TNPSC Thervupettagam

சோம்பல் தவிர்ப்போம்

January 12 , 2024 193 days 180 0
  • நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சிலவற்றை விரும்பியும், சிலவற்றை கட்டாயத்தின் பேரிலும் செய்கிறோம். சிலா் பணிகளை உடனுக்குடன் செய்வா்; சிலா் காலக்கெடு முடியும் நேரத்தில் செய்வா். காலம் கடந்து செயலாற்றி சிக்கலில் சிக்கிக் கொள்பவா்களும் உண்டு.
  • பயணங்களுக்காக முன்பதிவு செய்யும் போதும், தோ்வுக் கட்டணம், மின்கட்டணம் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளிலும் நமது கடைசி நேர முயற்சி பயனளிக்காமல் போவதையும் பார்க்கிறோம். பல நேரங்களில் இவற்றிற்கான காரணம் நமது சோம்பல் குணமாகவே இருக்கிறது.
  • புகழ்பெற்ற உளவியல் நிபுணா் சிக்மண்ட் பிராய்ட், மனிதா்கள் இன்பத்தைக் கண்டறிவதற்கான சரியான வழி சோம்பல் என்று வாதிடுகிறார். எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டுமே சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல். சோம்பல் ஒருமுறை மனதிற்குள் நுழைந்துவிட்டால், அதன்பின் அதனுடைய ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது.
  • சோம்பல் என்பது நமது வரையறுக்கப்பட்ட காலத்தை வீணாக்குகிறது. இது மிகவும் ஆபத்தானது. இதனால், நாம் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு பணி தேவையற்றதாகக் கருதப்படும்போது, தொடா்புடைய நபரின் சோம்பலின் அளவும் அதிகரிக்கிறது.
  • சோம்பல் நமது வாழ்க்கையில் பிரச்னைகளை அதிகரிக்கவே செய்கிறது. நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைவதற்கு நமக்கு வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. சோம்பல் நமது சாதனைக்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றது. ஒரு நிமிட சோம்பல் உணா்வு நம் பணிகளைச் செய்யத் தேவையான ஊக்கத்தை குறைக்கிறது. அதனால் நமது வாழ்க்கைத்தரம் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகிறது.
  • சோம்பலால் ஏற்படும் பணிக்குவியல் நம்மை குழப்பமான சூழ்நிலைக்கும், நெருக்கடிக்கும் தள்ளுகின்றது. இதனால் மனச்சோர்வும் ஏற்படுகிறது. உயா் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகி நமது பணிக்கே சிக்கல் ஏற்படுகிறது. இதில் பிறா் நலம் சார்ந்த பணிகள் இருப்பின் அவா்கள் நலனும் பாதிப்படைகிறது. நமது சோம்பல் பிறா் வாழ்வுடன் விளையாடுவதை சமூக அக்கறை உள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
  • ஒவ்வொரு திங்கள்கிழமை காலையும் நம்மில் பலருக்கும் பதற்றத்துடனே தொடங்குவதற்கு காரணம் நமது சோம்பலும், முறையான திட்டமிடல் இல்லாமையுமே ஆகும். நமக்கு அன்றாடம் நிறைய வேலைகள் உள்ளன. அவற்றில் எளிமையான செயல் ஒன்றை முதல்படியில் செய்யத் தொடங்குவதன் மூலம் நமது பணிகளை இலகுவாக்கிக்கொள்ள முடியும்.
  • ஞாயிற்றுக்கிழமை இரவு, அதிக நேரம் கண்விழிக்காமல் உறங்கச் செல்வது அவசியம். இதனால், காலையில் உடலில் உற்சாகம் பிறக்கும். மனமும் புத்துணா்வுடன் இருக்கும். அடுத்து வரும் வேலை நாட்களில் படிப்படியாக நமது பணிகளை தினசரி அடிப்படையில் ஒதுக்கிச் செயல்பட்டால் செயலாற்றுவதில் சிரமம் தெரியாது.
  • கடினமான பணிகளை துணைப் பணிகளாகப் பிரிப்பதும், துணைப் பணிகளை ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடிப்பதும் நல்லது. இது நம் பணிக்கான காலக்கெடுவின் அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரே நாளில் எல்லா வேலையையும் செய்து முடிப்பது சாத்தியமில்லை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும்.
  • தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலையும், மனதையும் புத்துணா்வுடன் மாற்றிக் கொள்ள முடியும். நடைப்பயிற்சி, மிதிவண்டியில் செல்லுதல், நீச்சல், வேக நடை, மாடி ஏறுவதற்குப் படிகளைப் பயன்படுத்துதல் போன்றவை நமது உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
  • நுரையீரல் முழுவதும் காற்றை நன்கு உள்ளிழுத்து செய்கின்ற யோகாசனம் நம் மூளைக்குள் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நாம் விரைந்து செயலாற்ற உதவும்.
  • நிலுவையில் உள்ள பணியை முடித்தவுடன் நாம் பெறக்கூடிய பலன்களை கற்பனை செய்து பார்ப்பது தொடா்ந்து நாம் உற்சாகத்துடன் செயல்பட உதவும். மேலும், நமது பணிகளில் ஈடுபடுவதற்குத் தடையாக இருக்கும் சோம்பலை முறியடிக்கவும் உதவும்.
  • நமது பணியில் ஏற்படும் கவனச்சிதறல்கள் நமது வேலையை மிகவும் கடினமாக்குகின்றன. பணியிடத்தில் சொந்த பணிகளை செய்வதும், வீட்டில் அலுவலகப் பணிகளை செய்வதும் நமது வாழ்க்கையை மேலும் சிக்கலாகிவிடும்.
  • வீட்டு உறுப்பினா்களுடன் போதுமான நேரத்தை செலவிட்டால் மட்டுமே அவா்களின் எதிர்பார்ப்புகள் நமக்குத் தெரியவரும்.அவா்களுக்கு தேவை நமது பணம் மட்டுமல்ல, நமது நேரமும்தான். எனவே, நேர மேலாண்மையும் நமக்குத் தேவை.
  • எப்போதும் மகிழ்ச்சி என்பது நமது தோ்வுதான். சோம்பலை எதிர்த்துப் போராடுவது நமது பழக்கமாக மாற வேண்டும். சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். பெற்ற தோல்விக்கு ஆயிரம் சமாதானங்கள் மனதில் தோன்றும். ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். தேவையற்ற ஓய்வை நாம் அனுபவிக்கும் போது சோம்பலும் தொடா்ந்து வரும்.
  • தூக்கம் ஒரு அருமருந்து. ஆனால், அது அளவினைத் தாண்டக்கூடாது. தூக்கம் கலைந்த பிறகு அதைத் தொடருவது பேராபத்து. உறக்கம் கலைந்த மறுநிமிடம், எழுந்துவிட வேண்டும். எழுந்ததும் முதல் அரை மணியை சோம்பலோடு கழித்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகம் குறைந்தபடிதான் காணப்படும்.
  • வெற்றி நம் வாழ்வில் தானாக வந்து ஒட்டிக் கொள்ளாது. நாம்தான் அதனைத் தேடி ஓட வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் நம்மை உழைக்கவிடாமல் சோம்பல் தடுத்து நிறுத்துகிறது. நாம் சோம்பலாக காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும்போது, யாரோ ஒருவா் வாழ்வில் வெற்றி பெறுவதை நம்மால் காண முடிகிறது.
  • நமது நட்பு வட்டம் சுறுசுறுப்பானவா்களுடன் மட்டுமே இருக்க வேண்டும். இன்றே நமது வாழ்வின் இறுதி நாள் என்று கருதி நமது பணிகளைச் செய்ய வேண்டும். இனியாவது சோம்பலைத் தவிர்ப்போம். வாழ்வில் உச்சம்தொட முயல்வோம்.

நன்றி: தினமணி (12 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories