கித் தந்திருக்கிறோமா? இன்று நாம் அவர்களை வளர்க்கும் முறைதான் நாளை அவர்கள் இந்த உலகைச் சந்திப்பதற்கான அடித்தளம். சின்ன சின்ன விஷயங்களில் கூடச் சிந்திக்காமல் தவறுகள் புரிகிறோம், தவறு என்றே தோன்றாமல் செய்வதால் அவை ஒரு பழக்கமாகிவிடுகின்றன.
ஒப்புதல்
- ஒப்புதல் (Consent) என்கிற வார்த்தை இப்போதுதான் சிறிது சிறிதாக ஆண்/பெண் உறவுக்குள் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அவளுடைய இணையர்கூட அவளைத் தொடக் கூடாது, ஒருவர் விருப்பமும் ஒப்புதலும் இல்லாமல் மற்றவரைத் தீண்டக் கூடாது என்கிற புரிதல் அவசியம் என்பதையே நம் சமூகம் இப்போது தான் பேசத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இன்னும் பேசக்கூடத் தொடங்காத விஷயம் குழந்தைகளின் ஒப்புதல் இல்லாமல் பெற்றோர்கள் அவர்களிடம் எதையும் திணிக்கக் கூடாது என்பதுதான். இங்கே பிறக்கும் ஒவ்வோர் உயிரும் தனி உயிர் எனும்போது நாம் பெற்று விட்டோம் என்பதால் அவர்களிடம் நாம் எதை வேண்டுமானால் திணிக்கலாமா? கூடாது. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? அவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது எனப் பெற்றவர்களான நமக்குத் தெரியாதா என்று வசனம் பேசியே, அவர்களிடம் எல்லாவற்றையும் அவர்கள் விருப்பமின்றித் திணிக்கிறோம்.
மறுப்பதற்கு உரிமை உண்டு
- உதாரணத்துக்கு ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொள்வோம். நம் குழந்தைக்கு நாம் ஆசைப்பட்டு ஒரு விளையாட்டுப் பொம்மையோ ஆடையோ வாங்கி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை நம் தேர்வு அவர்களுக்குப் பிடிக்கவில்லை என அவர்கள் சொல்லிவிட்டால் நாம் இருக்கும் கஷ்டத்தில், வேலையில், இவர்களுக்காகச் சிந்தித்து ஒரு பொருளை வாங்கிக்கொடுத்தால், பிடிக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம் என்றுதான் நமக்குத் தோன்றும். பிடித்தமும் பிடித்தமின்மையும் மனிதருக்கு மனிதர் மாறுபடும். நாம் அந்தச் செலவைச் செய்யக் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்திருக்கலாம். வேலைகளுக்கு நடுவில் நம் நேரத்தை அவர்களுக்காகச் செலவழித்து கடைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்காக நாம் வாங்கிவந்தது பிள்ளைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? நான் வாங்கிக்கொடுக்கும் ஆடையைத்தான் நீ உடுத்த வேண்டும், நான் செய்துகொடுக்கும் உணவைத்தான் நீ உண்ண வேண்டும், அதுவும் நான் சொல்லும் வேளையில் உண்ண வேண்டும், நான் சொல்வதைத்தான் நீ படிக்க வேண்டும் என அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களிடம் திணிக்கிறோம். இப்படிச் செய்வதால் நம்மீது அவர்களுக்கு வெறுப்பு வளரும். இல்லையெனில் அவர்கள் வளர வளர எங்குமே தனக்கான விருப்பத்தைத் தெரிவிக்க இயலாமல் யார் அவர்கள் மீது எந்தக் குப்பையை வீசினாலும் வாங்கிக்கொள்ளும் தன்மையோடு இருப்பார்கள், ‘முடியாது’, ‘வேண்டாம்’, ‘விருப்பமில்லை’ எனச் சொல்லும் தைரியத்தையும் இழந்துவிடுவார்கள்.
- அவர்களுக்கு நல்லது என்று நமக்குத் தோன்றினால், அதை ஏன் சொல்கிறோம், அது எதற்கு நல்லது என்று புரியவைத்து அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். குழந்தைகளிடம் நாம் நல்லது என (யாருக்கு நல்லது என்பது பெரிய கேள்விக்குறி) கற்றுக்கொடுக்கும் கீழ்ப்படிதல் (Obedience) என்னும் குணம் உண்மையில் அவர்களைக் கோழைகளாக்கும் சக்தி படைத்தது. அவர்களது குரலும் கேட்கப்பட வேண்டும். ஏன், எதற்கு என்று அவர்கள் கேள்விகள் கேட்பதற்கான இடமளிக்க வேண்டும். நம் சிந்தனை சோம்பேறித்தனத்திற்கு அவர்களைப் பலியாக்குவது சரியல்ல. இன்று நம்மிடம் கேள்விகள் கேட்க இயலாமல் வளரும் பிள்ளைகள், நாளை தனக்கு என்ன நடந்தாலும் சகித்துப்போக வேண்டும் என்றே நினைக்கும். தனக்காகவோ மற்றவருக்காவோ நியாயத்தின் பக்கம் நின்று கூடக் கேள்விகள் கேட்காத கோழையாக வளரும்.
பிள்ளைகளை மதிப்போம்
- எப்போதும் பயத்திலும், தன் தேவைகளை, தேவையின்மைகளை, விருப்பத்தை, விருப்பமின்மையை, தனக்குள் எழும் கேள்விகளுக்கான தேடல்களை வெளியில் பேச இயலாமல் வளரும் பிள்ளைகளை வளர்ப்பதற்கு நமக்குச் சுலபமாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு வாழ்க்கை நாளைக்குச் சுலபமாக இருக்குமா? என் சொல் பேச்சு தட்டமாட்டான்/ள் என் பிள்ளை என்பதில் பெருமை என்ன இருக்கிறது? நாம் என்ன பொருளையா பெற்று வளர்க்கிறோம்? ரத்தமும் சதையும் எலும்பும் உயிரும் மனமும் அறிவும் இருக்கிற ஒரு மனிதரை அல்லவா?
- நாம் எப்படி வேண்டுமானாலும் வளர்க்கப்பட்டிருக்கலாம்; அது கடந்த காலம். ஆனால், நம் பிள்ளைகளாவது அவர்களுக்கு என்ன வேண்டும், வேண்டாம் எனத் தெரிந்து, தெளிந்து வாழ வேண்டாமா? நம் உரிமைகள் நம் முன்னோர்களால் பறிக்கப்பட்டிருக்கலாம், அதற்காக நம் பிள்ளைகளின் உரிமைகளின் வழியில் நாம் குறுக்கே நிற்கலாமா? மருந்து கசக்கத்தான் செய்யும். அதனால் திணித்துத்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், அதை மருந்துடன் நிறுத்திக்கொள்வோம். எல்லாவற்றுக்கும் அந்த மொழி உதவாது.
- நாம் கற்றுத் தராமலேயே நம் பிள்ளைகள் தன்னையும் மதித்துப் பிறரையும் மதித்து வாழவேண்டும் என்றால், நாம் முதலில் அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோரை மதிப்பது குறித்து எப்போதும் பாடம் எடுத்துக்கொண்டே இருக்கும் நம் சமூகத்தில், பிள்ளைகளை மதிப்பது குறித்துச் சிறிதேனும் விழிப்புணர்வு வருமானால், பெற்றோரை மதிக்க வேண்டும் என்கிற பாடத்தை எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2023)