- ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இனி தடங்கல்கள் நேர வாய்ப்பில்லை எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது.
- காளைகள்மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தலாகவே ஜல்லிக்கட்டு விளையாட்டை விலங்கு நல ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள். இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டுக்குச் சட்டரீதியான முட்டுக்கட்டைகளும் எழுந்தன. நீதிமன்றத் தடைகளும் தடை நீக்கங்களுமாகத் தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்கும் விதமாக 2009இல், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை அன்றைய திமுக அரசு நிறைவேற்றியது.
- மத்திய அரசின் அங்கமான இந்திய விலங்குகள் நல வாரியம், தனியார் அமைப்பான பீட்டா (PETA) ஆகியவற்றின் மனுக்களின் அடிப்படையில், 2014இல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்தது. 2017 ஜனவரியில் சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடி, அமைதிவழியில் நடத்திய போராட்டத்தின் விளைவாக, அன்றைய அதிமுக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1960இல் திருத்தம் மேற்கொண்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.
- எனினும், இந்தச் சட்டத்திருத்தத்துக்குத் தடைவிதிக்கக் கோரி விலங்குகள் நல வாரியமும் பீட்டாவும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் செல்லும் எனத் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
- காளை மாடு துன்புறுத்தப்படுகிறது என்னும் அடிப்படையில் 2014இல் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாடு அரசின் 2017 சட்டத்திருத்தம் ஜல்லிக்கட்டின்போது காளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் துன்புறுத்தலையும் ‘குறிப்பிடத்தக்க அளவு’ குறைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. கூடவே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது இந்தச் சட்டத்திருத்தத்தின் விதிமுறைகள் ‘பண்பாடு’, ‘மரபு’ ஆகியவற்றின் பெயரில் மீறப்படுவது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
- ஜல்லிக்கட்டு தமிழ்ப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது; அது பண்பாட்டு, மத அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் விவாதங்களுக்கு உள்பட்ட விஷயம் என்று கூறியிருப்பதும் இத்தீர்ப்பின் இன்னொரு முக்கியமான அம்சமாகும். அதேநேரம், தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளாகவாவது ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவருகிறது என்பதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு தாக்கல்செய்யப்பட வாய்ப்புள்ளது என்றாலும், நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தர அரணாக அமையும் என்று நம்பலாம்.
- இந்தத் தீர்ப்பு நிச்சயமாகத் தமிழர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றிதான். அதேநேரம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 2017இலிருந்து 100 பேரும் 23 காளைகளும் உயிரிழந்திருப்பதாக விலங்குகள் நல அமைப்பு கூறியிருக்கும் புள்ளிவிவரம் கவலைக்குரியது; வேடிக்கை பார்க்க வருவோரும் உயிரிழக்கிறார்கள்.
- ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்படுவதையும் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. அதுதான் இந்த வழக்கின் தீர்ப்புக்கு உண்மையான அர்த்தம் சேர்க்கும்!
நன்றி: தி இந்து (22 – 05 – 2023)