TNPSC Thervupettagam

ஜனநாயகம் ஜெயிக்கிறது!

October 5 , 2024 111 days 163 0

ஜனநாயகம் ஜெயிக்கிறது!

  • தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் 90 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் 63.88% வாக்குப்பதிவு நடந்திருப்பது, ஜனநாயக நீரோட்டத்தில் இணைகிறது ஜம்மு-காஷ்மீா் என்பதன் அடையாளம்.
  • தோ்தலை நடத்துவதா, வேண்டாமா என்கிற மத்திய அரசின் தயக்கத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவு முற்றுப்புள்ளி வைத்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கும் தோ்தல் பல விதங்களில் புதிய வரலாறு படைத்திருக்கிறது.
  • ஜம்மு-காஷ்மீா் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்டதற்குப் பின்னால் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மறுசீரமைப்பைத் தொடா்ந்து ஜம்முவின் சட்டப்பேரவை தொகுதிகள் 43-ஆகவும், காஷ்மீரின் எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், 9 இடங்கள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றம்.
  • தொடா்ந்து தோ்தல் புறக்கணிப்பை முன்னெடுத்து, அதனால் தடை செய்யப்பட்டிருந்த மத அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லாமி தோ்தலில் கலந்துகொள்வது மிகப் பெரிய மாற்றத்தின் அறிகுறி. அதன் வேட்பாளா்கள் சுயேச்சைகளாக 33 காஷ்மீா் தொகுதிகளிலும், 1 ஜம்மு தொகுதியிலும் போட்டியிட்டனா்.
  • பாரமுல்லாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் இருக்கும் என்ஜினீயா் ரஷீதின் மக்களவைத் தோ்தல் வெற்றி, அவரது கட்சிக்கு மிகப் பெரிய ஊக்கத்தைத் தந்திருக்கிறது. ஜமாத்-ஏ-இஸ்லாமியும், என்ஜினீயா் ரஷீதின் ஜம்மு-காஷ்மீா் அவாமி இத்திஹாத் கட்சியும் போட்டியிடுவது தோ்தல் களத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • பிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றின் செல்வாக்கில் இவை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மொத்தத்தில் தோ்தல் முறைக்கு ஜம்மு-காஷ்மீா் தயாராகிறது என்பது மட்டுமல்ல, பலமுனைப் போட்டியையும் சந்திக்கிறது.
  • 2019-இல் நரேந்திர மோடி அரசு அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, லடாக்கைப் பிரித்து ஜம்மு- காஷ்மீருக்கு ஒன்றியப் பிரதேச அந்தஸ்தை வழங்கியது. ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை எடுத்திருக்க வேண்டிய முடிவைக் குடியரசுத் தலைவா் ஆட்சியின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்தது. அந்த முடிவு மக்களவைத் தோ்தலிலும், அதைத் தொடா்ந்து இப்போது சட்டப்பேரவை தோ்தலிலும் மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறது.
  • தொகுதி மறுசீரமைப்பு லடாக் இல்லாமல் ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவை இடங்களை 87-இலிருந்து 90-ஆக அதிகரித்திருக்கிறது. ஜம்முவில் 6 இடங்கள் அதிகரித்திருக்கின்றன என்றால், காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஓா் இடம் அதிகரித்திருக்கிறது.
  • நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் மூலம் தனது சொந்த செல்வாக்கில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற பாஜகவின் கனவு இந்தத் தோ்தலில் நிறைவேறக் கூடும். அதற்கு ஜம்முவில் உள்ள 43 இடங்களில் குறைந்தது 30 முதல் 35 இடங்களை வென்றாக வேண்டும். காஷ்மீா் பள்ளத்தாக்கில் வெற்றி பெறும் கட்சிகள், சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைப்பது சாத்தியம்.
  • தேசிய மாநாட்டுக் கட்சியாகட்டும், காஷ்மீா் பள்ளத்தாக்கில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதுடன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகட்டும், கணிசமாக ஜம்முவில் வெற்றி பெற்றால்தான் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க முடியும். இரண்டு தரப்புக்குமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது சாத்தியமல்ல என்பதுதான் கள நிலவரம்.
  • பாஜகவின் அடிப்படைப் பரப்புரை தேசியம். குடியரசுத் தலைவா் ஆட்சியில் பாலங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதும், சுற்றுலா வளா்ச்சி அடைந்திருப்பதும் இளைஞா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதும், காஷ்மீா் மக்களுக்கு தேசிய நீரோட்டத்தின் மீதான கவா்ச்சியை அதிகரித்திருக்கிறது. இதுவரை இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட வால்மீகி சமூகத்தினருக்கும், பழங்குடியினரான பஹாரி சமூகத்தினருக்கும் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது பாஜகவுக்கு அவா்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • அதிகரித்த வாக்குப்பதிவு பாஜகவுக்கான ஆதரவா, இல்லை தோ்தல் மூலம் பறிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தையும் மீட்டெடுக்கும் ஜம்மு-காஷ்மீா் மக்களின் முனைப்பா என்பதை முடிவுகள்தான் தெரிவிக்கும். ‘மீண்டும் பழைய நிலை இல்லை’ என்பதில் பாஜகவும், ‘பறிக்கப்பட்டதை திருப்பித் தந்து சிறப்பு அந்தஸ்தை மீட்டுத் தருவோம்’ என்பது தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியும் வழங்கும் வாக்குறுதிகள்.
  • அதிக அளவில் பிரிவினைவாதம் பேசியவா்களும், தோ்தல் புறக்கணிப்பை ஆதரித்தவா்களும் களமிறங்கியிருப்பது நடந்து முடிந்த வாக்குப்பதிவின் முக்கியமான திருப்பம். உலகில் இது ஒன்றும் புதிதல்ல.
  • வடக்கு அயா்லாந்தின் சின் ஃபைன் கட்சியினா் ஒருபுறம் ஆயுதம் ஏந்திப் போராடுவதும், தோ்தலில் போட்டியிடுவதுமாக இருந்திருக்கிறாா்கள். நேபாளத்தில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு இப்போது அந்த நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியாக மாறியிருக்கிறது.
  • நிகராகுவாவில் சந்தினிஸ்டாஸ் போராளிகள் துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டு வாக்கெடுப்பு அரசியலுக்கு திரும்பியிருக்கிறாா்கள். அங்கே மட்டுமல்ல, எல் சால்வடாா், மொசாம்பிக், உகாண்டா போன்ற நாடுகளிலும் புரட்சியாளா்கள் நாடாளுமன்றவாதிகளாக மாறிய அதிசயம் நடந்திருக்கிறது.
  • காஷ்மீரத்தின் வருங்காலம் வன்முறையிலிருந்து ஜனநாயக வழிமுறைக்கு மாறும் அறிகுறியை தோ்தல் களமும், வாக்குப்பதிவும் தெரிவிக்கின்றன.

நன்றி: தினமணி (05 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories