சொல் வேண்டாம், அமைதி போதும்!
- ‘சார்லி சாப்ளின் குரல் எப்படி இருக்கும்? அவர் ஏன் பேசுவதில்லை? ஏன் எந்த மேடையிலும் தோன்றுவதில்லை? பேசும் படம் வந்த பிறகும் ஏன் அவர் மெளனப் படமாக எடுத்துத் தள்ளுகிறார்? வசனம் பேசி நடிப்பது கடினம் என்று நினைக்கிறாரா? திரைப்படத்துக்குச் சொற்கள் தேவை இல்லை என்று நம்புகிறாரா? இதுவே பழகிவிட்டது என்று அமைதியாக இருந்துவிட்டாரா? என் வேலை நடிப்பது, பேசுவது அல்ல என்பதுதான் அவர் கொள்கையா? நடிக்கப் பழகிக்கொண்டதுபோல் பேசப் பழகிக்கொள்ளவில்லையோ? பயம்? கூச்சம்? தயக்கம்?’ எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபோது என்ன நடந்தது என்பதைச் சொன்னால் நான் ஏன் பேசத் தயங்குகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்துவிடும். அறிவிப்பு வந்துவிட்டது. வாழ்த்துகள் குவியத் தொடங்கிவிட்டன.
- தேதி அறிவித்துவிட்டார்கள். எல்லாரையும்போல் நானும் ஒரு நீண்ட உரையைத் தயாரிக்கத் தொடங்கினேன். இரவு, பகலாகச் சிந்தித்து, ஒரு கத்தைக் காகிதத்தைக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட்டு, இறுதியாகத் தயாரித்து முடித்த உரை. எப்படிப் பேச்சைத் தொடங்க வேண்டும்? என்னவெல்லாம் பேச வேண்டும்? எப்படி முடிக்க வேண்டும்? யாரை எல்லாம் குறிப்பிட வேண்டும்? யார், யாருக்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டும்? என்னென்ன செய்திகளை எல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும்? எல்லாவற்றையும் தெளிவாகக் குறித்துக் கொண்டு கிளம்பினேன். வயதாகிவிட்டது. உடல் தளர்ந்திருந்தது. மெல்ல மெல்லதான் நடந்தேன் என்றாலும் கால்கள் மெலிதாகத் தள்ளாடுவதை உணர்ந்தேன். தடதடவென்று அடித்துக்கொண்டிருந்தது இதயம். எங்கும் வெளிச்ச மழை.
- பல மனித முகங்களைக் கொண்ட மாபெரும் கடல் ஒன்று என் முன்னால் அமர்ந்திருந்தது. எல்லார் கண்களும் என்மீது குவிந்திருந்தன. நான் பேச நினைத்ததை எல்லாம் பேசிவிட முடியுமா? என் பெயர் அறிவிக்கப்பட்டது. நான் என் பார்வையைத் திருப்பினேன். அதன்பிறகு நடந்தவற்றை ஒரு கனவு என்றுதான் அழைக்க வேண்டும்.
- முதலில் எழுந்து நின்ற பார்வையாளர் யார் என்று தெரியவில்லை. இன்னொருவர், மற்றொருவர் என்று ஒவ்வொருவராக எழுந்து நிற்கத் தொடங்கினார்கள். ஒரு கண், இன்னொரு கண், மற்றொன்று என்று எல்லாக் கண்களிலும் தீபோல் ஒளி தோன்ற ஆரம்பித்தது. ஒருவரிடம் தோன்றிய உற்சாகம் இன்னொருவரைப் பற்றிக்கொண்டது. முதலில் மலர்ந்த புன்னகை யாருடையது என்று தெரியவில்லை.
- என் கண் முன்னால் இருந்த அத்தனை உதடுகளிலும் அந்தப் புன்னகையைக் கண்டேன். முதல் கரவொலி எங்கிருந்து கிளம்பியது என்று சொல்ல முடியவில்லை. எந்தப் பொந்தில் இருந்து கிளம்பி இருந்தாலும் கண நேரத்தில் அது காட்டுத்தீயாகப் பரவி நின்றது. முழுக்கடலும் ஒரே அலையாக வானம்வரை எழுந்து நின்று ஆர்ப்பரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
- ஒரு நிமிடம். இரண்டு நிமிடங்கள். மூன்று... நான்கு... ஐந்து. ஒருவரும் அமரவில்லை. ஒருவருக்கும் போதும் என்று தோன்றவில்லை. ஆறு...ஏழு... எட்டு. தட்டித் தட்டி, பாவம் அந்தக் கைகளுக்கு வலிக்காதா? மனித உதடுகளால் இவ்வளவு பெரிய புன்னகையை இவ்வளவு காலம் ஏந்தி நிற்க முடியுமா? வரலாமா என்று கேட்டுவிட்டு, தயக்கத்தோடு காத்துக்கிடந்த முதல் கண்ணீர்த் துளி என் கண்களிலிருந்து உருண்டு ஓட ஆரம்பித்தது. இன்னொரு துளி. இன்னொன்று. என் உதடுகள் ஒட்டிக்கொண்டன. என் கால்கள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. எங்கே கவனம் குவிப்பது என்று தெரியாமல் என் கண்கள் அலைபாய ஆரம்பித்தன.
- மேடையில் இருந்தோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. இதுவரை இப்படி நடந்ததில்லை, இதுவே முதல் முறை என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். எனக்குத் தெரிந்துவிட்டது. இந்தக் கரங்கள் இன்று அமைதிகொள்ளப் போவதில்லை.
- இந்த ஒலி அடங்கப் போவதில்லை. வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன். நான் இன்று பேசப் போவதில்லை. பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் தயாரித்து எடுத்து வந்த தாள் என் கண் முன்னால் பறந்து சென்று வானத்தில் கரைந்தது. அதிலிருந்த சொற்கள் எல்லாம் சிதறி, சிதறி நட்சத்திரம்போல் வானத்தை நிறைத்தன.
- என்னால் யாருடைய பெயரைம் குறிப்பிட்டு நன்றிகூற இயலவில்லை. இந்த விருது குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்று எடுத்துச்சொல்ல முடியவில்லை. இருந்தும் நான் பகிர்ந்துகொள்ள விரும்பிய அனைத்தையும் அன்று தெளிவாகப் பகிர்ந்துகொண்டதாகவே கருதுகிறேன். என்னுடைய அமைதிதான் என் படம். என்னுடைய அமைதிதான் அன்று நான் நிகழ்த்திய உரை. என் படத்தைப் புரிந்துகொண்டதைப் போலவே, என் அமைதியை என் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். என் அச்சம் நீங்கிவிட்டது.
- உண்மையில், என்னைவிடச் சிறந்த உரையை என் மக்கள் அன்றைக்கு ஒன்றுசேர்ந்து நிகழ்த்தி யிருக்கின்றனர். ‘சாப்ளின், நீ ஒரு சொல்கூடப் பேச வேண்டியதில்லை. உன்னுடைய அமைதி, சொற்களைக் காட்டிலும் ஆழமானது. உன் வலி, உன் மகிழ்ச்சி, உன் போராட்டம், உன் கனவு, உன் விருப்பம், உன் அரசியல் அனைத்தையும் நீ வாயே திறக்காமல் உணர்த்திவிட்டாய்.
- எப்படி எங்களிடம் உரையாடுவதற்கு உனக்குச் சொற்கள் தேவைப்படவில்லையோ அதேபோல் உன்னோடு உரையாடுவதற்கும் எங்களுக்குச் சொற்கள் தேவைப்படவில்லை. நாங்கள் எப்போதும் உன்னோடு இருப்போம் சாப்ளின். நீ எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வாய்!’
- சார்லி சாப்ளின்
- நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது.
- இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. நம் துன்பங்கள்கூட.
- எளிமை என்பது அடைவதற்குக் கடினமானது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)