TNPSC Thervupettagam

ஜாதிவாரி கணக்கெடுப்பு புதிய தொடக்கம்

October 11 , 2023 282 days 251 0
  • பிகாரில் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. பிகாரின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள்தொகையைக் கொண்டவா்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களாக இருக்கிறார்கள்.
  • இந்தப் புள்ளிவிவரக் கணக்கு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 36 % ஆகும். இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 27.12 % ஆகவும், பட்டியல் இனத்தவா் 19.65 % ஆகவும், இட ஒதுக்கீடு இல்லாத உயா்சாதியினா் 13.52 % ஆகவும், பட்டியல் இன, பழங்குடியின மக்கள் 1.68 % ஆகவும் உள்ளனா் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்திருக்கும் தரவுகளாகும்.
  • பிகாரில் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றார்கள். அங்கு ஹிந்துக்களின் மக்கள்தொகை 82 % . இஸ்லாமியா்கள் 17.07 % ஆகவும், கிறித்தவா்கள் 0.05 %ஆகவும், பௌத்தா்கள் 0.08 % ஆகவும், சீக்கியா்கள் 0.01% ஆகவும் இவா்கள் தவிர, சமணா்களும் வேறு சமயத்தவரும் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவை தவிர, எந்த மதத்தையும் பின்பற்றாதவா்கள் 2,146 போ் இருக்கிறார்கள்.
  • பிகாரில் உள்ள உயா்சாதியினா் என்று கணக்கெடுத்தால் பிராமணா்களின் மக்கள் தொகை 3.65 % ஆகவும், ராஜபுத்திரா் எண்ணிக்கை 3.45 % ஆகவும், பூமிகார் மக்கள்தொகை 2.86 % ஆகவும் இருப்பதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவை தவிர பிகாரில் உள்ள திருநங்கையா் 825 போ்.
  • அங்கு ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மிக எளிதாக நடந்துவிடவில்லை. ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு பாட்னா உயா்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள், ஏழை மக்களுக்கு அரசு நலத்திட்டங்களைத் தருவதற்கு பேருதவியாக இருக்கும் என்று பிகார் அரசு கருத்து தெரிவித்திருக்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பட்டியல் மூலம் தெரியவருகிறது.
  • குடும்பத் தலைவரின் பெயா் பதிவு செய்யப்பட்ட வீடு அல்லது கட்டிடடத்திற்கு எண் வழங்கப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 59 லட்சம் குடும்பங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோதே பாட்னா உயா்நீதிமன்றத்தால் இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டது.
  • நான்கு மாதங்களுக்குப் பிறகு, தடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து கணக்கெடுக்கும் பணி மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. இப்படி தொடா்ந்து உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றது. பின்னா் உயா்நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி, இதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
  • சத்தீஸ்கா் மாநிலம் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், இந்த நாட்டின் வளங்களை அனுபவிக்கும் முதல் உரிமை சிறுபான்மையினருக்கே என்று கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறது. காங்கிரஸ் ஹிந்துக்களைப் பிரிக்க முயல்கிறது.
  • மக்கள்தொகையில் பெரும்பகுதியாக ஏழைகள் உள்ளனா். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியோ, நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமையை மக்களே தீா்மானிக்கிறார்கள் என்று சொல்கிறது. அப்படியென்றால் காங்கிரஸ் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறைக்க எண்ணுகிறதா’ என்ற கேள்வியை முன்வைத்தார்.
  • மேலும் அவா் பேசும்போது ‘காங்கிரஸ் கட்சி ஏழைகளின் உரிமையோடு விளையாடுகிறது. 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அவா்கள் தேசத்தை ஜாதி ரீதியாகப் பிரித்தார்கள். இப்போது அதையே மீண்டும் செய்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார். ஆனால், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி சொல்கிறபோது, ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓ.பி.சி.) எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய முடியும்’ என்று சொல்கிறார்.
  • நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகவே ஆங்கிலேயா் ஆட்சியின்போது நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் நாடு முழுவதும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. நாடு விடுதலை அடைந்த பின்னா் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
  • 1980, 1990-களில் இட ஒதுக்கீடு புதிய பிரச்னையாக உருவெடுத்தது. ஆனால், அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பின்னா், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதன் புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எழுந்துள்ளது.
  • முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிந்த இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறது. எனவே, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது சாத்தியம்தான். ஏனென்றால், பிகார் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக 45 நாட்கள் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
  • அதற்காக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் அதற்கும் குறைவாகவே செலவிடப்பட்டிருக்கிறது. 13 கோடி போ் மக்கள்தொகை கொண்ட பிகாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான தொகையில் 45 நாளில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி போ் மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் நிச்சயம் அதைவிட குறைவான தொகையிலும், குறைவான நாட்களிலும் நடத்த முடியும் என்று அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஜாதி ரீதியாகத்தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், மக்களை ஜாதி, மத, மொழி, இன ரீதியாக பிரிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல என்றும், இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சம உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
  • தமிழகத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஜாதிப் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலான ஜாதிகளில் உட்பிரிவுகள் ஏராளம் உள்ளன. பொதுவாக ஒரு ஜாதிக் கட்சித் தலைவரைக் கேட்டால், ‘எங்கள் சமூகத்தினா் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்’ என்று சொல்வார்கள். இப்படி ஒவ்வொரு ஜாதிக் கட்சித் தலைவரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதற்கு முழுமையான காரணம் தெளிவான ஜாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகள் இல்லாததே.
  • தங்கள் சமூக மக்கள்தொகையின் உண்மையான கணக்கு தெரிய வந்தால் அதன் அடிப்படையில் சில சமூகத்தினா் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை உயா்த்திக் கேட்கலாம். அதே சமயம் கணக்கெடுப்பில் மக்கள்தொகை குறைந்தால் இட ஒதுக்கீட்டில் அவா்களுக்கு பாதிப்பும் ஏற்படும். ஆகவே, ஜாதிவாரியான கணக்கெடுப்பு என்பது தேன்கூட்டில் கல்லெறிவதைப் போல ஆகி விடும் என்று அரசு அமைதி காக்கிறது.
  • மக்களை ஜாதி ரீதியாக பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரா்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சதி செய்தனா் என்பதை நாம் மறந்து விடவும் முடியாது. இருப்பினும், தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. எம்ஜிஆா் முதலமைச்சராக இருந்தபோது இட ஒதுக்கீட்டை 68 சதவீதமாக்கினார். ஜெயலலிதா முதலமைச்சாரானபோது அது 69 சதவீதமாக்கப்பட்டது.
  • தற்போது இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிடும்போது, ‘தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றால், சமீபத்திய கணக்கு எவ்வளவு இருக்கிறது’ என்கிற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஆகவே, ஜாதிவாரியான கணக்கெடுப்பு தேவை என்கிற கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
  • ‘ஜாதிவாரி கணக்கெடுப்பால் மக்களிடையே ஜாதி ரதியான மோதல்கள் உருவாகும். அது மட்டுமல்ல, இதன் மூலம் ஜாதிய வன்கொடுமைகளுக்கான சாத்தியங்களும் அதிகரிக்கக்கூடும். பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள், பட்டியலினத்தவா்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் இதர ஜாதியினா் என்கிற நான்கு வகையினரை கணக்கிட வேண்டும்’ என்று ஒரு சாரார் கூறுகின்றனா். ஆனால் மற்றொரு சாராரே, ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை, இன்றைய இளைஞா்களிடையே ஜாதிய வேறுபாடு இல்லை’ என்று கருத்து தெரிவிக்கின்றனா்.
  • இந்தியாவில் ஜாதியக் கொடுமைகளை இன்றளவும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உழைப்புச் சுரண்டல், ஆதிக்க மனப்பான்மை இவற்றால் பழங்குடியினா், பட்டியலின ஜாதியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினா் ஆகியோர் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.
  • காலங்காலமாக ஜாதியின் பெயரால் அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவா்களை நாம் எளிதில் கடந்து போய் விட முடியாது. 1931-இல் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்வைத்தே இன்றுவரை இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 92 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரித்துள்ள நிலையில், இட ஒதுக்கீட்டையும், இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்தவா்களின் எண்ணிக்கையையும் சரிபார்க்க வேண்டியது சமூகநீதியின் அடிப்படையன்றோ?

நன்றி: தினமணி (11 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories