- பியர், ஒயின், காய்ச்சி வடித்தல் மூலம் தூய்மையாக்கப்படும் வடிபானங்கள் என மூன்று வகைகளாக மதுபானம் வகைப்படுத்தப்படும். பியர் வகையில் மொத்த கன அளவில் 5% ஆல்கஹால் இருக்கும். ஒயின் வகைகளில் இது 12% ஆகவும் வடிபான வகைகளில் சுமார் 40% வரைகூட இருக்கும். எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனால் ஆல்கஹால்தான் மதுபானங்களில் பொதுவாக இருக்கும்.
எத்தனால் என்றால்?
- மீத்தேன் (CH4), ஈத்தேன் (C2H6), புரொப்பேன் (C3H8), பியூட்டேன் (C4H10) முதலியவை ஆல்கீன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோகார்பன்கள். இதன் ஒரு ஹைட்ரஜன் அணுவுக்குப் பதிலாக ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் இணைந்த ஹைட்ராக்சில் சேர்ந்தால் இது ஆல்கஹாலாக (எத்தனால் போன்றவையாக) மாறிவிடும். C2H5OH என்பதுதான் எத்தனால் மூலக்கூறின் வாய்பாடு. இரண்டு கார்பன் அணுதான் இந்த மூலக்கூறின் முதுகெலும்பு.
- நாம் உண்ணும் பொருள்களை உடல் பயன்படுத்தத்தக்க வகையில் வேதிவினை வழியே மாற்றியமைக்கும் செயல்தான் வளர்சிதைமாற்றம். அதேபோல நமது உணவு வழியே உடலுக்குள் செல்லும் ஆல்கஹாலும் கல்லீரலில் வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகும். ஆல்கஹால் டீஹைட்ரோஜினேஸ் (ADH) என்னும் நொதிதான் முதலில் ஆல்கஹாலுடன் வேதிவினை புரிந்து அசிட்டால்டிஹைடு என்ற பொருளாக மாற்றுகிறது. இந்த நொதி, வினையூக்கியாகச் செயல்படுகிறது. பின்னர் ஆல்டிஹைடு டீஹைட்ரஜனேஸ் (ALDH) என்னும் நொதி, அசிட்டால்டிஹைடு மூலக்கூறுகளை வளர்சிதைமாற்றம் செய்து அசிட்டேட் என்கிற பொருளாக மாற்றுகிறது.
போதை ஏற்படுவதேன்?
- எத்தனால் போன்ற ஆல்கஹால் வகைகள் உளத்தூண்டல் மருந்தாகச் (psychoactive drug) செயல்படும். ரத்தத்தில் ஆல்கஹால் கூடுதல் செறிவில் சேரும்போது உடலின் இயல்பான நரம்பியக்கடத்தல் தன்மையைக் குறைத்துவிடும்; இதையே போதையாக உணர்கிறோம். அசிட்டால்டிஹைடு வளர்சிதை மாற்றம் அடைவதில் ஏற்படும் தாமதம் அல்லது சிக்கலின் தொடர்ச்சியாகத்தான் சுயநினைவிழத்தல் போன்ற பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. பல நேரம் ஆல்கஹால் தொடர்வினை மூலம் உருவாகும் அசிட்டால்டிஹைடின் செறிவும் உடல் உறுப்புகளைப் பாதிப்படைய வைக்கும்.
கள்ளச் சாராயம் என்றால் என்ன?
- எத்தனால் என்கிற ஆல்கஹாலைத் தவிர மெத்தனால் செறிவாக உள்ள மதுபானம்தான் கள்ளச் சாராயம். காலம் காலமாகத் தென்னை, பனை, அரிசி, வெல்லம் முதலியவற்றிலிருந்து நாட்டுச் சாராயம் அல்லது பட்டைச் சாராயம் வடிக்கப்படுகிறது. இவ்வாறு வடிக்கும் சாராயத்தில் ஆல்கஹால் அளவு மிதமாகத்தான் இருக்கும். கூடுதல் ஆல்கஹால் சேர்த்து இதன் போதைத்தன்மையைக் கூட்டப் பொதுவாக மெத்தனால் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான கள்ளச் சாராய மரணங்கள் மெத்தனால் நச்சு காரணமாகத்தான் ஏற்படுகின்றன.
- ஆல்கஹால் பானங்கள் குறித்த 2018ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு - தரநிலை விதிமுறைகள், வெவ்வேறு மதுபானங்களில் அனுமதிக்கப்பட்ட மெத்தனால் அளவை நிர்ணயித்து வரையறை செய்துள்ளன. சிறு அளவில் என்றால் இந்த வகை ஆல்கஹாலை நமது உடல் தாங்கிக்கொள்ளும்.
- உயிருக்கு உலைவைக்கும் மெத்தனால் CH3OH என்கிற மூலக்கூறைக் கொண்டதுதான் மெத்தனால். உடலுக்குள் செல்லும் மெத்தனால் கல்லீரலில் வளர்சிதை மாற்றம் பெறும். இங்கும் ஆல்கஹால் டீஹைட்ரோஜினேஸ் (ADH) என்னும் நொதி வேதிவினையை ஏற்படுத்தும். இந்த வினையில் மெத்தனால் (CH3OH), பார்மால்டிஹைடு CH2O என்னும் பொருளாக மாற்றும். பின்னர் ஆல்டிஹைட் டீஹைட்ரஜனேஸ் (ALDH) என்கிற நொதி, இதனை மெதனாயிக் அமிலம் எனக் கூறப்படும் பாமிக் அமிலம் HCOOH (Formic acid) என்கிற பொருளாக மாற்றும். பாமிக் அமிலம் என்பது ஒரு வகை கார்பாக்சிலிக் அமிலம். வளர்சிதை மாற்றத்தின் இறுதியில் எத்தனால் அசிட்டேட் என்கிற பொருளாகவும் மாறும்; மெத்தனால் பாமிக் அமிலமாகவும் மாறும். எனவேதான் மெத்தனால் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.
- காய்கனிகளை உண்ணும்போது அத்துடன் சிறிதளவு மெத்தனால் நமது உடலுக்குள் செல்கிறது. காய்கனிகளில் உள்ள பெக்டின் என்னும் இயற்கை வேதிப்பொருள் நமது உடலியல் இயக்கத்தில் மெத்தனாலாக மாறும். நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகள் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் என்னும் மாவுச் சத்தை நொதிப்பு அல்லது நொதித்தல் வினைமூலம் ஆல்கஹாலாக மாற்றிவிடும். இதிலும் சிறிதளவு மெத்தனால் உருவாகும். எனவே இயல்பாக - பத்து லட்சம் பகுதியில் வெறும் 4.5 பகுதி என்ற அளவில் - மிகமிக நுண்ணிய அளவில் நமது உடலில் மெத்தனால் இருக்கும். ஆனால், ஒரு கிலோ உடல் எடைக்கு வெறும் 0.1 மில்லிலிட்டர் என்கிற வீதத்தில் உடலில் மெத்தனால் சேர்ந்துவிட்டால்கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
- மெத்தனால் வளர்சிதை மாற்றத்தின் இறுதியில் உருவாகும் பாமிக் அமிலம் கூடினால் உடலின் அமில - காரத் தன்மை சமநிலை பாதிக்கப்படும். மெத்தனால் கொண்ட சாராயத்தைக் குடிக்கும்போது பாமிக் அமிலத்தின் அளவு கூடும். இதன் காரணமாக வளர்சிதைமாற்ற அமிலத்துவம் (metabolic acidosis) என்ற நிலைக்கு உடலை எடுத்துசெல்லும். அப்போது பைகார்பனேட் அயனியின் செறிவு குறைந்து, ரத்தத்தின் அமிலத்தன்மை மேலெழும்.
- மேலும் சைட்டோக்ரோம் ஆக்சிடேஸ் எனப்படும் நொதியின் செயல்பாட்டில் பாமிக் அமிலம் தாக்கம் செலுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக செல்களின் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் திறன் குறைந்துபோகிறது. எனவே, செல்களில் லாக்டிக் அமிலம் கூடுதலாக உருவாகும். இதன் தொடர்ச்சியாகவும் ரத்தத்தின் அமிலத்தன்மை கூடும். மெத்தனால் செறிவுள்ள மதுபானம் இரண்டு வகைகளில் ரத்தத்தின் அமிலத்தன்மையை மேலெழச் செய்துவிடும்.
- ரத்தத்தில் செறிவடையும் அமிலம் காரணமாக அதன் அமில கார சமநிலை (pH) அளவு குறைந்து, அமிலத்தன்மை உயரும். இதன் தொடர்ச்சியாக அமிலரத்தம் (acidaemia) என்கிற உடல் சீர்கேடு உருவாகும். அமிலரத்தம் காரணமாகக் கண்பார்வை நரம்பு பாதிப்பு, விழித்திரை சிதைவு, பெருமூளை வீக்கம், மூளையில் ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மரணம்கூட ஏற்படலாம்.
சிகிச்சை என்ன?
- இரைப்பை, குடல் வழியே மெத்தனால் உடலுக்குள் சென்றுவிடும். உள்ளே செல்லும் மெத்தனாலை நமது உடலால் எளிதில் வளர்சிதைமாற்றம் செய்து அகற்றிவிட முடியாது. குடித்த 48 மணிநேரத்துக்குப் பின்பும் சுமார் மூன்றில் ஒரு பகுதி உடலில் தங்கியிருக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது. குடித்த 90 நிமிடத்தில் ரத்தத்தில் அதிகபட்ச மெத்தனால் அளவு ஏறிவிடும்.
- மெத்தனால் நச்சு ஏற்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற இரண்டு அவசரகால வழிமுறைகள் கையாளப்படும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல மருத்துவத் தரமுள்ள எத்தனாலைத் தருவார்கள். ADH நொதிக்கு மெத்தனாலைவிட எத்தனால்தான் பிடிக்கும். எனவே, மருத்துவர் தரும் எத்தனாலைப் பத்து மடங்கு கூடுதலாக வளர்சிதைவு செய்ய முதலில் முயலும். இதன் தொடர்ச்சியாக மெத்தனால் பார்மால்டிஹைடாக மாறுவது தடுக்கப்படும். இரண்டாவதாக மெத்தனால், எத்திலீன் கிளைகால் நச்சுக்களுக்கு நச்சு முறிவு மருந்தாகப் பயன்படும் ஃபோமெபிசோல் (Fomepizole) மருந்தை அளித்து முறிவு செய்வார்கள். ஃபோமெபிசோல் வேதிப்பொருள் ADH நொதியின் செயல்பாட்டை மந்தமடையச் செய்யும். எனவே, மெத்தனால் பார்மால்டிஹைடாக மாறும் வேகம் குறையும். ஃபோமெபிசோல் மருந்தின் விலை மிக மிக அதிகம்; மருத்துவத் தர எத்தனாலைத் தேர்ச்சி பெற்ற மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் மட்டுமே தர முடியும். எல்லா மருத்துவமனைகளிலும் இந்தச் சிகிச்சையை எளிதில் அளிப்பது கடினம்.
- ஃபோமெபிசோல் தவிர ஃபோலினிக் அமிலமும் மெத்தனால் நச்சு முறிவாகச் செயல்படும். ஃபோலினிக் அமில வினையின் தாக்கத்தில் கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆக பாமிக் அமிலம் மாறிவிடும். சில நேரம் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் மெத்தனால், பாமிக் அமிலம் முதலியவற்றை ரத்தத்திலிருந்து அகற்றவும் முயலப்படும்.
- மெத்தனால் செறிவுள்ள மதுவைக் குடித்த பின்னர் சுமார் 18-24 மணிநேரம் கடந்த பின்னர்தான் ரத்தத்தில் ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு பாமிக் அமிலச் செறிவு ஏற்படும். மெத்தனால் மாசும், எத்தனால் செறிவும் உள்ள மது பானத்தைக் குடித்தால் முதலில் எத்தனாலை மட்டுமே உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாக்கும்; எனவே நச்சின் விளைவு ஓரிரண்டு நாள்கள் கடந்த பின்னர்தான் வெளிப்படும். எனவே, மருத்துவ சிகிச்சை தரப்படுவதற்குக் கால தாமதம் ஏற்பட்டு உயிரைக் காக்கும் வாய்ப்பு குறையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 06 – 2024)