- அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான இந்திய ஜனநாயகம், அரசமைப்பு அமைப்புகளுக்கு தனித்தனியான அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. அதன்படி, அது நீதித் துறையானாலும், சட்டப்பேரவையானாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம அதிகார வரம்புகளைப் பெற்றிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் மீது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை எப்படி அதிகாரம் செலுத்தமுடியாதோ, அதேபோல பேரவைகளின் நடவடிக்கைகளில் நீதித் துறையும் தலையிட முடியாது, கூடாது என்பதுதான் அரசியல் சாசனம் வகுத்திருக்கும் வரம்பு. இந்த அடிப்படையில் பார்க்கும்போது உச்சநீதிமன்றத்தின் புதன்கிழமை தீர்ப்பு விவாதத்துக்குரியதாக மாறுகிறது.
- சட்டப்பேரவை தன்னிச்சையாக இயங்கும் சுதந்திரத்தில் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறுக்கிடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற ஓர் அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான கட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் தன்னுடைய முடிவை செயல்படுத்துவதற்கோ, அதற்கான நேரத்தை நிர்ணயிப்பதற்கோ அதிகாரமில்லை என்கிற நிலை சட்டப்பேரவையின் அதிகாரத்தில் நீதித் துறையின் தேவையில்லாத தலையீடு என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
- சட்டப்பேரவை சுதந்திரமாக தனித்து இயங்கும் உரிமைபெற்றதா, சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் அவைத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதா என்கிற கேள்விக்கு உச்சநீதிமன்றம் சாதகமாகப் பதிலளித்திருக்கிறது. அதே நேரத்தில், சட்டப்பேரவை விதிகள் முறையாக அவைத் தலைவரால் பின்பற்றப்படாதபோது பேரவை உறுப்பினர்களுக்கு நீதித் துறையை நாடும் உரிமை உண்டு என்பதையும் ஆமோதித்திருக்கிறது.
தொங்கு சட்டப்பேரவை
- கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத முடிவை வழங்கியது. இப்படி தொங்கு சட்டப்பேரவை அமைவது புதிதொன்றுமல்ல. அதேபோல, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதும், நாடாளுமன்ற ஜனநாயக முறையில் புதிதொன்றுமல்ல.
- ஆளுநரைப் பொருத்தவரை பல்வேறு முன்னுதாரணங்களின் அடிப்படையில், மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். பெரும்பான்மையைநிரூபிக்க இரண்டு வார கால அவகாசமும் வழங்கினார்.
- 1989-இல் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைத்தார். காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்ட நிலையில்தான் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி என்கிற கூட்டணி ஆட்சி அமைந்தது.
இதற்கு முன்பு
- 1991-லும், 1996-லும் பெரும்பான்மை பலமில்லாத, அதிக எண்ணிக்கை பலம் கொண்ட நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், வாஜ்பாய் தலைமையிலான பாஜகவும்தான் ஆட்சி அமைக்க முதல் வாய்ப்பைப் பெற்றன. அந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் ஆளுநரால் எடியூரப்பாவுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
- இப்போது போலவே அப்போதும் ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் தலையிட்டது. ஆளுநரின் முடிவை ஏற்றுக் கொண்டது. ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையைநிரூபிக்க ஆளுநர் வழங்கியிருந்த இரண்டு வார அவகாசத்தை இரண்டு நாள்களாகக் குறைத்தது. அதே பாணியில் இப்போது சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டு, அதேநேரத்தில் அவர் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையையும் உருவாக்கித் தந்திருக்கிறது.
- நீதித் துறையின் தேவையற்ற தலையீட்டுக்குக் காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தங்களது கடமையையும் தங்களுக்கான உரிமைகளையும் உணர்ந்து செயல்படாமல், பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதுதான்.
நன்றி: தினமணி (18-07-2019)