TNPSC Thervupettagam

சோனம் வாங்சுக் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்

March 16 , 2024 301 days 297 0
  • இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2019 ஆகஸ்டு மாதம், தனது மாநில அந்தஸ்தை இழந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் என்னும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் - பாண்டிச்சேரி போல சட்டசபையைக் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் - சண்டிகரைப் போல, நேரடியாக ஒன்றிய அரசுப் பிரதிநிதியால் நிர்வகிக்கப்படும் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டன.
  • லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது, 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட லடாக்கி சமூகம் இதை வரவேற்றுக் கொண்டாடியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, லடாக்கி கலாச்சாரம் மற்றும் மொழி போன்றவற்றுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. முந்தைய முறையில், லடாக் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்தபோது, தன்னாட்சி பெற்ற லடாக் மலைப்பகுதி மேம்பாட்டுச் சபை வழியாக லடாக் நிர்வாகம் செய்யப்பட்டது. இந்தச் சபையின் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • அதற்கும் முன்பு, ஜம்மு காஷ்மீரின் கீழ் லடாக் இருந்த காலத்தில், லடாக்கிய மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீநகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. மேலும் லடாக்கிக் குழந்தைகள், அவர்கள் தாய்மொழியை விட்டு, உருது மொழியில் பள்ளிக்கல்வி பயில வேண்டியிருந்தது. லடாக்கிக் குழந்தைகள் உருது வழியே கல்வி பயில்வதில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். 95% லடாக்கி குழந்தைகள் பள்ளி இறுதித் தேர்வையே தாண்ட முடியாதவர்களாக இருந்தார்கள்.

வாங்க்சுக்கின் பெரும்பணி

  • இது தொடர்பாக லடாக்கிய மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். சோனம் வாங்க்சுக்கின் தந்தை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர். சோனம் வாங்சுக் ஸ்ரீநகர் தேசியப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துப் பட்டம் பெற்றார்.
  • லடாக்கி மாணவர்கள் கல்வி பெறச் சிரமப்படுவதைக் கண்டு, அவர்கள் பள்ளி இறுதித் தேர்வைத் தாண்ட பயிற்சி தரத் தொடங்கினார். அது பின்னாளில், லடாக்கிய மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (Students’ Educational and Cultural Movement of Ladakh - SECMOL) என்னும் இயக்கமாக மலர்ந்தது.
  • அரசுக் கல்வித் துறையின் உதவியோடுபுதிய நம்பிக்கைஎன்னும் திட்டத்தைத் தொடங்கினார். லடாக்கிய பள்ளிக்கல்வியை எளிமையாக்கவும், லடாக்கியக் குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வியைத் தரவும் உழைத்தார். இதன் வழியே, லடாக்கி மாணவர்கள் தேர்வுகளில் எளிதாக வெற்றிபெற முடிந்தது.
  • லடாக் மலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இணைந்து, கல்வி மற்றும் சுற்றுலாத் துறைக்கான நீண்ட காலத் திட்டங்களைத் தீட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2005ஆம் ஆண்டு, தொடக்கக் கல்விக்கான தேசிய நிர்வாகக் குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புத்தாக்கத் தீர்வுகள்

  • சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எளிதான, புத்தாக்கத் தீர்வுகளை சோனம் வாங்க்சுக் உருவாக்கினார். எடுத்துக்காட்டாக, பூமி வெப்பமாதலின் காரணமாக, லடாக் மலைகளில் பனிப்பாளங்கள் உருகி, லடாக் மலைப்பகுதிகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட, பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
  • சோனம் வாங்க்சுக், குளிர்காலத்தில் வரும் அதீத நீரை மடைமாற்றி, செயற்கையாகப் பனிப் பாளங்களை உருவாக்கினார். இவை ஸ்தூபிகள் வடிவில் அமைந்ததனால், அவைபனி ஸ்தூபிகஎன அழைக்கப்பட்டன. இந்தப் பனி ஸ்தூபிகள், கோடைகாலத்தில் உருகி, மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கின்றன. இதன் மூலம் உள்ளூர் மக்களின் நீர்த் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது.
  • அடுத்தபடியாக, மாணவர்கள் உள்ளூரிலேயே கல்வி பயில தனது செக்மோல் (SECMOL) நிறுவனத்தின் மூலம் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்கினார். இந்தக் கல்வி நிலையம், உள்ளூரின் கிடைக்கும் பொருட்களை வைத்தே கட்டப்பட்டது. இதன் வடிவமைப்பு, கிடைக்கும் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி அதன் மூலம் மொத்தக் கல்வி நிலையத்துக்கும் தேவையான வெப்ப ஆற்றலை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
  • வெளியே -20 டிகிரி குளிர் இருக்கையில், கட்டிடத்தின் உள்ளே +15 டிகிரி வெப்பம் கிடைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், உலகின் சுற்றுச்சூழலுக்கு இயைந்த கட்டிடம் எனப் போற்றப்பட்டு, பல விருதுகளைப் பெற்ற ஒன்றாகும். சூரிய ஆற்றலினால் இயங்கும் உணவகம், சூரிய ஒளி மின்சாரம் என, இந்தக் கட்டிடம் 100% சக்தி தற்சார்பு கொண்ட ஒன்றாகும்.

செக்மோல் வளாகம்

  • சமூக இயக்கத்தின் அடுத்தபடியாக நவ லடாக்கிய இயக்கம் (New Ladaki Movement) என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார் சோனம் வாங்சுக். இது லடாக்கின் கல்வி, பொருளாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் இயக்கமாகும்.

தற்போதைய பிரச்சினை

  • ஜம்மு காஷ்மீர் 2019ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர், லடாக் மக்களும் கார்கில் மக்களும் இணைந்து, தங்களுக்கான ஒரு தன்னாட்சி அமைப்பை வழங்குமாறு போராடிவருகிறார்கள். லடாக் பகுதியில் பெரும்பாலும் புத்த மதத்தவரும், கார்கில் பகுதியில் இஸ்லாமியர்களும் வசித்துவருகிறார்கள். லடாக்குக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து இரு தரப்புமே இணைந்து போராடிவருகிறார்கள். இதற்கு முன்பு லடாக்கியர்களும் கார்கில் வாசிகளும் அரசியல் தளத்தில் எதிரெதிரே நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • லடாக் பிரதேசத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதே லடாக்கியர்களின் முக்கியக் கோரிக்கை. 6வது அட்டவணையில், லடாக் சேர்க்கப்படுவதால், லடாக்குக்கு என்ன நன்மை? அப்படிச் சேர்க்கப்பட்டால் தன்னாட்சி பெற்ற மாவட்ட, பிராந்திய கவுன்சில்களை லடாக் பகுதி உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கவுன்சில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். வனப்பகுதி நிர்வாகம், வேளாண்மை, கிராம - நகர நிர்வாகம், திருமணம், விவாகரத்து, சமூகப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விஷயங்கள் முதலியவற்றை அவர்களே நிர்வகித்துக்கொள்ளும் அதிகாரம் இந்தக் கவுன்சில்களுக்குக் கிடைக்கும்.
  • இந்த அட்டவணை மேலும் இந்தத் தன்னாட்சி அமைப்புகளுக்கு நில வரி விதிப்பு, கனிம உரிமைகளுக்குக் குத்தகை அல்லது உரிம வரிகள், வரிவிதிப்பு அதிகாரம், வர்த்தகங்களைக் கண்காணித்தல் போன்ற அதிகாரங்களை வழங்குகிறது. சாலைகள், பள்ளிகள், சந்தைகள் போன்றவற்றை உருவாக்கும் அதிகாரங்களையும் வழங்குகிறது
  • இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, லே உச்ச அமைப்பு (Apex Body of Leh) மற்றும் கார்கில் மக்களாட்சிக் கூட்டமைப்பு (Kargil Democratic Alliance) என்னும் அமைப்புகள், லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து போராடிவருகின்றன.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக்

  • லடாக்கை அரசமைப்புச் சட்டத்தின் 6வது பிரிவில் இணைப்பது தொடர்பாக பாஜக கடந்த காலத் தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியிருப்பதை நினைவுபடுத்தும் சோனம் வாங்க்சுக், 2019ஆம் ஆண்டு லடாக் மலை மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல்களிலும் இந்தக் கோரிக்கையை பாஜக முன்வைத்தது என நினைவுறுத்துகிறார்.
  • மூன்று லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பகுதிக்கு தன்னாட்சி பெற்ற மாநில அந்தஸ்து தேவையா என்னும் கேள்விக்கு, சிக்கிம் மாநிலத்துக்கு தன்னாட்சி அளிக்கப்பட்டபோது அதன் மக்கள்தொகை 2.5 லட்சம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார். “இன்று லடாக் எங்கள் மக்கள் பிரதிநிதிகளால் ஆளப்படாமல், தொலைதூரத்தில் இருக்கும் டெல்லி அரசின் பிரதிநிதியால் ஆளப்படுகிறது. லடாக் ஏதோ காலனி அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு பகுதி போல உள்ளதுஎன்கிறார் சோனம் வாங்சுக்.
  • இது தொடர்பாக, லடாக் மற்றும் கார்கில் மக்கள் குழுக்கள் ஒன்றிய அரசின் துணைக் குழு மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட, மார்ச் 6ஆம் தேதி முதல் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் லடாக்கில் தொடங்கியிருக்கிறார். மைனஸ் 10-15 டிகிரி குளிரில், வானமே கூரையாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது, லடாக் மற்றும் கார்கில் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது.
  • ஆனால், இந்தியாவின் ஊடகங்கள் இதை முன்னிலைப்படுத்த வழக்கம்போல முன்வரவில்லை.

நன்றி: அருஞ்சொல் (16 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories