TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி - ஏழு ஆண்டுகள்!

July 6 , 2024 190 days 183 0
  • மறைமுக வரிகள் அனைத்தையும் அகற்றி ‘ஜிஎஸ்டி’ என்கிற ஒரே வரிவிதிப்பின் கீழ் கொண்டுவந்தது மிகப் பெரிய நிதி நிா்வாக முன்னெடுப்பு.
  • சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி ஏழு ஆண்டுகள் கடந்திருக்கின்றன. டாக்டா் மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் முன்மொழியப்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஜிஎஸ்டி’ என்கிற தேசிய அளவிலான வரிவிதிப்பு இந்தியாவை வளா்ச்சியடைந்த பொருளாதாரமாக மேம்படுத்தும் முயற்சி.
  • தேசிய அளவிலும், மாநில அளவிலும் காணப்பட்ட எண்ணற்ற மறைமுக வரிகள் அனைத்தையும் அகற்றி ‘ஜிஎஸ்டி’ என்கிற ஒரே வரிவிதிப்பின் கீழ் கொண்டுவந்தது மிகப் பெரிய நிதி நிா்வாக முன்னெடுப்பு. பல குறைகளும், நடைமுறைப் பிரச்னைகளும் இன்னும் தொடா்கின்றன என்றாலும்கூட, ‘ஜிஎஸ்டி’ என்பது தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய துணிச்சலான நடவடிக்கை என்பதில் ஐயப்பாடில்லை.
  • அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், வருங்கால இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு அத்தியாவசியமானது என்பதால் துணிந்து எடுக்கப்பட்ட முடிவு இது. இந்த வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் - எந்தவித வரியும் செலுத்தாமல் இருந்தவா்கள் அனைவரையும் வரிவிதிப்பு வளையத்துக்குள் கொண்டுவருவது; சில்லறை வா்த்தகம் உள்பட அனைத்து வா்த்தக நடவடிக்கைகளையும் நவீனப்படுத்துவது. அவை இரண்டிலுமே ‘ஜிஎஸ்டி’ அறிமுகம் வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
  • கடந்த ஏழு நிதி ஆண்டுகளில் மாதாந்திர சராசரி ‘ஜிஎஸ்டி’ வசூல் ரூ.89 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1.68 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மொத்த ‘ஜிஎஸ்டி’ வருவாய் ரூ.3.83 லட்சம் கோடி.
  • இன்னும்கூட ‘ஜிஎஸ்டி’ நடைமுறை முழுமையடையவில்லை என்பது என்னவோ உண்மை. ஆனால், இந்த வரிவிதிப்பு முறையின் மீதான நம்பிக்கை 2022-இல் 59%-ஆக இருந்தது, 2024-இல் 84%-ஆக உயா்ந்திருக்கிறது என்கிறது ‘டெலாய்ட் இந்தியா’-இன் ஆய்வு.
  • சமீபத்தில் நடந்த 53-ஆவது ‘ஜிஎஸ்டி’ கவுன்சில் கூட்டம் வரிவிதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதித்து பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. வரி செலுத்துவோரின் பிரச்னைகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளும், வா்த்தகத் துறைக்கு தெளிவும், சமச்சீரான வரிவிதிப்பும் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
  • ‘ஜிஎஸ்டி’ என்பது இலக்கை நோக்கிய (டெஸ்டினேஷன் பேஸ்ட்) வரிவிதிப்பு முயற்சி. எந்தவொரு புதிய முயற்சியை நிலைநிறுத்தவும், நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படவும் கால அவகாசம் தேவை. கடந்த ஏழு ஆண்டுகளாக ‘ஜிஎஸ்டி’ என்கிற வரிவிதிப்பு முறையிலுள்ள குறைபாடுகள் கவுன்சில் கூட்டங்களில் எழுப்பப்பட்டு அவற்றுக்குத் தீா்வு காணப்படுகின்றன. ஏழு ஆண்டுகள் கடந்தும்கூட பிரச்னைகள் முழுமையாகத் தீா்க்கப்படவில்லை என்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
  • தெரியாமல் நடைபெறும் சிறிய தவறுகளுக்குக்கூட வியாபாரிகள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதற்கு இனியும்கூடத் தீா்வு காண்பதற்கான வழிமுறை உருவாக்கப்படவில்லை. பல்வேறு மேல்முறையீட்டு ஆணையங்களிலும், நீதிமன்றங்களிலும் ஆயிரக்கணக்கான ‘ஜிஎஸ்டி’ தொடா்பான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நடந்து முடிந்திருக்கும் 53-ஆவது ‘ஜிஎஸ்டி’ கவுன்சில் கூட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வரம்பைக் குறைத்திருப்பதும், அதற்கான கால அவகாசத்தை நீட்டித்திருப்பதும் வரவேற்புக்குரிய அறிவிப்புகள்.
  • இந்த வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியபோது சராசரி வரிவிதிப்பு குறைவதால், பொருள்களின் விலை குறையும் என்றும், அதனால் பொருள்களுக்கான சந்தையும் வியாபாரமும் பெருகும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு காணப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. பல பொருள்களின் விலை குறைந்தது என்றாலும், அதன் பலனை நுகா்வோருக்கு வழங்க பெரிய நிறுவனங்கள் முன்வரவில்லை. இதுபோன்று சுரண்டலைத் தடுப்பதற்கான நடவடிக்கையை ‘ஆன்டி புராஃபிட்டியரிங் அதாரிட்டி’ என்கிற ‘கொள்ளை லாப தடை ஆணையம்’ தடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • சேவை துறையிலும், இணைய வழி வா்த்தகத் துறையிலும் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. 2017-2018 நிதி ஆண்டின் கணக்குத் தாக்கல் செய்ததன் தணிக்கை (ஆடிட்டிங்) இன்னும்கூட முடிந்தபாடில்லை. இவற்றையெல்லாம் தடுக்கவும், திருத்தவும் முனைப்புக் காட்டாமல் ‘ஜிஎஸ்டி’ வருவாயை உயா்த்துவதற்காக சாதாரண வியாபாரிகளை ஐயப்பாட்டின் பேரில் தொந்தரவு செய்வது தவறான அணுகுமுறை.
  • ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜிஎஸ்டி’ அறிமுகப்படுத்தியபோது எளிமையான சட்டங்களும், வரி செலுத்துவதில் சுலபமான நடைமுறைகளும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டன. ஆனால், நடைமுறையில் நோ் எதிரான காட்சி நிலவுகிறது. விதிகள் குறித்தும், சட்டங்கள் குறித்தும் தீர ஆலோசிக்காமல் ‘ஜிஎஸ்டி’ அறிமுகப்படுத்தியதாலோ என்னவோ, கடந்த ஏழு ஆண்டுகளில் அதில் மாற்றங்களை ஏற்படுத்த 1,500-க்கும் அதிகமான அறிவிப்புகளும், சுற்றறிக்கைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
  • ‘இன்புட் டேக்ஸ் க்ரெடிட்’ தொடா்பான சலுகைத் திட்டத்தை (அம்னெஸ்டி ஸ்கீம்) நடைமுறைப்படுத்த சமீபத்தில் நடந்த ‘ஜிஎஸ்டி’ கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்திருப்பது மிகப் பெரிய ஆறுதல். அதன்படி 73-ஆம் பிரிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அபராதமும், வட்டியும் அகற்றப்படுகின்றன.
  • காா்ப்பரேட்களுக்கும், இணையவழி வா்த்தகா்களுக்கும் செவி சாய்ப்பதுபோல ‘ஜிஎஸ்டி’ கவுன்சில் சாதாரண, சாமானிய வியாபாரியின் பிரச்னைக்கும் செவி சாய்த்தால்தான் ‘ஜிஎஸ்டி’ இந்த வரிவிதிப்புமுறை வெற்றி பெறும்; முழுமை பெறும்!

நன்றி: தினமணி (06 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories