TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி

December 1 , 2024 42 days 110 0

சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி

  • 2025 ஆண்டிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்காவை ஆளப் போகிறவர்களின் பட்டியலில் ஒவ்வொருவராக அறிவித்துக்கொண்டிருக்கிறார் அதிபர் (தேர்வு) டொனால்ட் டிரம்ப்.
  • டிரம்ப் அரசில் நலவாழ்வு மற்றும் மக்கள் சேவைத் துறைக்குப் பொறுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் பெயர்தான், இன்னமும் சொந்தக் கட்சிக்காரர்களான குடியரசுக் கட்சியினரை அதிர்ச்சியிலும் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்சியினரை வியப்பிலும் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
  • டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரிதும் திகைத்துப் போயிருப்பது உள்ளபடியே அமெரிக்காவிலுள்ள பெருநிறுவனங்களான மருந்துகள் தயாரிப்பாளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும்தான்.
  • பொதுவாக, அமெரிக்க அரசையும் அரசியலையும் ஆட்டிப் படைப்பவை எப்போதுமே ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்துகள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் என்பார்கள். ஏனென்றால் அவ்வளவும் பணம். உலகில் போரையும் சரி, நோயையும் சரி, தொடங்குவதும் நிறுத்துவதும் இவர்கள்தான் (வியாபாரத்துக்காக) என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.
  • உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த மக்களையும் முடக்கிப்போட்ட கரோனா (கோவிட்) தோன்றியதற்கும் பரவியதற்குமான மூல காரணம் இதுதான் என இன்று வரைக்கும்கூட கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள் என்ற வகையில் எத்தனை லட்சம் கோடிகள் பணத்தை இந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ஈட்டியிருக்கும்?
  • கரோனா என்பதே திட்டமிட்டுப் பரவச் செய்யப்பட்ட ஒன்று; சில தனிநபர்கள், சில மருந்து நிறுவனங்கள் இணைந்து நடத்திய உலக மகா கொள்ளை என்று குற்றம் சாட்டும் செயற்பாட்டாளர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள். கரோனா தடுப்பூசிகளின் மூலம் மட்டுமே இந்த மருந்து நிறுவனங்கள் சம்பாதித்த தொகை எவ்வளவு? கரோனா காலத்தில் ஒரு குறிப்பிட்ட மாத்திரை மட்டுமே உலகம் முழுவதும் எவ்வளவு விற்றிருக்கும்? இவற்றின் மூலம் எவ்வளவு பணம், யார் யாருக்குக் கொழித்திருக்கும்? எல்லாமும் விடை தெரியாத கேள்விகள்.
  • மறைந்த முன்னாள் அதிபர் கென்னடியின் சகோதரர் மகனான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் பெயரின் அறிவிப்புக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது, இன்றைய மருந்துகள், மருத்துவத் துறையின் பல்வேறு நிலைப்பாடுகளை மிகக் கடுமையாக, வெளிப்படையாக எதிர்ப்பவர், விமர்சிப்பவர் ராபர்ட் எஃப் கென்னடி.
  • தடுப்பூசிகளால் மன இறுக்கம் / நரம்பியல் பிரச்சினைகள் (ஆட்டிசம்) ஏற்படும் என உறுதியாக நம்புகிறவர் ராபர்ட். கடந்த ஜூலையில்கூட ஒரு நேர்காணலில், ‘எந்தவொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது, திறமானது என்று கூறத் தக்கதல்ல’ என்று குறிப்பிட்டதுடன், (நீண்ட காலத்துக்கு முன்னரே மறுக்கப்பட்ட போதிலும்) தடுப்பூசிகளால் ஆட்டிசம் பாதிப்பு ஏற்படலாம் என்றே இன்னமும் தாம் நம்புவதாகத் தெரிவித்தவர் ராபர்ட்.
  • தடுப்பூசி மருந்துகளைப் பரப்புவதற்காகத்தான் (கரோனா காலத்தில்) தேசிய ஒவ்வாமை - தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த அந்தோனி பாக்சியும் பில் கேட்ஸும் கரோனா பற்றிப் பரபரப்பாக்குகின்றனர் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியவர்.
  • (நல்ல பயனளிப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தாலும்) மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரிலிருந்து ஃப்ளூரைடை அகற்ற வேண்டும்; பதப்படுத்தாத பாலையே  பயன்படுத்த வேண்டும் என்கிற ராபர்ட், கோவிட் சிகிச்சையில் உணவுப் பொருள் மற்றும் மருந்து முகமையின் (Food and Drug Administration) கருத்துகளுக்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
  • நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் அறிவுரைகளைப் புறக்கணியுங்கள், குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்துகளைச் செலுத்த வேண்டாம் என்று ஆலோசனை கூறுபவர்.
  • மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கிற, மற்றவர்களால் பொருத்தமற்றவை என்று கருதப்படுகிற, இவருடைய நிலைப்பாடுகள் இன்னும்கூட ஏராளமாக இருக்கின்றன. இவையெல்லாமும்தான் பல பெரு நிறுவனங்களுக்கு பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
  • மருந்து நிறுவனங்கள் மட்டுமல்ல, மக்கள் நலன் சார்ந்த வேறு பல அதிரடி நடவடிக்கைகளிலும் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ‘முழு ஆசிர்வாதத்துடன்’ ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் இறங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
  • ஏனென்றால், டொனால்ட் டிரம்ப் உள்பட அமெரிக்கா முழுவதும் பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கும், இவருடைய பொருந்தா உணவு (Junk food) மீது அமெரிக்க மக்கள் கொண்டுள்ள பெருவிருப்பத்துக்கு எதிரான பிரசாரம்தான்.
  • “நீண்ட காலமாக தொழில்முறை உணவு நிறுவனங்களாலும் மருந்து நிறுவனங்களாலும் அமெரிக்கர்கள் நசுக்கப்படுகிறார்கள். மக்கள் நலனைப் பொருத்தவரை இந்த நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன, தவறான, மோசமான  தகவல்களைப் பரப்புகின்றன ...
  • இந்த நாட்டில் பெருமளவுக்கு உடல்நலக் கோளாறுகளுக்குக் காரணமான ஆபத்தான வேதிப் பொருள்கள், மாசுகள், பூச்சிகொல்லிகள், மருந்து உற்பத்திப் பொருள்கள் மற்றும் உணவுகளில் சேர்க்கப்படும் (தேவையின்றி) பொருள்களிலிருந்து மக்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் நலவாழ்வு மற்றும் மக்கள் சேவைத் துறை பெரும் பங்காற்றும்” என்று ராபர்ட் நியமனத்தின்போது குறிப்பிட்டவர் வேறு யாருமல்ல, அதிபர் ஆகவுள்ள டிரம்ப்தான்.
  • “பெருந்தொற்றுகளுக்கு முடிவு கட்டி, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, நாட்டின் பாரம்பரியமிக்க அறிவியல் ஆய்வுகளை கென்னடி மீட்டெடுப்பார்”  என்றும் அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.
  • கென்னடி ஜூனியரின் நியமனத்தையே இன்னமும் பலரால் செரித்துக்கொள்ள  முடியாத நிலையில், இந்தியாவில் கொல்கத்தா நகரில் பிறந்து. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவரான டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை அமெரிக்க தேசிய நல்வாழ்வு நிலையங்களின் (யுஎஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த் – என்.ஐ.எச்.) தலைவராக நியமித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
  • இவரும் ராபர்ட் போன்ற தனித்துவம் கொண்டவர்தான். கரோனா பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் மருத்துவத் துறையெல்லாம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்போது, பொதுவான (அதிகாரிகளின்) கருத்துக்கு நேர்மாறாக, அனைத்து ஊரடங்குகளையும் ரத்து செய்ய வேண்டும்; முகக் கவசம் கட்டாயம் என்பதும் தேவையில்லை என்று வலியுறுத்தியவர். இதன் மூலம் பெருங்கூட்ட நோயெதிர்ப்பு உருவாகும் என்றும் வாதிட்டவர் ஜெய் பட்டாச்சார்யா. ஊரடங்குகள்தான் மிகப் பெரிய தவறு என்றும் குறிப்பிட்டவர் (என்ன மாதிரியான காம்பினேஷன்!).
  • இதையே பட்டாச்சார்யாவின் பெயரை அறிவித்தபோது, டிரம்ப்பும் தெரிவித்திருக்கிறார்: ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியருடன் இணைந்து, அமெரிக்க மக்கள் நலனை மீட்பதில், ஜெய் பட்டாச்சார்யா பெரும் சாதனைகளை நிகழ்த்துவார்! (எனவே, இவருடைய நியமனத்துக்கு எதிராகவும் சலசலப்பு தோன்றியிருக்கிறது).
  • இவர்கள் இருவரையும் போலவே மருத்துவத் துறைகளில் மேலும் சிலருடைய நியமனங்களையும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இவை எல்லாமுமாக  சிலருக்குப் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.
  • சுற்றுச்சூழல் வழக்குரைஞரும் மக்கள் நலனுக்கு எதிராக நிறைய சதிகள் பின்னப்பட்டிருப்பதாக வாதிடுபவருமான கென்னடி ஜூனியர், தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் சார்பில்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளைத் தொடங்கினார். பின்னர், ஜனநாயகக் கட்சி சார்பில் அல்லாமல்  சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்து ஆதரவு திரட்டி வந்தார்.
  • திடீரென கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ராபர்ட், அதிபர் தேர்தலில் டிரம்ப்பை ஆதரிப்பதாக அறிவித்துப் பிரசாரமும் செய்யத் தொடங்கினார். இப்போது டிரம்ப் அரசின் அங்கமாகவும் ஆகிவிட்டார் (விவேக் ராமசாமியைப் போலவே!).
  • இந்த முறை தேர்தலில் தாம் வெற்றி பெற உதவியவர்கள் – விசுவாசிகள் -  ஒவ்வொருவரையும் தேடித் தேடிப் பதவியளித்துக் கொண்டிருக்கும் டிரம்ப், யாருமே எதிர்பாராத வகையில் ராபர்ட் கென்னடியிடம் நல்வாழ்வுத் துறையை ஒப்படைத்திருக்கிறார். (இந்த விசுவாசிகளின் அலங்கரிப்புக்குப் பின்னால் டிரம்ப்பின் கடந்த கால கசப்பான அனுபவம்தான் காரணமாக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. 2016 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், கட்சி சார்பற்றவர்களாக இருந்தாலும்கூட பல ‘அறிவாளிகளை’ அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். ஆனால், பின்னர் இவர்களே டிரம்ப்பின் செயல்பாடுகளைக் கேலியாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, இந்த முறை அறிவாளிகள் என்பதைவிட விசுவாசம்தான் முக்கியம் என்று டிரம்ப் கருதியிருக்கிறார்போல).
  • அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமனங்கள் அனைத்தையும் அமெரிக்க செனட் உறுதி செய்ய வேண்டியது அவசியம். ஒருவேளை இந்த மருந்துப் பெரு நிறுவனங்கள் அணி திரண்டு (இவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்,  செலவழிக்கவும் முடியும்) ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் நியமனத்தைக் காலி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.
  • ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், ஜெய் பட்டாச்சார்யா ஆகியோரின் நியமனங்கள் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் பெரு மருந்து நிறுவனங்களுக்கு எதிரான மாற்றுச் சிந்தனை கொண்டவர்களான இவர்களை மிகவும் சக்தி வாய்ந்த இடங்களில் பொருத்தியிருக்கிறார் டிரம்ப்.
  • புலம்பெயர்ந்தோர் விவகாரம், பெண்களின் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்களில் டிரம்ப்பின் நிலைப்பாடுகள் அச்சமூட்டுவதாக இருந்தாலும் இவ்விருவரின் நியமனங்களும் இவர்களின் பணியும் ஒருவேளை எதிர்காலத்தில் உலகளாவிய அளவில் மருந்துகள் துறையில் (ஆராய்ச்சி, தயாரிப்பு, சந்தை) பெரிய மாற்றங்களை, பெரும் நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய – மருந்துகளின்  பிடியிலிருந்து மக்களை விடுவிக்கக் கூடிய - நல்ல வாய்ப்பும் இருக்கிறது! நாம் எங்கே இருக்கிறோம்?
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தற்போது 5.4 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.
  • நம் நாட்டில் அரசு அல்லது அரசு அமைப்புகள், வங்கிகள் சொல்கிற நம்பர்கள் எல்லாமே நம்ப முடியாதவை என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள், அவர்களே வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம் என்பது போல. ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதம் 6 சதவிகிதம் என்றால், உள்ளபடியே 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகத்தான் இருக்கும். இப்போது வளர்ச்சி விகிதம் 5.4 சதவிகிதம் என்றால் அதுவும்கூட அனேகமாக ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால்கூட வியப்பதற்கில்லை. கஷ்டப்பட்டு நம் வல்லுநர்கள் கணக்கெல்லாம் போட்டு, 5.4 சதவிகிதம் என்று கண்டறிந்திருப்பார்களாக இருக்கும். 
  • மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறைவுக்கு நகர்ப்புற நுகர்வு குறைந்ததுதான் காரணம் எனப்படுகிறது.
  • அதுதான் ஏனுங்க? கடுமையான உணவுப் பொருள்கள் விலை உயர்வு, கடன் செலவு அதிகரிப்பு, பட்டினி கிடக்கிற பசுவைப் பிடித்துப் பால் கறக்கிற மாதிரி ஏற்கெனவே துன்ப துயரத்துல இருக்கிற அதே பிரிவு மக்களிடம் உருவி எடுக்கிற மாதிரி வருமான வரி விகிதங்கள் அதிகரிப்பு, வாடகைகள் உயர்வு, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, மோசமான கட்டமைப்பு, இவற்றுக்கு நேர்மாறாக தடுமாறும் அல்லது தவழும் ஊதிய உயர்வு! இந்த நிலைமையில் யார்தான் எதைத்தான் வாங்குவார்கள்?
  • அப்படியே வாங்கப் போனால்... எதை வாங்கினாலும் ஜி.எஸ்.டி.தான். என்ன கட்டினாலும் சிமெண்ட் வேணும், ஆனால், 28% ஜி.எஸ்.டி.! ஒவ்வொரு வீட்டுக்கும் இப்போது அத்தியாவசியத் தேவையாகிவிட்ட இரு சக்கர வாகனத்துக்கும் 28% வரி என்றால் என்னதாங்க நியாயம்? தோட்டத்துல பாதி கிணறு என்கிற மாதிரி விலையில் மூணுல ஒரு பங்கு வரியா? (ஆமா, உலகத்துல வரி வசூல்ல சாதனைன்னு மார் தட்டிக்கிற நாடு நம்மளத் தவிர வேறு ஏதாவது இருக்கா?).
  • சரி, இந்தக் கூப்பாடுகளில் ஏதாவது இந்த அரசின் காதுகளில் விழுகின்றதா? ம்.  யாருக்கும் கவலை இல்லை. அதுசரி, மக்கள்தான் வாக்களித்து முடித்துவிட்டார்களே. வாழ்க வளத்துடன்!

நன்றி: தினமணி (01 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories