TNPSC Thervupettagam

ஜனநாயகம் காக்கத் தவறலாமா அரசு

October 10 , 2023 407 days 440 0
  • திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில், ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், இரண்டு ஆண்டுகளாகியும் பதவியேற்க முடியாத சூழல் நிலவி வருகிறது. பட்டியல் சாதிப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த ஊராட்சியில், மிகவும் பிற்படுத்தப் பட்டோரும் பழங்குடியினரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தச் சூழலில், சிறுபான்மையினரான பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண், ஊராட்சி மன்றத் தலைவராவதற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்ப்புகள் இருந்தன. மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் பழங்குடியின மக்களும் சேர்ந்து இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர்.
  • ஊராட்சி மன்றத் தேர்தலில் பட்டியல் சாதிப் பெண்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராத நிலையில், ஊராட்சித் தலைவராக இந்துமதி என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநிலத் தேர்தல் ஆணையமும் சான்றிதழ் வழங்கிவிட்டது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ள அந்த ஊரின் மற்ற பிரிவினர் முற்றிலுமாக மறுத்துவிட்டார்கள். கூடவே, முன்னாள் தலைவரைத்தான் ‘தலைவர்’ என அங்கீகரித்துவருகிறார்கள்.
  • இதில் கவனிக்க வேண்டியது, ஜனநாயக அமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவிப் பிரமாணம் எடுக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதைத்தான். மாவட்ட நிர்வாகமும் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய மாநில அரசும் இரண்டு ஆண்டுகளாக இதை வேடிக்கை பார்த்து வந்துள்ளன என்பது இன்னொரு அவலம்.
  • நாயக்கனேரி ஊராட்சியின் மக்கள்தொகை, 4,270. இதில் பழங்குடியினரின் எண்ணிக்கை 3,108. ஆனால், பட்டியல் சாதியினரில் மொத்தம் 7 வாக்காளர்கள்தான், அதில் பெண்கள் 3 பேர். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், நாயக்கனேரியை 1996இல் பழங்குடியினருக்கும் 2001இல் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இப்போது 2021இல் சுழற்சி முறையில் அது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; இது ஒரு ஜனநாயக நடைமுறை. ஆனால், இதை எதிர்த்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள ஊராட்சியைப் பட்டியல் சாதிக்கு ஒதுக்குவது முறையல்ல என்பது அவர் தரப்பு வாதம். எனினும், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துவிட்டது. இப்போது அந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்துமதி மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதால், அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரல்ல எனவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் இந்துமதிக்கே சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. இடையில் இந்துமதி கடத்தப்பட்டதாகவும் அவர் கணவர் புகார் அளித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களை ஊர் விலக்கம் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
  • இந்தப் பிரச்சினை இப்போது உயர் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனத் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் விளக்கம் சொல்லிவருகின்றன. ஆனால், இரண்டு ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை நீடிக்கிறது என்பதே ஜனநாயக விரோதத்தன்மைக்கு அடையாளமாகும்.
  • மேலவளவு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதித் தலைவர்கள் ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தடுக்க ஆதிக்க சாதியினர் வன்முறையைப் பிரயோகித்ததை நாயக்கனேரி சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ‘உள்ளாட்சி அமைப்புகள்தாம் இந்திய அரசியல் அமைப்பின் அடித்தளம்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த அமைப்பின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டியது ஜனநாயக அரசின் தலையாய கடமை. அதை உணர்ந்து மாநில அரசு இனியாவது செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories