TNPSC Thervupettagam

ஜிடிபி - வேலைவாய்ப்பு: எது நமது தேவை?

September 15 , 2024 127 days 167 0

ஜிடிபி - வேலைவாய்ப்பு: எது நமது தேவை?

  • எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பு குறைவதற்கான காரணங்களில் ஒன்று, உள்நாட்டிலேயே தயாராகும் பொருள்களைச் சிலர் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான்; பிரிட்டிஷ்காரர்கள் நம்மை காலனியாக அடிமைப்படுத்தி ஆண்டபோது இந்தப் போக்குதான் வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தியது. உள்நாட்டில் கை நெசவில் தயாராகும் ஆடைகளைவிட பிரிட்டனிலிருந்து தருவிக்கப்படும், பெரிய ஆலைகளில் நூற்பு இயந்திரங்களில் தயாரான ஆடைகளை அதிகம் பேர் வாங்கினர்.
  • நில உடைமையாளர்கள் மட்டுமில்லை, நிலங்களில் வேலை செய்யும் குடிமக்கள்கூட வாங்கினர். லண்டன் சீமைத் துணியின் தரம், கண்ணைக் கவரும் வண்ணம், அதன் மலிவான விலை ஆகியவையும் அதற்குக் காரணங்கள். இதனால் உள்நாட்டுத் தொழிலுக்கு ஆதரவு குறைந்தது, நெசவாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பிழந்தனர். இப்போதுமே சீனத்திலிருந்து அலங்காரமான விளக்குகள் பண்டிகைகள் காலத்தில் அதிகம் தருவிக்கப்படுகின்றன.
  • தீபாவளி காலத்தில், உள்நாட்டிலேயே தயாராகும் களிமண் அகல், மெழுகுவர்த்தி வாங்கப்படுவதில்லை. இறக்குமதிப் பொருள்களின் மீதான மோகங்களால், உள்நாட்டில் அதே பொருளைத் தயாரிக்கும் கைவினைஞர்கள், நெசவாளர்கள் போன்றோருக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது.
  • இப்படி வெளிநாட்டுப் பொருள்களை அதிகம் வாங்குவதற்குக் காரணம் வெளிநாட்டுப் பொருள் மீதான மோகம் மட்டுமல்ல, அதன் தரம், விலை, தயாரிப்பு நேர்த்தி போன்றவையும்தான். இதனால் அரசுகளுக்குப் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. உள்நாட்டுப் பொருள் உற்பத்தியை ஆதரிப்பதா, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதைத் தடைசெய்வதா என்பதே அந்தக் குழப்பம்.
  • வெளிநாட்டு இறக்குமதிக்குத் தடை விதித்தால் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் தரமான பொருள் கிடைக்காமல் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் குறைபாடு ஏற்படும். இறக்குமதியை அனுமதித்தால், உள்நாட்டுத் தொழில் நசிந்துவிடும், அதனால் ஏராளமானோர் வேலையை இழந்துவிடுவார்கள்.

காந்தி – தாகூர்

  • நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் இந்த விஷயத்தில் நேரெதிரான நிலையை எடுத்தனர். இது தொடர்பாக இருவரும் கடிதங்களை எழுதினர், ஆனால் அதில் ஒன்றில்கூட பரஸ்பரம் இன்னொருவரைப் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. (சவ்யசாச்சி பட்டாசார்யா இவ்விருவரும் எழுதிய கடிதங்களைத் தொகுத்து புத்தகமாகவே பதிப்பித்திருக்கிறார். அது நிச்சயம் இன்றைய பொருளாதார மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் சுவாரசியமான பல தகவல்களைத் தரும்).
  • காந்திஜி வேலைவாய்ப்பு குறைவது குறித்து அதிகம் கவலைப்பட்டார். உள்நாட்டுத் தொழிலை, இறக்குமதிக்கு எதிராகக் காப்பாற்ற வேண்டும் என்று ஓரிடத்திலும் அவர் கூறவில்லை. காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அப்படி அவர் கோரினாலும் அதைக் கேட்டு அமல்செய்யமாட்டார்கள். எனவே, இந்திய மக்களுக்கு அவர் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார்.
  • சுதேசி நெசவுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அன்னிய நாட்டுத் துணிகளைப் புறக்கணியுங்கள், வாங்காதீர்கள், அணியாதீர்கள் என்றார். “என்னுடைய கிராமத்தில் உள்ள ஏழை நெசவாளர் அடுத்த வேளை குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் பட்டினி கிடக்கும்போது என்னால் எப்படி லண்டன் நகர கடைவீதியில் வாங்கிய அன்னியத் துணியைச் சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அணிந்து மினுக்க முடியும்?” என்று கேட்டார். அவருடைய வேண்டுகோள் அறம் சார்ந்தது, உள்ளூர் நெசவாளர்கள் வேலையின்றித் தவிக்கும்போது மேலை நாட்டு ஆடம்பரப் பொருள்களை வாங்கி அணிந்து எப்படி மனம் மகிழ முடியும் என்பது அதன் உட்பொருள்.

வீடும் உலகமும்

  • தாகூரின் நிலைப்பாடு இதற்கு மாறுபட்டது. அதை அவருடைய ‘கரே-பைரே’ (வீடும் உலகமும்) நாவலில் காணலாம். “காலனி ஆட்சியாளர்களால் கசக்கிப் பிழியப்படும் ஏழை விவசாயி விலை மலிவாகவும் நல்ல தரத்திலும் வெளிநாட்டுத் துணி கிடைக்கும்போது வாங்கி அணிவதால், ஏதோ சிறிய அளவில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவார்கள்; அந்த அல்ப சந்தோஷத்தையும் கெடுப்பானேன்?” என்று கேட்பார் தாகூர். (அப்படி தடுப்பது வகுப்பு மோதலை உருவாக்கும் என்றும் தாகூர் அஞ்சினார். காரணம் அவர் காலத்தில் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மைச் சமூகத்தவர்களாகவும், நில உடைமையாளர்கள் பெரும்பான்மைச் சமூகத்தவர்களாகவும் இருந்தார்கள்).
  • சுதேசி துணி ஆதரவு – அன்னியத் துணி புறக்கணிப்பு இயக்கத்தில், முன்னணியில் இருந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்கள்தான். அவருடைய கருத்தில் தார்மிக அறம் ஏதுமில்லை, அதேசமயம் ஏழைகளாக இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள் லண்டன் துணி அணிவதில் மகிழ்ச்சி அடைந்தால் அதைத் தடுப்பானேன் என்ற ஆதங்கமே தூக்கலாக இருந்தது.
  • இன்றைய பொருளாதார அறிஞர்களாக இருந்தால், இந்த விவகாரத்தில் மேலும் ஆராய்ச்சி எதற்கு என்று ஒதுங்கிவிடுவார்கள். உள்நாட்டுத் துணியா, இறக்குமதித் துணியா என்பதை சமூகம் தீர்மானித்துக்கொள்ளட்டும், கருத்தைத் திணிக்க நாம் யார் என்று கூறுவார்கள்.
  • உள்நாட்டுத் தொழிலைக் காப்பதா, உள்நாட்டு நுகர்வோர் நலனைக் காப்பதா என்ற கேள்விக்குச் சரியான பதிலைத் தேர்வுசெய்ய முடியாமலும் ஓரளவுக்குத் திணறுவார்கள். இந்த விவகாரத்தில் வேலையை இழக்கும் நெசவாளர்களும் மலிவான துணியை வாங்கி அணியும் விவசாயத் தொழிலாளர்களும் ஏழைகளே என்பதால், சமத்துவக் கண்ணோட்டப்படி பார்த்தால்கூட யாரோ ஒருவருக்கு ஆதரவாகவே கருத்து சொல்ல வேண்டியிருக்குமே என்பார்கள்.

மேலும் ஆராய்க

  • பொருளாதார அறிஞர்களைப் போலவே நாமும் இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டுவிடக் கூடாது. குறுகிய கால நோக்கில் அல்லாமல், நீண்ட கால நோக்கில் பார்த்து நாம் முடிவெடுத்தாக வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனில் உற்பத்தியாகும் துணிகள், உள்நாட்டு நெசவுத் துணிகளைவிட விலை மலிவாக ஆரம்பத்தில் விற்கப்பட்டாலும் நாளாக நாளாக விலை உயர்த்தப்பட்டுக்கொண்டேவந்தன. அதேசமயம், நீண்ட காலமாக இந்த வியாபாரம் நடந்ததால் ஏராளமான வீடுகளில் கைத்தறிகளின் ஓசைகள் அடங்கிவிட்டன.
  • வேலையில்லாத நெசவாளர்களும் கஞ்சி குடிக்க ஏதாவதொரு வேலை செய்தாக வேண்டும் என்று விவசாயம் சார்ந்த வேலைக்கே வரத் தொடங்கினர். மலிவு விலையில் முதலில் துணி வாங்கிய விவசாயத் தொழிலாளர்களும், அதிகம் பேர் தங்களுடைய வேலைக்குப் போட்டியிட்டதால் கூலிக் குறைவுக்கு ஆளானார்கள். அத்துடன் வேலை நாள்களும் குறைந்தன. வருமானம் குறைந்து வறுமையில் ஆழ்ந்தார்கள்.
  • ‘குறைந்த அளவு விளைநிலம் - அதிக விவசாயத் தொழிலாளர்கள்’ என்ற நிலை ஏற்பட்டதால் நில உடைமையாளர்கள் குடிவாரதாரர்களுக்குக் குத்தகைத் தொகையை உயர்த்திவிட்டார்கள். எவ்வளவு பாடுபட்டாலும் கிடைக்கும் விளைச்சலில் நில உடைமையாளருக்குக் கொடுத்த குத்தகைத் தொகை போக, எஞ்சிய தொகை தங்கள் குடும்பத்துக்குப் போதாமல் விவசாய குத்தகைதாரர்களும் வாடத் தொடங்கினார்கள். நிலங்களில் உற்பத்தித் திறனும் விளையும் பயிர் அளவும் கூடவில்லை. இதுதான் 19வது நூற்றாண்டில் நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுடைய வறுமை வரலாறாக இருந்தது. விபின் சந்திரா எழுதிய நூலில் இது விரிவாக இடம்பெற்றுள்ளது. (‘எ ரீஇண்டர்பிரிடேஸன் ஆஃப் நைன்டீன்த் செஞ்சூரி இந்தியன் எகானமிக் ஹிஸ்டரி’ - A Reinterpretation of Nineteenth Century Indian Economic History, IESHR, 5(1), 1968).
  • இங்கிலாந்து ஆலைகளில் தயாரான துணிகளை மலிவாக வாங்கியவர்களில் - குறுகிய காலத்திலும் சரி நீண்ட காலத்திலும் சரி - அதிகம் பயனடைந்தவர்கள் நில உடைமையாளர்கள்தானே தவிர விவசாயத் தொழிலாளர்கள் இல்லை என்பது முழு வரலாறையும் படித்த பிறகு புரியும். எனவே வேலைவாய்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் இருக்கிறது. அது அறம் சார்ந்த காரணங்களாலும் இருக்கும்போது பெரும்பாலான மக்களும் ஏற்பார்கள்.
  • இந்த வரலாற்றிலிருந்து நாம் இரண்டு முடிவுகளைப் பெறுகிறோம்: முதலாவது, எந்தவொரு முடிவின் விளைவையும் ஆராயும்போது, குறிப்பிட்ட அந்தக் குறுகிய காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதோடு நிறுத்தாமல், நீண்ட கால நோக்கில் இது எங்கே போய் முடியும் என்றும் தீர்க்கமாக ஆராய்ந்தாக வேண்டும்.
  • இரண்டாவதாக, வேவையில்லாத் திண்டாட்டம் என்பது அப்போதைக்கு மட்டுமல்ல, அதற்குப் பிறகும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் அதைப் போக்குவதே சமூகத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை (ஜிடிபி) அதிகரிப்பதாக மட்டும் இருந்துவிடக் கூடாது, அந்த வளர்ச்சி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, வேலையின்மை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்கே முன்னுரிமை தர வேண்டும். மலிவாகக் கிடைக்கும் பொருள்களாக இருந்தாலும் இறக்குமதிக்கு ஊக்குவிப்பு தரக் கூடாது.

நன்றி: அருஞ்சொல் (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories