TNPSC Thervupettagam

ஜி20 மாநாடு: இந்தியாவின் ஆக்கபூர்வ முயற்சிகள் வெல்லட்டும்

September 8 , 2023 491 days 302 0
  • தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பேற்று மாநாட்டை நடத்தும் நிலையில், உலகின் பார்வை இந்தியா மீது குவிந்திருக்கிறது. காலநிலை மாற்றம், உக்ரைன் போர் ஆகியவற்றின் விளைவாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் எனப் பல விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவிருக்கின்றன.
  • ஜி20 அமைப்பு இதுவரை சாதித்திருக்கும் விஷயங்கள் குறித்துப் பரவலான விமர்சனங்கள் உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் உறுப்பு நாடுகளிடம் இந்தியா முன்வைத்த பரஸ்பர சட்ட உதவி (Mutual Legal Assistance) அடிப்படையிலான 229 கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என ஊழலுக்கு எதிரான ஜி20 செயற்குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
  • இத்தாலி தலைநகர் ரோமில்2021இல் நடந்த ஜி20 மாநாட்டில், புவி வெப்பமாதல் பிரச்சினைக்கு அர்த்தபூர்வமான, செயல்திறன் கொண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டே நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்திருப்பதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்தது.
  • காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணியாகக் கருதப்படும் நிலக்கரிப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த முறைகூட, சென்னையில் நடைபெற்ற ஜி20உறுப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மாநாட்டில், காலநிலை மாற்ற நெருக்கடி குறித்து ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
  • அதேவேளையில், இந்த அமைப்பு குறிப்பிடத்தக்க சில வெற்றிகளைக் கண்டிருப்பதை மறுக்க முடியாது. 2008, 2009இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரமந்தநிலை எதிர்கொள்ளப் பட்டதில் இந்த அமைப்பின் பங்களிப்பு முக்கியமானது. 2016இல் சீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
  • பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகளைக் கொண்ட அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும், உக்ரைன் போர் காரணமாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் ரஷ்யாவும் இடம் பெற்றிருக்கும் இந்த அமைப்பில் இழுபறிகள் இல்லாமல் இல்லை. டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே அறிவித்திருந்ததார்; இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொள்ளப் போவதில்லை, அவருக்குப் பதிலாகச் சீனப் பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் என சீனா தெரிவித்திருக்கிறது.
  • ஐ.நா., பன்னாட்டு நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் பட்டியலில் இன்னும் வலுவான அமைப்பாக ஜி20 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பின் செயல்பாடுகளில் போதிய வலு இல்லை என சர்வதேசப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி, வளர்ந்த நாடுகளும் வளர்ந்துவரும் நாடுகளும் இடம்பெற்றிருக்கும் இந்த அமைப்பு தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து வரும் நாடுகளிடையே நிலவுகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, ஜி20 தலைமைப் பொறுப்பை வகிப்பதில் ஆக்கபூர்வமாகவே செயல்பட்டிருக்கிறது. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள், இணையப்பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை தொடர்பாக, இந்த அமைப்பில் முதன்முறையாக அதிகாரபூர்வ விவாதங்களை இந்தியா முன்னெடுத்திருக்கிறது.
  • ஸ்டார்ட்-அப்நிறுவனங்களை அதிகரிப்பது தொடர்பான இந்தியாவின் முன்னெடுப்பை சவுதி அரேபியாஆதரித்திருக்கிறது. அடுத்த ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் பிரேசில், இந்தியாவின் முயற்சிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கும் என நம்புவோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories