TNPSC Thervupettagam

ஜப்பானின் முன்னுதாரணம்

September 25 , 2021 1204 days 715 0
  • கொள்ளை நோய்த்தொற்றைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இணைய வழி வர்த்தகத்தை அதிகரித்தது போலவே, மின்னணுப் பொருள்களின் பயன்பாட்டையும் அதிகரித்திருக்கிறது.
  • ஏற்கெனவே பல்வேறு கழிவுகளால் உலகம் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், மின்னணுக் கழிவுகள் இப்போது மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருக்கின்றன.
  • இணைய வர்த்தகத்தின் மூலம் அறிதிறன்பேசி, தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினி, கைக்கணினி என்று பல்வேறு பொருள்கள் கவர்ச்சிகரமான விலைத் தள்ளுபடிகளுடன் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பிரச்னையை மேலும் அதிகரித்திருக்கின்றன.
  • புதிய தலைமுறை பொருள்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பழைய மின்னணுப் பொருள்கள் தேவையற்றவையாகி விடுகின்றன.
  • பழைய அறிதிறன்பேசி, தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினி போன்றவை குப்பைக் கூளங்களோடு வீசி எறியப்பட்டு, அவற்றிலிருந்து வெளிவரும் நச்சுப்பொருள் மண்ணுடன் கலந்து நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.
  • இதுகுறித்தெல்லாம், பயன்பாடில்லாத மின்னணுப் பொருள்களைக் குப்பைத் தொட்டியில் வீசி எறியும் யாரும் கவலைப்படுவதில்லை.

நாமும் உலகுக்கு வழிகாட்டலாம்

  • பழுதான மின்னணுப் பொருள்களை சரிசெய்து பயன்படுத்துவதைவிட, தூக்கி எறிந்துவிட்டு மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பை மாதத்தவணையில் வாங்குவதில் இளைய தலைமுறை குறியாக இருக்கிறது.
  • குவிந்து கிடக்கும் மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.
  • உலக அளவில் 2019-இல் உருவான மின்னணுக் கழிவுகளின் அளவு 5.36 கோடி டன். அதாவது நாம் ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு 7.3 கிலோ மின்னணுக் கழிவை தூக்கி எறிகிறோம்.
  • அவற்றில் அதிகபட்சம் 20% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடுத்தபடியாக உலகில் மூன்றாவது அதிகமான மின்னணுக் கழிவு உருவாகும் நாடாக (32.3 லட்சம் டன்) இந்தியா காணப்படுகிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
  • 2018-20 ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் மின்னணுக் கழிவு 43% அதிகரித்திருக்கிறது.
  • குறிப்பாக கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் மின்னணுப் பொருள்களுக்கு கேட்பு அதிகரித்தது போலவே, பழைய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் வழக்கமும் அதிகரித்தது.
  • மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட முனைந்த முதல் நாடான ஜப்பானைப் பாராட்ட வேண்டும்.
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் பந்தயம் அறிவிக்கப்பட்டபோதே, வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள், மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்து உருவாக்கப்படும் என்று அறிவித்தது.
  • இரு ஆண்டுகள் நீண்டு நின்ற அந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் தங்களது பழைய மின்னணுப் பொருள்களை நன்கொடையாக வழங்கி ஒத்துழைப்பு நல்கினர்.
  • குப்பையாக வீசியெறியப்படும் மின்னணுக் கழிவுகளை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்தால், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும் வெள்ளியையும் அதிலிருந்து பெற முடியும் என்கிற உண்மையை ஜப்பான் உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.
  • ஜப்பானிலுள்ள பெரும்பாலான கிராமங்களும் நகரங்களும் அந்தத் திட்டத்தில் இணைந்தன.
  • மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்ததன் மூலம் கிடைத்த 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம் ஆகியவற்றில் இருந்துதான் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 பதக்கங்களும் தயாரிக்கப் பட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • மின்னணுக் கழிவுகள் உருவாவதைத் தடுப்பது இயலாது; ஆனால், கட்டுப்படுத்துவது இயலும்.
  • முதலாவதாக புதிது புதிதான ரகங்களை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக நுகர்வோர் வாங்கிய மின்னணுப் பொருள்களைப் பழுது நீக்கிக் கொடுப்பதற்கும், அதன் தரத்தை அவ்வப்போது மேம்படுத்துவதற்கும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக வேண்டும்.
  • தங்களது லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, புதிய அறிமுகங்களின் மூலம் நுகர்வோரைக் கவர்ந்து, மின்னணுக் கழிவுகள் அதிகரிப்பதற்கு வழிகோலுவது மனித இனத்துக்கே இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி என்பதை அந்த நிறுவனங்கள் உணர வேண்டும்.
  • மேலை நாடுகளில் இப்போது பழுதுபார்ப்புக்கு உகந்த மின்னணுப் பொருள்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.
  • மின்னணுப் பொருள்களை விற்பவர்கள், பயன்பாட்டில் இல்லாத பழைய பொருள்களை நுகர்வோரிடம் இருந்து பெற்று, அதற்கு விலைத் தள்ளுபடி வழங்கி மின்னணுக் கழிவுகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் மறுசுழற்சிக்கு ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைத் தயாரிப்பு நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
  • தெற்காசியாவில் மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதற்கான சட்ட விதிமுறைகளை உருவாக்கியிருக்கும் ஒரே நாடு இந்தியாதான்.
  • 2011-இல் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, மின்னணுக் கழிவுகளைக் கொண்டு செல்வது, பாதுகாப்பது, மறுசுழற்சி செய்வது ஆகியவை வரைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றன.
  • அதுபோலவே, தயாரிப்பாளர் பொறுப்பேற்பு நிறுவனம் என்கிற புதிய கருத்துரையையும் அந்த விதிகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
  • அதன்படி, தயாரிப்பாளர்கள் அந்த நிறுவனங்களின் மூலம் தங்களது பொருள்களின் மின்னணுக் கழிவுகளை சேகரிக்க வழிகோலப்பட்டிருக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் 1,703 உற்பத்தியாளர்களும் 51 உற்பத்தியாளர் பொறுப்பேற்பு நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
  • பழைய சேலை, பழைய காகிதம், பழைய பொருள்கள் வாங்குவோர்போல பயன்படாத மின்னணுப் பொருள்களை சேகரிப்பவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். முனைப்புக் காட்டினால் நாமும் உலகுக்கு வழிகாட்டலாம்!

நன்றி: தினமணி  (25 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories