TNPSC Thervupettagam

சிறப்பு மாநில அந்தஸ்து

June 19 , 2024 12 days 88 0
  • அரும்பான்மையைப் பெறாததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (16 தொகுதிகள்), பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (12 தொகுதிகள்) முக்கிய அங்கம் வகிக்கின்றன. எனவே, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையின்போது நிதிஷ், சந்திரபாபு நாயுடு இருவரும் தமது மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து (Special Category Status) வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீர்மானம்:

  •  பிஹாருக்கும் ஆந்திரத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது அம்மாநில மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அம்மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் இதனை வலியுறுத்திவருகின்றனர். கடந்த நவம்பர் மாதம், மாநிலச் சட்டமன்றத்தில் பிஹாருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வென்றதன் மூலம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவும் கடந்த காலங்களில் ஆந்திரத்துக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் அங்கம் வகிக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் ‘மாநில சிறப்பு அந்தஸ்து’ கோரிக்கை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்:

  • ஒரு மாநிலம் புவியியல்-நில அமைப்புரீதியாகவும், சமூகப் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருந்தால், அம்மாநிலத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. 5ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, 1969ஆம் ஆண்டு மாநில சிறப்பு அந்தஸ்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, முதலாவதாக அன்றைய ஜம்மு - காஷ்மீர், அசாம், நாகாலாந்து மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது அதன் பின்னர் இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கும் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இறுதியாக, 2014இல் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி மாநிலமாக உருவான தெலங்கானாவுக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைத்தது (இவற்றில் ஜம்மு - காஷ்மீர் 2019இல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுவிட்டது).

அளவுகோல்கள்:

  •  ஒரு மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு - கீழ்க்கண்ட அளவுகோல்கள் பரிசீலிக்கப்படும்: மலைப் பகுதி போன்ற கடினமான நிலப்பரப்பைக் கொண்ட மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்துக்குப் பரிந்துரைக்கப்படும்; மலைப் பிரதேசங்களில் உற்பத்தித் தொழிற்சாலைகளை உருவாக்குவது சிரமம் என்பதால், அங்கு வளர்ச்சி தடைபடும் என்பதே இதற்குக் காரணம். குறைந்த மக்கள்தொகையுடன், கணிசமான எண்ணிக்கையில் பழங்குடியினர் வசிக்கும் மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும். அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களும் பொருளாதாரம், உள்கட்டமைப்பில் பின்தங்கியுள்ள மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து பெற கோரிக்கை விடுக்கலாம். பல்வேறு காரணங்களால் மாநில அரசு போதுமான நிதி ஆதாரத்தைத் திரட்ட முடியாத நிலையில் இருக்கும்போது சிறப்பு அந்தஸ்து கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

சலுகைகள்:

  • சிறப்பு அந்தஸ்து கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களைவிடக் கூடுதலாக நிதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு 69% முதல் 75% வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதுவே சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலத்துக்கு 90% வரை நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறாக, பொது மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலங்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்து கூடுதலாக நன்மை பெறுகின்றன. மேலும், சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

பிஹார் - வறுமையை நீக்க...

  •  மத்திய அரசின், தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 5 (2019- 2021) இன்படி, இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக பிஹார் உள்ளது. பிஹாரின் மக்கள்தொகையில் 33.76% பேர் பல்பரிமாண வறுமைக் குறியீட்டில் உள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்டிருப்பதால் பிஹாருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என நிதிஷ் குமார் உள்ளிட்ட அம்மாநில அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
  • இதற்கிடையில் 2013இல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களைக் கண்டறிய, அப்போதைய தலைமை நிதி ஆலோசகர் ரகுராம் ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் முடிவில் பிஹார், ஒடிஷா ஆகியவை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிஹாருக்கான மாநில சிறப்பு அந்தஸ்து கோரிக்கை வலுப்பெற்றது.

ஆந்திரா - வருவாய் இழப்பு:

  •  2014இல் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. தலைநகரம் ஹைதராபாத் தெலங்கானாவுக்குள் வந்தாலும் பத்தாண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடு 2024 ஜூன் 2 அன்று நிறைவடைந்தது. ஹைதராபாத்தை இழந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு ஆந்திரம் கோரிக்கை விடுத்துவருகிறது.
  • ஆந்திரப் பிரதேசத்துக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாய்மொழியாக 2014இல் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். மாநில சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்திக் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திரத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories