TNPSC Thervupettagam

சோற்றுக்கு வந்த பஞ்சம்

August 12 , 2024 11 hrs 0 min 17 0

சோற்றுக்கு வந்த பஞ்சம்

  • சோறு என்று சொல்வது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. சாதம் என்று நவில்வது ‘மேலோர்’ வழக்கு. ‘ரைஸ்’ என்பது நாகரிகர் பயன்பாடு; ‘ஒயிட் ரைஸ்’ நனி நாகரிகர் உச்சரிப்பு. ‘அன்னலட்சுமி’, ‘அன்னபூரணி’ போன்ற சொற்கள் வழக்கில் உண்டெனினும் அன்னம் எனச் சொல்வோர் தமிழில் மிகக் குறைவு. தெலுங்கில் அன்னம் என்பது பெருவழக்கு. தமிழின் பழைய பயன்பாடு சோறுதான். ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது சான்று. ‘சோ’வுக்கு மோனையாக முன் வந்தது சோறு என்பாரும் இருப்பர். சாதம் என்பதும் அன்னம் என்பதும் பிற்கால வரவுகள்.
  • அன்ன விக்கிரயம் கூடாது என்பது பண்பாடு. அதாவது, சோற்றை விற்கக் கூடாது. அது பசித்தவர்க்குத் தானமாக அளிக்கப்பட வேண்டியது. ‘அம்பரமே தண்ணீரே சோறே’ என்று நந்தகோபன் அளிக்கும் அறச்செயல்களைப் பட்டியலிடும் ஆண்டாள் அதில் சோற்றையும் சேர்க்கிறார். ‘அன்னமிட்டு உண்’ என்பது அறிவுரை. மேற்கத்தியப் பண்பாடு நுழையுமுன் இங்கு உணவகங்கள் இல்லை. மக்கள் சத்திரங்களில் தங்கினர். அச்சத்திரங்களில் தங்காதோர் உறவினர் அல்லது சாதிக்காரர் இல்லங்களில் அதிதிகளாக உணவு உண்டனர்; திண்ணையில் தூங்கினர். ஊர்தோறும் அதன் வழியெங்கணும் ‘அன்னசத்திரங்கள் ஆயிரம்’ நாட்டினர். அப்படி ஒரு சத்திரத்தில் இரவுச் சோறு சமைத்து இலையில் போடுவதற்குள் காலை பிறந்து ‘வெள்ளி முளைத்து’ விட்டது. அச்சோகத்தை ஒருவர் நகைச்சுவைப் பாடலாகப் பாடியும் விட்டார். சோறு என்பது புண்ணியம்.
  • தி.ஜ.ர.வின் பசி பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்று ‘அன்னம் பிராணன்’ என்கிற மகா வாக்கியத்தோடு முடியும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார்தானே! ‘வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்... இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்றான் அண்மைக் கவி. இன்னொரு வள்ளல் பசியாற்றப் பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு, இன்னும் அணையாமல் எரிகிறது. பசி இருக்கும் வரை சோறு இருக்கும். ‘இதயத்தை அடையக் குறுவழி வயிறு’ என்றனர் சீனர். பசியாற்றுதலைப் போற்றியது ஓர் இலக்கியம். அதற்கு ஒரு பாத்திரத்தையும் கண்டுபிடித்து ‘அமுதசுரபி’ என்று பெயரும் இட்டது. ‘அட்சய பாத்திரம்’ என்றனர் மகாபாரதம் பயின்றோர். சோறு என்பது உயிர்.
  • உப்பைப் போல சோறும் நன்றியின் அடையாளம்தான். சோறிட்டவருக்கு விசுவாசமாய் இருக்கப் பண்பாடு வலியுறுத்துகிறது. மேலும் அது ஒரு கடன். அந்தச் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கக் கருதிய ஒருவன், தவறு இழைத்தவனுக்கும் உதவியாய் இருந்தான். சோறு என்பது நன்றி.
  • சோற்றுக்கு அன்னம், சாதம் என்பதைத் தவிர அதிக புழக்கத்தில் இல்லாத அமுது, பருக்கை, அடிசில், உண்டி, அமலை, அழுப்பு, புழுக்கல், அவிழ், அயினி, ஊண் போன்று பல சொற்களும் உண்டு. அரிசிச் சோறு, கம்பஞ் சோறு, பழஞ்சோறு, கூட்டாஞ்சோறு, பெருஞ்சோறு, சிறு சோறு, வெண்சோறு என்று வேறு சொற்களைச் சேர்த்துக்கொண்டு, வெவ்வேறு பொருள்களையும் சோறு தரும். சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் என் தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தேன். “இப்பொழுதெல்லாம் காலையில் Fermented rice தான் சாப்பிடுகிறோம்” என்றார் தங்கையின் கணவர். நான் திகைக்க, “அது ஒன்றும் இல்லை, பழைய சோறுதான்” என்றார் என் தங்கை சிரித்துக்கொண்டே. சோறு வர்க்கம் பிரதிபலிக்கும் கண்ணாடி.
  • இன்று ‘வெரைட்டி ரைஸ்’ என்று சொல்லும்போது ‘கெத்தாக’ இருக்கிறது. கலந்த சாதம் என்று விளிப்பவரைக் கொஞ்சம் குறைவாகவே எடை போடுகிறது நமது பொதுப் புத்தி. 1950, 60களில் இவற்றைச் சித்ரான்னங்கள் என்று சொல்வதே தமிழில் பழக்கம். தெலுங்கில் இன்றும் அது பெரும்பான்மை வழக்கு. தமிழில் இலக்கியம் படைப்பவரின் சமூகப் பின்னணி மாறியபோது சித்ரான்னங்கள் தீர்ந்துபோயின.
  • கற்றாழை மடலின் உண்ணத்தக்க சதைப்பகுதி சோறு எனப்படும். பனைமரத்துத் தண்டின் உள்பகுதியையும் சோறு என்பர். சிட்டான் என்ற ஒருவகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்குச் சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் மிருதங்கத்தில் பயன்படும். இதற்கும் கரணம் அல்லது சோறு என்று பெயர். நான் அறிந்த இசைக் கலைஞர்கள் அதைச் சோறு என்று சொல்வதில்லை.
  • சாதம் என்பது தமிழாகத் தோன்றவில்லை. ‘பிரசாதம்’ என்ற சொல்லிலிருந்தோ இறைவனுக்குப் படைக்கப்படுவதைக் குறிக்கும் சாத்தமுது என்ற சொல்லிலிருந்தோ வழிஅடியாக வந்திருக்கலாம் என்று சிலர் யோசிக்கின்றனர். எப்படியானாலும் அது ‘வந்தேறி’. சோறு தாழ்வுப் பொருளில் வழங்கப்படுவதற்கு இன்னொரு நடைமுறைச் சான்று.
  • ‘சோத்துக்கு வழி இல்லாத நாயி’ என்பதே வசைச் சொல். தவிர, ‘சாதத்துக்கு வக்கில்லாத நாயி’ என்று எவ்வளவு கோபமாக இருந்தாலும் நாம் உளறுவதில்லை. அன்னமோ சாதத்தைவிட உயரத்தில் உள்ளது. சோறு ஓர் அரசியல் பெருஞ்சொல்.
  • திருக்குறளில் சோறு இல்லை என்று சொல்லிவிடக் கூடாது. அவர் கூழ் (64), புற்கை (1065) என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறார். அருஞ்சொற்பொருள் தரத் தேவையற்ற சொற்களாகத் தமிழில் சோற்றைத் தவிர, சோற்றைக் குறிக்கும் அருஞ்சொல் அல்லாத வேறு சொற்களும் உள்ளன.
  • ‘சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு’ (1994) பாடலும் ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ (1978) பாடலும் வருவதற்கு முன்பே, சினிமாப் பாட்டில் சாதம் இடம்பிடித்துவிட்டது: ‘கல்யாண சமையல் சாதம்’ (மாயா பஜார்-1957). ஆகப் பணக்காரனின் பாடலில் சாதமும் ஏழையின் பாடலில் சோறும் பயன்படு சொற்களாகின்றன. சோறு ஏழ்மையின் சொல்.
  • கனவில் சோறு வந்தால் அது நற்குறியாம். தேவையானது கிடைக்கும் என்பது பொருளாம். கனவில் வந்தால் நல்லது; வாயில் வந்தால் கேவலம். நெடுமானஞ்சியை ஒளவை ‘போடா, போ’ என்று சொல்லிய பாட்டிலும் சோறு வந்து குதிக்கிறது. ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்பது அந்தத் தொடர். இன்று தமிழ்நாட்டில் எத்திசைச் செல்லினும் ‘சாதம், சாதம், சாதம்’தான். சாதம் போயின், ‘ரைஸ்.. ரைஸ்.. ரைஸ்’. நைஸ், வாழ்க தமில்!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories