- ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டக் கூறு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. இந்திய அரசமைப்புக் கூறு 370 ரத்து செய்யப்படுவதாக, 2019 ஆகஸ்ட் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். மாநில அந்தஸ்தில் இருந்த ஜம்மு-காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. முன்னதாக இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- இதற்கு எதிரான வழக்குகளை ஒன்றாக விசாரித்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசமைப்புக் கூறு 370ஐ ரத்து செய்வதற்கும் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.
- அதோடு, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தற்காலிக ஏற்பாடுதான் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தின் காரணமாக அங்கு வெளிமாநிலத்தவர் தொழில் தொடங்க முடியாமலும் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்க முடியாமலும் இருந்தது; இதனால் உலகமயமாக்கலின் பலன்கள் அந்தப் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேராமல் ஜம்மு-காஷ்மீர் பின்தங்கியிருந்தது.
- இப்போது தொழில்முனைவோரும் முதலீட்டாளர்களும் அங்கு முதலீடுகளைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிறைய முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.
- இதன் மூலம் அந்த மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், பிரிவினைவாதிகள் மற்றும் அண்டை நாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் சதிவலையில் இளைஞர்கள் சிக்குவது தடுக்கப்படும். தொழில் வளரச்சி மூலமாக அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு வெளியுலகத் தொடர்பு அதிகரிக்கும். பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு வந்துபோகும்போது மதரீதியான பிரிவினைகள் அகலும்.
- ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக நிலவிவந்த பிரச்சினைகளுக்குத் தனது தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதோடு கூறு 370ஐ, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசமைப்புச் சட்ட அவையின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசோ குடியரசுத் தலைவரோ தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்கிற மனுதாரர்களின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடனும் அதன் பிரதிநிதியான ஆளுநருடனும் அடிக்கடி மோதல்கள் வெடிக்கின்றன.
- நாட்டின் நலன் கருதி மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை மாநில அரசு எதிர்த்தாலும் அவற்றைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் தீர்ப்பின் வழியாக அங்கீகரித்திருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதே நேரம், மத்திய அரசு மாநில அரசின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டியதும் அவசியம். மேலும், ஜம்மு-காஷ்மீரில் 2024 செப்டம்பர் 30க்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் வாக்குறுதி விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். ஜம்மு- காஷ்மீர் உணர்வுபூர்வமாக முழுமையாக இந்தியாவுடன் இணைந்து காஷ்மீரும் ஒட்டுமொத்த நாடும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்!
நன்றி: தி இந்து (14 – 12 – 2023)