TNPSC Thervupettagam

சோழர்களின் நிர்வாகக் கலை முக்கியமானது: அஷோக் வர்தன் ஷெட்டி

February 7 , 2024 340 days 195 0
  • தமிழ்நாடு கண்ட தேர்ந்த நிர்வாகிகளில் ஒருவராக அடையாளம் காணப்படுபவர் கே.அஷோக் வர்தன் ஷெட்டி. கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் 1983இல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தமிழ்நாட்டுக்கு வந்தவர். மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதல்வர் அலுவலகச் செயலர் வரை பல்வேறு தளங்களிலும் பதவிகளை வகித்தவர். பொறியியலும் சட்டமும் படித்தவரான ஷெட்டி, நிர்வாகத் துறைக்கு இணையாகக் கல்வித் துறையின் மீதும் ஈடுபாடு கொண்டவர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், பிற்பாடு சென்னையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. பரந்துபட்ட பார்வையைக் கொண்டவரான ஷெட்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நிர்வாகச் சூழலையும் அறிந்தவர் என்பதோடு, இந்தியாவுக்கு அப்பாலும் உலகின் வெவ்வேறு சமூகங்கள் சமகாலப் பிரச்சினைகளை எப்படி அணுகுகின்றன; எத்தகைய முன்மாதிரிகளை உருவாக்குகின்றன என்று கூர்ந்து கவனித்துப் பேசுபவர், எழுதுபவர்
  • தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் நிலைக்குச் சோழர் காலம் உள்ளிட்ட நம்முடைய கடந்த காலம் எப்படிப் பங்களிக்கிறது என்று இங்கே பேசுகிறார். ‘சோழர்கள் இன்றுநூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.

ஒரு பிராந்தியத்தின் நிர்வாகக் கலாச்சாரத்தில் அதன் கடந்த கால வரலாறும் அந்தச் சமூகத்தின் கலாச்சாரமும் எந்த அளவுக்குப் பங்களிக்கிறது?

  • அமெரிக்க அறிஞர் லாரன்ஸ் ஹாரிஸன் 1985இல் எழுதிய நூலின் தலைப்பிலேயே இப்படிச் சொன்னார்: ‘வளர்ச்சியில் பின்தங்கிய நிலைமை என்பதே மனநிலையின் பிரதிபலிப்பு’ (Underdevelopment is a state of mind). ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடைய நாடுகளான அமெரிக்கா, கனடா அடைந்த வளர்ச்சியையும், ஸ்பானிஷ்-போர்த்துகீசியம் பேசும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பின்தங்கிய நிலைமையையும் ஒப்பிடுகையில், இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அந்தந்த இன மக்களின் கலாச்சாரம்தான் என்கிறார் ஹாரிஸன். கலாச்சாரத்தை உருவாக்குவது வரலாறு.
  • இயற்கை வளங்கள் இல்லாமை, காலனியாகப் பிடிக்கப்பட்டுச் சுரண்டப்பட்ட நிலைமை, பொருளாதார நவ ஏகாதிபத்தியம், நிறவெறி/சாதிவெறி ஆகியவை காரணமாகச் சில நாடுகள், பிரதேசங்கள், சமூகங்கள் வளர்ச்சி பெறவில்லை என்று காரணங்கள் கூறுவார்கள். இந்த விளக்கம் ஓரளவுக்கே பொருந்தும். ஒரு நாடு, பிராந்தியம் அல்லது சமூகத்தின் கலாச்சார விழுமியங்களும் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக அல்லது தடையாக முக்கியப் பங்காற்றுகின்றன என்ற கண்ணோட்டத்தை நோக்கிச் செல்லும் சமூக அறிவியலாளர்கள், வளர்ச்சி நிபுணர்களின் எண்ணிக்கை இப்போது கூடுகிறது.
  • இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. இரண்டாவது உலகப் போரினால் 1945இல் மிகப் பெருமளவுக்கு நாசமான ஜெர்மனியும் ஜப்பானும், 20 ஆண்டுகளுக்குள் சுயமாக எழுந்து நின்று வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்ந்துவிட்டன; ஆனால், பெரும்பாலான ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் சுதந்திரம் பெற்று 60 முதல் 70 ஆண்டுகள் ஆன பிறகும்கூட குறிப்பிட்ட அளவுக்கே வளர்ச்சி பெற்றன. அதாவது, முதல் உதாரணத்தில், கலாச்சாரம்தான் சாதிக்க வைத்தது; இரண்டாவது உதாரணத்தில் கலாச்சாரம்தான் தடையாக இருக்கிறது.
  • இன்றுஆசியப் புலிகள்என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், தென் கொரியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி பெற்றதற்குக் காரணம், மெய்யியல் ஞானி கன்பூசியஸ் போதித்த அறநெறி சார்ந்த விழுமியங்களைக் கடைப்பிடித்ததுதான் என்று அடிக்கடி குறிப்பிடுகின்றனர். ஊழலில் திளைப்பது அல்லது ஜனநாயகத்துக்கு ஏற்றபடி செயல்படுவது அந்தந்த நாடுகளுடைய கலாச்சாரங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

முற்போக்கான கலாச்சாரத்துக்கும், தேங்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கொஞ்சம் விவரிக்கலாமா?

  • லாரன்ஸ் ஹாரிஸன் வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.
  • முற்போக்குக் கலாச்சாரத்தில் எதிர்காலத்தை வலியுறுத்துகின்றனர்; தேங்கும் கலாச்சாரத்தில் நிகழ்காலத்தையோ, கடந்த காலத்தையோ வலியுறுத்துகின்றனர்.
  • முற்போக்குக் கலாச்சாரத்தில் படிநிலை சமூகப் பின்பற்றல் குறைவாக இருக்கிறது; தேங்கும் கலாச்சாரத்தில் படிநிலைச் சமூகப் பின்பற்றல் தீவிரமாக இருக்கிறது. முற்போக்குக் கலாச்சாரத்தில் அதிக மதச்சார்பு கிடையாது. பன்மைத்துவமும், மாற்றுக் கருத்துகளும் ஊக்குவிக்கப்படுகின்றன; தேங்கும் கலாச்சாரத்தில் மதத்தின் செல்வாக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது; பழமைவாதமும் அதை ஏற்கும் மனப்போக்குமே அதிகமாக ஊக்குவிக்கப்படுகின்றன.
  • முற்போக்குக் கலாச்சாரத்தில் வெற்றிக்குக் கல்விதான் முக்கியம் என்று கருதப்படுகிறது; தேங்கும் கலாச்சாரத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கிடையாது (மேட்டுக்குடிகள் விதிவிலக்கு).
  • முற்போக்குக் கலாச்சாரத்தில் திறமைதான் முன்னேற்றத்துக்கு அடிப்படை. கடின உழைப்பு, ஒழுக்கம், படைப்பாற்றல், சாதனைகளுக்கு அங்கீகாரமும் பரிசுகளும் உண்டு. திறமைசாலிகளை அடையாளம் காண்பது, அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது, தத்தமது குடும்பங்கள், குழுக்களுக்கு அப்பால் சமூகம் என்ற விரிவான தளத்துக்கும் கொண்டுசெல்லப்படுகிறது; தேங்கும் கலாச்சாரத்தில் குடும்பம், சமூகம், செல்வாக்கு உள்ளவர்களுடனான தொடர்புக்கு மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. குடும்பம் அல்லது குழுக்களுடைய நலனே, பொதுநலனைவிடப் பெரிதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சமூகங்கள் வேண்டியவர்களுக்குச் சலுகை, உறவினர்கள்நண்பர்களுக்கே முன்னுரிமை, ஊழல், வரி ஏய்ப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கும். இப்படி நிறையச் சொல்லலாம்.
  • சில நாடுகள், பிராந்தியங்கள், சமூகங்கள் மட்டுமே இந்த அம்சங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறும். மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இன்றைக்குத் தமிழ்நாடு போன்ற தெற்கு மாநிலங்களுக்கும், வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் பிஹார் போன்ற வடக்கு அல்லது கிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாடுகளுக்கு இதில் சில அம்சங்களாவது காரணம் என்பது புரியும். தமிழ்நாட்டுக்கும் பிஹாருக்கும் இடையில் நிலவும் அப்பட்டமான வேறுபாடுகளுக்கு அரசின் கொள்கைகள், நிர்வாகம் மட்டுமே காரணங்கள் அல்ல. இரு மாநிலங்களின் கடந்த கால வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

இன்றைய பிஹாரில்தான் அன்றைய மகதப் பேரரசும் குப்தப் பேரரசும் தோன்றியிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு எப்படி அது இவ்வளவு கீழே வீழ்ந்திருக்கிறது? வரலாற்றுக்கு ஒரு தொடர்ச்சி தேவைப்படுகிறதா?

  • ஆமாம். பண்டைய வரலாற்றுக்கும் சமீபத்திய வரலாற்றுக்கும் இடையில் அறுந்துவிடாத சில பண்பாட்டு இழைகளேனும் நீடிக்க வேண்டியிருக்கிறது. மேலும், சமகாலத்தில் விழிப்புணர்வு கொண்ட அரசியல் நடவடிக்கைகளும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மாற்ற முடியும் என்பதையும் கூற விரும்புகிறேன். ஆனால், அதை மிக மெதுவாகத்தான் சாதிக்க முடியும். உதாரணத்துக்கு, சிங்கப்பூரைத் தூய்மையானதாகவும் ஊழலற்றதாகவும் மாற்ற லீ குவான் யூ மிகுந்த உறுதியோடு செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டார்.
  • தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டு வரலாற்றையே எடுத்துக்கொண்டால், நீதிக் கட்சி ஆண்ட காலத்திலிருந்து தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் ஏழைகளுக்கு ஆதரவான வறுமை ஒழிப்புத் திட்டங்கள், சமூக நீதிக் கொள்கைகள், சமூகச் சீர்திருத்தங்கள், கல்வி, சுகாதாரம், மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறு பகுதிகளுக்கும் துறைகளுக்கும் இடையில் சமமான வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தியதால்தான் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகத் திகழ முடிகிறது.

இந்தியாவில் அரசு அதிகார அமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இதில் நம்முடைய கடந்த கால நிர்வாக மரபின் பங்களிப்புக்கும் இடம் இருப்பதாகக் கருதலாமா? எனில், எப்படி?

  • நிச்சயமாக! இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய, சிறப்பாக நிர்வாகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்திய அரசின் சமீபத்தியநிதி ஆயோக்அறிக்கையின்படியே வறுமை குறைவாக உள்ள மாநிலங்களில் முன்வரிசையில் தமிழ்நாடு உள்ளது. கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், எல்லாச் சமூகத்தினர் இடையிலும் வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்குநகர்மயமாதல்ஓர் அடையாளம் என்றால், இந்திய அளவில் நகர்ப்புறங்களில் வாழும் மொத்த மக்களுடைய எண்ணிக்கை 2050இல் 50% என்ற அளவைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்பகுதிகளில் வாழ்வோர் எண்ணிக்கை 2011லேயே 48% என்ற நிலையை எட்டிவிட்டது, இப்போது 50% என்ற அளவை நிச்சயம் கடந்திருக்கும்.
  • தமிழ்நாட்டில் நகர மக்கள்தொகை மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் சீராகப் பரவியிருக்கிறது. சென்னையைத் தவிர, 5 பெருநகர நகரங்கள் (Metropolitan cities) தமிழகத்தில் உள்ளன. ஓர் ஒப்பீட்டுக்காகச் சொல்ல வேண்டும் என்றால், கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் இதற்கு நேர்மாறாக நகர்ப்புற மக்கள்தொகை பெங்களூருவிலும் ஹைதராபாதிலும்தான் அதிகமாக இருக்கிறது.
  • இந்தியாவிலேயே பதிவுபெற்ற தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இங்குள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை தொழிலாளர்களின் நேரடி உழைப்பு சக்தியைத் தயாரிப்பில் நம்பியிருப்பவை. 1991க்குப் பிறகு தொழிற்சாலை உற்பத்தியில் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டின் பங்கு அதிகம். குஜராத், மஹாராஷ்டிரம்போல அல்லாமல் தமிழ்நாட்டில் தொழில் உற்பத்திப் பிரிவுகளும் எல்லா மாவட்டங்களிலும் பரவியிருக்கின்றன. சமூகப் பரவலும் இதில் இருக்கிறது; இந்தியாவிலேயே தலித்துகள் அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோராக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
  • பொருள் உற்பத்திக்கான அடித்தளம் வலுவாகவும் துடிப்பாகவும் இருப்பதைப் போல, சேவைத் துறையிலும் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருக்கிறது. கணினி சார்ந்த மென்பொருள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், மருத்துவமனைகள்மருத்துவக் கல்லூரிகள்மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் என்று சுகாதாரத்தின் பல்வேறு அம்சங்கள், கல்வி நிலையங்கள் என்று சேவைத் துறையிலும் முன்னிலை வகிக்கிறது. காற்று, கடல் அலை, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உற்பத்திப் பிரிவுகளிலும் தமிழ்நாடு முக்கியமானதாகத் திகழ்கிறது.
  • மஹாராஷ்டிரமும் குஜராத்தும் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலங்களாக இருந்தாலும் மனித ஆற்றல் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. கேரளத்தில் மனித ஆற்றல் வளர்ச்சி நன்றாக இருக்கிறது, தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இல்லை, அந்நிய நாடுகளிலிருந்து கேரளர்கள் சம்பாதித்து அனுப்பும் தொகையைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறது. கர்நாடகம் ஓரளவுக்குப் பரவாயில்லை; ஆனால், தமிழ்நாட்டுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியைப் பெறவில்லை.
  • தமிழ்நாடு இந்தச் சிறப்பான நிலைக்கு, அதன் வரலாறும் கலாச்சாரமும் பெரிய பங்கு வகித்துள்ளன. இந்தியாவை பிரிட்டிஷார் ஆளத் தொடங்கியபோதுமதறாஸ் மாகாணம்அவர்களுடைய நேரடி ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால் அவர்கள் விட்டுச் சென்ற நிர்வாக அமைப்பும், நடைமுறைகளும்தான் சிறப்பான நிர்வாகம் தொடரக் காரணம் என்று கூறப்படுவது உண்டு. இது ஓரளவு உண்மையும்கூட. சராசரியாக, ஆங்கிலேயர்களால் நேரடியாக ஆளப்பட்ட மாநிலங்கள், முந்தைய மன்னர்கள் ஆட்சி செய்த மாநிலங்களைவிட இன்று சிறந்த நிர்வாக அமைப்புகளைக் கொண்டுள்ளன.
  • தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்தும் பிற மேலை நாட்டாரிடமிருந்தும் சுதந்திரமான, முற்போக்கான சிந்தனைகளைப் பெற்று, அதை நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தினர். ஆனால், தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்பு, பணிக் கலாச்சாரம், முற்போக்கான சிந்தனை ஆகியவற்றுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிடவும் முடியாது, அவற்றுக்கு இன்னும் ஆழமான வேர்கள்தொடர்புகள் உண்டு.
  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றுக்குக் கரிகாற்சோழன் கரைகள் அமைத்ததும், ஆற்றுக்குக் குறுக்கே உருவாக்கிய கல்லணையும் இந்தியாவில் கட்டப்பட்ட பாசனக் கட்டுமானங்களிலேயே மிகவும் பழமையானது என்பதுடன் இன்றளவும் பயன்பட்டுக்கொண்டும் இருக்கிறது. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் 1,000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாகவும் தொடர்ச்சியாகவும் 39,000க்கும் மேற்பட்ட ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் என்று ஏராளமான நீர்நிலைகளை மிகப் பெரிய வலையமைப்பாக உருவாக்கி வைத்துச் சென்றனர். அவற்றில் பெரும்பாலானவை இன்றளவும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில் உள்ள மிகப் பெரிய, சிறப்பான கோயில்கள் தமிழ் மன்னர்களால்தான் கட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய ஊர்களில் உள்ள சோழர் காலக் கோயில்கள் கட்டிடக் கலையின் சிறப்புகளுக்காக மட்டுமல்லாமல்கட்டுமானப் பொறியியலின் நேர்த்திக்காகவும் அற்புதங்களுக்காகவும் இன்று வரை ஈடு இணையற்றவையாகப் பேசப்படுகின்றன.
  • தமிழ்நாட்டில் ஒரு தொன்மமாகவே நீடிக்கும் மனுநீதிச் சோழன் கதையை இந்த மக்கள் தங்களுக்கான விழுமியமாகக் கொண்டிருப்பதுடன் அதைச் சமகாலப்படுத்தவும் முற்படுகிறார்கள். சோழரின் பெயராலேயே மக்களுடைய குறைகளைக் கேட்டுத் தீர்க்க, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையை, ‘மனு நீதி நாள்என்று கடைப்பிடிக்கும் மரபு இன்றளவும் தொடர்கிறது. மக்களுடைய கோரிக்கைகளை மனுவாகப் பெற்று, அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் தனிப் பிரிவே செயல்படுகிறது. இவையெல்லாமும் தமிழ்நாட்டில் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகமும் தலைமையும் பாரம்பரியமாகவே தொடர்வதைக் காட்டுகின்றன.
  • தமிழ்நாட்டுக்குக் கடல்வழி வாணிபத் தொடர்பு மேலை நாடுகளுடனும் (அரபு, கிரேக்கம், ரோமாபுரி), கீழை நாடுகளுடனும் (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சீனம்) இருந்தது என்ற நெடிய வரலாறும் இருக்கிறது. தமிழர்கள் துணிச்சல் மிக்க கடல் பயணச் சாகசக்காரர்களாகவும் உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசை உள்ளவர்களாகவும் கடல்வழி வாணிபத்தால் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தொலைநோக்கு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.
  • தமிழர்கள் இனம், மதம், மொழி, நாடு போன்ற வேறுபாடுகளை எல்லாம் பொருட்படுத்தாமல், இந்தப் பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்பவர்களாக இருப்பதற்கும் ஒரு நெடிய மரபு இருக்கிறது. அறிவுலகில் அதிகம் மேற்கோள் காட்டப்படும், “உலகம் என்னுடைய நாடு, அனைத்து மக்களும் என்னுடைய சகோதரர்கள், அனைவருக்கும் நன்மை செய்வதே என்னுடைய மதம்என்ற ஆங்கில எழுத்தாளர் தாமஸ் பைனுடைய எழுத்துக்கு 1,700 ஆண்டுகள் முன்னரே அத்தகைய கருத்தைக் கூறியிருக்கிறார் தமிழ்ப் புலவரான கணியன் பூங்குன்றனார்: ‘யாதும் ஊரேயாவரும் கேளிர்!’
  • இப்படித் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வெற்றிகள் இத்தகைய கடந்த கால அடித்தளங்கள் மீதே எழுப்பப்பட்டிருக்கின்றன.

பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றைப் பேசும்போது, சோழர்கள் இங்கே கையாண்ட அதிகாரப் பகிர்வு நினைவுக்கு வருகிறது. பல்வேறு சமூகங்கள் இணைந்த நம்மைப் போன்ற மக்கள் கூட்டத்தை நிர்வகிப்பதில், அதிகாரப் பரவலாக்கத்தின் முக்கியத்துவம் என்ன?

  • சோழர்கள் வலுவான மைய அரசை, கிராமங்களின் சுயாட்சியுடன் இணைத்தனர். அரசு நிர்வாகத்தின் அடிப்படை அலகுகள் கிராமங்கள்தான். அவற்றைக் கிராம மக்களே நிர்வகித்தனர். கிராம சபைக் கூட்டங்களிலேயே கிராமங்களுக்கான அனைத்துத் திட்டங்களும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. முடிவுகளை நிறைவேற்றும் பொறுப்பும் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கிராம நிர்வாகத்துக்காகத் தோற்றுவிக்கப்பட்ட குழுக்களுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க விதிகளும் கட்டுப்பாடுகளும்கூட வகுக்கப்பட்டன. நன்கு வரையறுக்கப்பட்ட வழிகளில் நிர்வாகிகளின் தேர்வுகள் வெளிப்படையாகவே நடந்தன. ஒவ்வொரு கிராமமும் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் துணை கிராம சபை அமைக்கப்பட்டது. இந்த அமைப்புகளைக் கிராம மக்கள் திறமையாகவும் வலிமையாகவும் வழிநடத்தினர். சோழ மன்னருடைய அதிகாரிகள் இந்தக் கிராம சபைக் கூட்டங்களில் ஆலோசகர்களாகவோ பார்வையாளர்களாகவோதான் கலந்துகொண்டனர். விதிவிலக்கான தருணங்களில் மட்டும் அவர்கள் தலையிட்டனர்!
  • பொதுவான நிர்வாகக் கொள்கை என்னவென்றால், உள்ளாட்சி மன்றங்கள் அல்லது உள்ளூர் மக்களுக்கு நெருக்கமான அமைப்புகளால் சிறப்பாகச் செய்யக்கூடிய வேலைகளில் மாநில நிர்வாகமோ, ஒன்றிய நிர்வாகமோ தலையிடுவதோ - அதிகாரம் செய்வதோ கூடாது; உள்ளாட்சி மன்றங்களால் செய்ய முடியாத நிலையிலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ மட்டும், அதுவும் தேவைப்படும் உதவி, ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றை மட்டும் ஒன்றிய அல்லது மைய அரசு அளிக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டமானது, அதிகாரங்களை ஒன்றியத்திடமே அதிகம் குவித்து வைத்துள்ளது. இந்தியா போன்ற பன்மைத்துவம் உள்ள நாட்டுக்கு, ஒரே மாதிரியான அணுகுமுறை பொருந்தி வராது.
  • அமெரிக்கா, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் துறைமுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகத்திடம்தான் உள்ளது. இந்தியாவிலோ பெரிய துறைமுகங்களை ஒன்றிய அரசும், சிறிய துறைமுகங்களை மாநில அரசுகளும் தங்களுடைய அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளன. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும் பொறுப்புகளையும் அளிக்க ஒன்றிய அரசு விரும்புவதில்லை; உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களையும் பொறுப்புகளையும் அளிக்க மாநில அரசுகளும் விரும்புவதில்லை.
  • அதிகாரப் பரவலில் உள்ள நன்மை என்னவென்றால், வெவ்வேறு முன்முயற்சிகள் மூலம் மக்கள் நலத் திட்டங்களில் மாநில அரசுகள் சோதனைகளை நடத்திப் பார்க்கலாம். அந்த முயற்சி வெற்றி பெற்றால் அதையே சிறந்த நிர்வாக நடைமுறையாக ஏற்று, பிற மாநிலங்களும் பின்பற்றலாம் அல்லது ஒன்றிய அரசே அதை நாடு முழுவதற்குமான திட்டமாக விரிவுபடுத்தலாம். உதாரணமாக, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் 1921ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின் போது சென்னையில் ஒரு சில பள்ளிகளில் உருவானது. 1956இல் காமராஜராலும், 1981இல் எம்.ஜி.ராமச்சந்திரனாலும் மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர், 2001இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

ஒரு நிர்வாகியாக உங்களை வியக்க வைத்த சோழர் நிர்வாக அம்சங்கள் எதையேனும் குறிப்பிடலாமா?

  • சோழர்களுடைய நிர்வாகத்தின் மூன்று குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கூற விரும்புகிறேன். மாமன்னர் ராஜராஜன் மிகத் தெளிவான நிர்வாகப் படிநிலையையும் கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தார்; அரச சபையில் கூடி விவாதித்து எடுக்கப்படும் முடிவுகள் ஆணைகளாகத் தயாராகும்போது, உயர் அதிகாரிகள் அவற்றை மிகவும் கவனமாகச் சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து, நிர்வாக அமைப்புகளுக்கு அரசாணைகளை அனுப்பி வைக்கும் நடைமுறை இன்றைய நவீன அரசுகளில் கடைப்பிடிக்கப்படுவதைப் போலவே பின்பற்றப்பட்டது.
  • நிலங்களை அளக்க, நாடு முழுவதற்கும் பொதுவான ஒரே அளவுள்ளமாளிகைக் கோல்என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் வருமானத்தைப் பெருக்கப் புதிய வரிவிதிப்பு முறை எதையாவது பரிந்துரைக்குமாறு பொது நிதி நிர்வாக நிபுணர் நிகோலஸ் கால்டருக்குச் சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு 1950களில் அழைப்பு விடுத்தது. இந்திய அரசின் வரவுசெலவு விவரங்களை ஆராய்ந்த கால்டர், ‘செலவு வரிஎன்ற ஒன்றைப் புதிதாக விதிக்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறினார். ஆனால், இப்படியொரு வரி சோழர்கள் காலத்திலேயே அமலில் இருந்தது என்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது!
  • பிற்காலச் சோழர்களின் ஆட்சி (பொது ஆண்டு 850 முதல் 1279 வரையில்) நானூறாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்திருக்கிறது. இடைக்கால இந்திய வரலாற்றில் நீண்ட காலம் நடைபெற்ற மன்னராட்சி சோழர்களுடையதுதான். நிர்வாகத்தை ஒரு கலையாகவே அவர்கள் செயல்படுத்தியிருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தின் வடிவமும் நடைமுறையும் அதன் ராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக இருந்திருக்காவிட்டால் இத்தனை ஆண்டுகளுக்கு ஒரே வம்சத்தால் நாட்டை ஆண்டிருக்க முடியாது!
  • -‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...

நன்றி: அருஞ்சொல் (07 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories