TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

January 12 , 2025 3 hrs 0 min 41 0

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

  • அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்வளவுதான் என்று நினைத்தது மாறி, அவர் சொல்கிறவை எல்லாம் சீரியஸாகத்தான் என்றாகியிருக்கிறது அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள்!
  • “அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக மாற்றுங்கள் (மகா) – Make America Great Again - MAGA என்ற முழக்கத்தையே கிரீன்லாந்து மக்களும் நினைக்கிறார்கள் என நான் கேள்விப்படுகிறேன். வியக்க வைக்கிற இடம் கிரீன்லாந்து. நம் நாட்டின் ஒரு பகுதியாக [கிரீன்லாந்து] மாறினால், மாறும்போது அந்த மக்கள் மிகப் பெரும் பலனடைவார்கள். மிகவும் மோசமான இந்த உலகிலிருந்து நாம் அவர்களைப் பாதுகாப்போம்; வளரச் செய்வோம்.”
  • இப்படிச் சொன்னதுகூட வரும் 20 ஆம் தேதி அதிபராகவுள்ள டிரம்ப்தான்; தன்னுடைய மகன் டிரம்ப் ஜூனியர் கிரீன்லாந்து செல்லும் தகவலைப் பகிர்ந்து, சமூக ஊடகப் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
  • கிரீன்லாந்தை டிரம்ப் ஜூனியர் சென்றடைந்தவுடன் மற்றொரு தகவலையும்  பகிர்ந்தார் டிரம்ப் – “டான் ஜூனியரும் என்னுடைய பிரதிநிதிகளும் கிரீன்லாந்தைச் சென்றடைந்திருக்கிறார்கள். வரவேற்பு மிகப் பிரமாதம். அவர்களும், சுதந்திர உலகமும் பாதுகாப்பை, பத்திரத் தன்மையை மற்றும் அமைதியை விரும்புகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக மாற்றுங்கள். கிரீன்லாந்தையும் மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள்.”
  • இதே நாளில் இன்னொரு பதிவில் அமெரிக்காவுடன் இணைந்துவிடுமாறு கனடாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப், அப்படிச் செய்தால் கட்டணங்கள், வரிகள் எதுவும் இருக்காது. தொடர்ந்து, அவர்கள் நாட்டை வலம்வந்துகொண்டிருக்கும் ரஷிய, சீன கப்பல்களாலும் அவர்களுடைய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.
  • பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பலமிழப்பால் கனடாவில் நிலையற்ற அரசியல் தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் மாகாணமாக கனடாவை  மாற்றுங்கள் என்கிற டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் யோசனையை மீண்டும் வலியுறுத்துவது எல்லாம், ‘அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக மாற்றுங்கள்’ என்ற குடியரசுக் கட்சியினரின் இலட்சிய முழக்கம் வெறும் தேர்தல்கால அரசியல் – பொருளாதார முழக்கம் மட்டுமல்ல; தெளிவான இலக்கேதான் எனத் தோன்றுகிறது.
  • புவியியல் அடிப்படையில் கனடாவும் கிரீன்லாந்தும் இணைய நேரிட்டால் அமெரிக்காவின் நிலப்பரப்பானது 2.2 கோடி சதுர கிலோ மீட்டராக, ரஷிய நிலப்பரப்பைவிடவும் அதிகமாகிவிடும் (தற்போது ரஷியாவின் நிலப்பரப்புதான் அதிகம், சுமார் 1.7 கோடி சதுர கி.மீ.).
  • ‘தங்களுடைய எதிர்காலத்தை கிரீன்லாந்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்; அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற அவர்கள் விரும்புகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்’ என்று அண்மைக்காலமாக டிரம்ப்பின் மனசாட்சியைப் போல பேசிக்கொண்டிருக்கும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
  • ஏற்கெனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; ஒருபோதும் விற்பனைக்குக் கிடைக்காது என்று கொஞ்சம் காட்டமாகவே கிரீன்லாந்தின் பிரதமர் முச்ச பெ ஈகே எதிர்வினையாற்ற, அமெரிக்காவுடன் இணைவதால் மகிழ்ச்சியடைகிற மக்கள் யாரும் இங்கிருப்பதாகத் தெரியவில்லை என்று கிரீன்லாந்தின் இன்னொரு அரசியல் தலைவரான ஆஸா செம்னிட்ஸும் குறிப்பிட்டுள்ளார்.
  • கனடாவின் பழமைவாத கட்சியைச் சேர்ந்தவரும் அமெரிக்கக் குடியரசுக் கட்சிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுகிறவருமான பியர் பொலிவர்கூட, கனடா எப்போதும் அமெரிக்காவின் பகுதியாகாது என்று மறுத்துவிட்டிருக்கிறார்.
  • செய்தியாளர் சந்திப்பொன்றில், டென்மார்க்கின் ஆட்சிப் பகுதியான கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீட்பது என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ராணுவ அல்லது பொருளாதார நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படும் வாய்ப்புகள் இல்லை என்று உறுதியளிக்க மறுத்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
  • ‘இவற்றில் எதுவொன்றையும் என்னால் உறுதியாகக் கூற இயலாது; ஆனால், ஒன்றைச் சொல்ல முடியும், பொருளாதார பாதுகாப்பு கருதி அவை (எங்களுக்குத்) தேவைப்படுகின்றன’ என்ற டிரம்ப், ‘கனடா விஷயத்தில் ராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம்; பொருளாதார நெருக்குதல் மூலம்தான் எல்லாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
  • கூடவே சில நாள்களிலேயே, அமெரிக்கக் கொடியைப் போன்ற டிசைனில் – கோடுகள், நட்சத்திரங்களுடன் - கனடாவும் இணைந்திருக்கிற மாதிரியில் அமெரிக்காவின் படம் ஒன்றையும் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ளதுடன், ‘செயற்கையாக வரையப்பட்ட அந்தக் கோட்டை (எல்லைக் கோட்டை) எடுத்துவிட்டுப் பாருங்கள்; எவ்வளவு அழகாக இருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • எதற்கும் இருக்கட்டுமென, இப்படியெல்லாம் ‘எல்லையை மீறி ஆடுவது’ கொஞ்சம்கூட நன்றாக இல்லை என்று இன்னமும் பதவியேற்காத டிரம்ப்பை நோக்கி பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பை, அதிருப்தியைப் பதிவு செய்துவைத்திருக்கின்றன.
  • மற்றொரு நாளில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இன்னொரு புதிய குண்டையும்  வீசினார் டிரம்ப் – ‘மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம்’ என்றதுடன், ‘இந்தப் பெயர் எவ்வளவு அழகாக இருக்கிறது’ என்று அவரே வியந்தும்கொண்டார். ‘பாருங்கள், இது மிகப் பொருத்தமானது, மிகவும் பொருத்தமானது’ என்றும் குறிப்பிட்ட டிரம்ப், இதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.
  • ஆனால், இந்தக் கருத்துக்குக் கொஞ்சம் சூடாகவே பதிலடி கொடுத்துள்ள மெக்சிகோ நாட்டின் அதிபர் கிளாடியா ஷெயின்பாம், அந்தக் கால மெக்சிகோ நாட்டின் பழைய வரைபடம் ஒன்றை விரித்துப்போட்டு - தற்போது அமெரிக்காவில் இடம் பெற்றுள்ள மாகாணங்களான டெக்சாஸ், அரிசோனா, நெவாடா, நியு மெக்சிகோ, கலிபோர்னியா ஆகியவை எல்லாம் வரைபடத்தில் பழைய மெக்சிகோவுக்குள் இருக்கின்றன – ‘மெக்சிகன் அமெரிக்கா, கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா?’ குறிப்பிட்டிருக்கிறார்.
  • கடந்த ஆட்சிக் காலத்திலேயே மெக்சிகோவுடனான அதிபர் டிரம்ப்பின் உறவு என்பது எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகள், இறக்குமதிப் பொருள்கள் மீதான வரிகள் என, ஏழாம் பொருத்தம்தான். அமெரிக்க – மெக்சிகோ எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்; அதற்கு மெக்சிகோதான் பணம் தர வேண்டும் என்ற அவர், ஆட்சிக்காலத்தில் 724 கி.மீ. நீளத்துக்கு சுவரும் கட்டினார்.
  • இந்தக் கடுப்பின் தொடர்ச்சியாகவோ என்னவோ இப்போது, நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் துலங்கிவரும் பெயரான மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
  •  நாடுகளை, நிலப்பரப்புகளை ராணுவ நடவடிக்கை மூலமும் விலைகொடுத்தும் வாங்குவது ஒன்றும் அமெரிக்காவுக்குப் புதிதல்ல.
  • 21 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள லூசியானாவை 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து பிரான்ஸிடமிருந்தும், 1.86 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள ப்ளோரிடாவை 5 மில்லியன் டாலர்கள் கொடுத்து ஸ்பெயினிடமிருந்தும், 15 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள அலாஸ்காவை 7.2 மில்லியன் டாலர்கள் கொடுத்து ரஷியாவிடமும், 352 சதுர கி.மீ. பரப்புள்ள வர்ஜின் தீவுகளை 25 மில்லியன் டாலர்கள் கொடுத்து டென்மார்க்கிடமும் விலைக்குத்தான் வாங்கியது அமெரிக்கா! 9 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள ப்யூர்தோ ரிகாவை ராணுவ தாக்குதல் மூலம் ஸ்பெயினிடமிருந்து எடுத்துக்கொண்டது – ஆனால், இவை எல்லாமே நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்!
  • டிரம்ப் பேசுகிற பேச்சைப் பார்த்தால் டென்மார்க்கிடம் என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் கிரீன்லாந்தை வாங்கத் தயாராகத்தான் இருக்கிறார் போல;  அல்லது  என்ன நேரிட்டாலும் பரவாயில்லை என்று ராணுவத்தைப் பயன்படுத்திக் கைப்பற்றினாலும் வியப்பதற்கில்லை.
  • இன்னமும் கொஞ்சமும் திறக்கப்படாத – அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கத்தைப் போன்றது கிரீன்லாந்து.
  • சுமார் 56 ஆயிரம் பேர் மக்கள் மட்டுமே வாழ்கிற கிரீன்லாந்தின் பரப்பளவோ 21 லட்சம் சதுர கி.மீ.! கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும்  அதிகமான பரப்பைக் கனமான - கரையாத பனிப்பாறைகள் மூடியிருக்கின்றன. இங்கே கனிம வளங்களும் இயற்கை எரிவாயுவும் திரண்டுகிடக்கின்றன.
  • எல்லாவற்றுக்கும் டென்மார்க்கையே நம்பியுள்ள தன்னாட்சிப் பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தோ முழு விடுதலையை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் என்னென்ன அரசியல் சித்து விளையாட்டெல்லாம் விளையாடப் போகின்றனவோ? அமெரிக்காவும் அதிபராகும் டொனால்ட் டிரம்ப்பும் எப்படி ஆடப் போகிறார்களோ?
  • ஏற்கெனவே, அமெரிக்கா ஒப்படைத்த பனாமா கால்வாயைத் தேவைப்பட்டால் எந்தக் கேள்விக்கும் இடங்கொடுக்காமல் உடனடியாகவும் முழுமையாகவும் அமெரிக்காவுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்  டிரம்ப். இதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் பனாமா அதிபர் ஜோஸே ரௌல் முலீனோ, கால்வாய், பனாமாவுக்குச் சொந்தம், அது தொடரும் என்று குறிப்பிட்டபோது, அதையும்தான் பார்க்கலாமே என்று திருப்பியடித்திருக்கிறார் டிரம்ப்.
  • (1900-களின் தொடக்கத்தில் அமெரிக்கா உருவாக்கிய -  பசிபிக் – அட்லான்டிக் பெருங்கடல்களை இணைக்கும் - இந்தக் கால்வாயை, அதன் உரிமையையும் கட்டுப்பாட்டையும், 1977-ல் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் செய்துகொண்டதோர் உடன்பாட்டின்படி 1999, டிச. 31-ல் பனாமாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா).
  • அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதிதான் பொறுப்பேற்கப் போகிறார் டொனால்ட் டிரம்ப் (குற்றவாளிதான், ஆனால், தண்டனை எதுவுமில்லை என்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது – அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் அதிபராகிறார்). ஆனால், அதற்குள்ளாகவே அதிரடியான அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இனிமேல் இவற்றில் எதையுமே வெற்றுப் பேச்சுகளாக எடுத்துக்கொள்ள முடியாது, எடுத்துக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இன்னும் சில நாள்களில் அவர்தான் அமெரிக்காவின் அதிபர்!
  • ஆக, நெருப்பு இருக்கிறது; மகா அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாகப் புகைந்துகொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எரியத் தொடங்கலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் டிரம்ப்; விரைவில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளைப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

நன்றி: தினமணி (12 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories