TNPSC Thervupettagam

ஜூன்டீன்த்: மானுட விடுதலையின் கொண்டாட்டம்

June 20 , 2024 205 days 188 0
  • காலந்தோறும் பெருந்திரளான மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதும் அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுவதும் உலகமெங்கும் நிகழ்ந்து வந்திருக்கிறது. உழைக்கும் மக்களின் விடுதலை உணர்வும் நியாயமான கோபமும் சுயமரியாதையும் அவர்கள் கிளர்ந்தெழக் காரணங்களாக இருந்திருக்கின்றன. நிறரீதியிலான ஆதிக்கம், ஆதிக்கச் சாதி ஆகியவற்றோடு எப்போதும் இணைந்தே இருக்கும் முதலாளியம், உழைக்கும் மக்களின் வறுமையைத் தீர்த்திட அக்கறை காட்டிய வரலாறு மிகக் குறைவு. அதனாலேயே உழைக்கும் மக்கள் தமக்கான விடுதலையையும், வரலாற்றையும், கலைகளையும் தாமே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
  • உலக அளவில் இதற்கு மிகச் சிறந்த சான்று, ஆப்ரிக்க அமெரிக்கர்கள். பல நூற்றாண்டுகளாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான அவர்கள், அதிலிருந்து மீண்ட வரலாற்றையும் அதை நினைவுபடுத்திக்கொள்ளும் விதமாக முன்னெடுக்கும் கொண்டாட்டங்களையும் உலகமெங்கும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களுக்குப் படிப்பினைகளைத் தந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு சவாலான தருணத்தையும் இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றின் துணையோடு மிக யதார்த்தமான எத்தனிப்புகளுடன் கடந்துவிடுகின்றனர். ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான காரணங்கள் அவர்களுக்கு இருந்தபோதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கொண்டாட்டம் ‘ஜூன்டீன்த்’.

ஜூன்டீன்த்தும் கார்டன் கிரேஞ்சரும்

  • அமெரிக்காவில் அடிமைத்தனம் என்னும் உழைப்புச் சுரண்டல் முறை முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதைக் கொண்டாடும் நாள் ஜூன்டீன்த். பொ.ஆ. (கி.பி.)1865 ஜூன் 19 ஆம் தேதி மேஜர் கார்டன் கிரேஞ்சர் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதாக அறிவித்தார். அது முதல் டெக்சாஸின் கால்வெஸ்டனில் அமைந்துள்ள ஆப்ரிக்காவின் பூர்விக வம்சாவளியைச் சேர்ந்த உழைக்கும் கறுப்பின மக்கள், ஆண்டுதோறும் ஜூன் 19ஆம் தேதியைத் தங்களின் விடுதலை நாளாகக் கொண்டாடிவருகிறார்கள்.
  • ஆபிரகாம் லிங்கனால் 1863 ஜனவரி 1ஆம் தேதி அவர் கையெழுத்திட்ட விடுதலைப் பிரகடனத்தின் வழி ஏற்கெனவே ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது. சட்டம் விடுதலை செய்தாலும் பிரபுக்கள் விடுதலை செய்வதாக இல்லை.
  • குறிப்பாக, டெக்சாஸ் மாகாணம் அமெரிக்கத் தலைநகரிலிருந்து வெகுதொலைவில் இருந்தமையாலும் அரசின் கவனம் போதிய அளவுக்குச் செலுத்தப்படாமையாலும் அதிபரின் பிரகடனத்துக்குப் பிரபுக்கள் செவிசாய்க்கவில்லை. ராணுவத் தலையீடு இல்லாமலேயே பிரகடனத்தைச் செயல்படுத்த லிங்கன் விரும்பினார். நிற ஆதிக்கர்களை ராணுவ நடவடிக்கைகளுக்கு உள்ளாக்காமல், அவர்களிடம் மனத்தளவிலான மாற்றத்தை உண்டாக்கினால் மட்டுமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று நம்பி, பிரபு – அடிமை விஷயத்தில் ராணுவத்தை விலக்கியே வைத்திருந்தார். லிங்கன் நினைத்தபடி பிரபுக்கள் மனம் மாறவில்லை. இந்தச் சூழலை மேஜர் கார்டன் கிரேஞ்சரின் ராணுவம்சார் பிரகடனம் சரிசெய்தது. பிரபுக்கள் வழிக்கு வந்தனர்.

ஜூன்டீன்த் கொண்டாட்டம்

  • ஜூன்டீன்த் கொண்டாட்டத்தில் தொடர் அணிவகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள், குடும்பச் சந்திப்புகள், கண்காட்சிகள், மாரத்தான், பேச்சுகள், கவிதை, கதை, வரலாறு வாசிப்பு ஆகியவற்றை நிகழ்த்துகின்றனர். ஆடம்பரமான உடைகளை அணிந்து பார்பிக்யூ, தர்பூசணி, ஸ்ட்ராபெரி சோடா (strawberry soda) உள்ளிட்ட சிவப்பு நிறமுள்ள உணவுகளை விருந்து வைக்கின்றனர். பரிமாறப்படும் ஒவ்வொரு உணவும் அவர்களின் விடுதலை உணர்வோடு தொடர்புடையதாக இருக்கிறது. சான்றாக, தர்பூசணியைக் குறிப்பிடலாம். அவர்கள் விடுதலை அடைந்த தொடக்கக் காலத்தில் தர்பூசணியைத்தான் பயிரிட்டனர்; சந்தைப்படுத்தினர்; விரும்பி உண்டனர். நாளடைவில் தர்பூசணி ஆப்ரிக்க அமெரிக்கர்களின் அடையாளமாகவே மாறிப்போனது. அவர்களை வெள்ளையர்கள் கேலி செய்வதென்றால்கூட தர்பூசணியை வைத்தே கேலிசெய்தனர்.
  • சான்றாக, ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். 2014இல் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் ரகசியப் பாதுகாப்புச் சேவையின் குறைபாடுகள் விமர்சிக்கப்பட்டன. நிர்வாகத் தோல்வி என்றெல்லாம் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது. இந்தச் சூழலில், ஒபாமாவைப் பற்றி பாஸ்டன் ஹெரால்டு, ஜெர்ரி ஹோல்பர்ட் ஆகியோர் வரைந்த கேலிச்சித்திரங்கள் சர்ச்சையாகின.
  • அந்த கேலிச்சித்திரத்தில் குளியல் அறையில் ஒபாமா பல் துலக்கிக்கொண்டிருப்பது போலவும் அவருக்குப் பின்னால் உள்ள குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் வெள்ளையர் ஒருவர் ஒபாமாவிடம், ‘நீங்கள் புதிய தர்பூசணிச் சுவையுள்ள பற்பசையை முயன்றீர்களா?’ என்று கேட்பதுபோலவும் வரையப்பட்டு இருந்தது. இந்தப் படத்துக்காகச் சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்ததும் கேலிச்சித்திரக்காரர்கள் இருவரும் மன்னிப்புக் கேட்டனர். அந்த அளவுக்கு ஆப்ரிக்க அமெரிக்கர்களின் பண்பாட்டோடு தர்பூசணிக்கு முக்கிய இடமுண்டு.

ஜூன்டீன்த் சொல்லும் செய்தி

  • ஆரம்ப கால ஜூன்டீன்த் கொண்டாட்டங்கள் டெக்சாஸ் மாகாணத் தேவாலயங்களில் மட்டுமே நடைபெற்றன. அமெரிக்காவின் பொது வசதிகளை ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பயன்படுத்த மறைமுகத் தடைகள் இருந்தமையால் அவர்களுக்கே உரியதாக இருந்த தேவாலயங்கள் கொண்டாட்டக் களங்களாக இருந்தன. இந்தத் தடை காரணமாகவே ஜூன்டீன்த் தெற்கு அமெரிக்கா வரை பரவுவதற்கு ஏறக்குறைய 60 ஆண்டுகள் ஆனது.
  • தொடக்கத்தில் கூட்டு வழிபாடு என்பதாக மட்டுமே இருந்த இக்கொண்டாட்டம், 1920களிலிருந்து ஆடம்பரமான உணவு வகைகளைத் தயார் செய்து, பலருக்கும் பரிமாறுவதாக மாற்றம் பெற்றது. ஆப்ரிக்க அமெரிக்கர்களின் இடப்பெயர்வு அமெரிக்கா முழுமைக்கும் தொடர்ச்சியாக இருந்தமையாலும், பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்டின் வெவ்வேறு இடங்களில் வசித்த அவர்கள், டெக்சாஸில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்குபெற்றனர். அங்கு விழா ஏற்பாடு செய்யப்படும் முறையை அறிந்துகொண்டு, தங்கள் பகுதிக்குச் சென்று கொண்டாடியதால் 1950களுக்குப் பிறகே, அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்படும் விழாவாக ஜூன்டீன்த் உருப்பெற்றது. 1980களின் பிற்பகுதியில் கலிபோர்னியா, விஸ்கான்சின், இல்லினாய், ஜார்ஜியா, வாஷிங்டன் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அது மட்டுமல்ல, 1850களில் அமெரிக்க அடிமை முறையிலிருந்து தப்பித்து, மெக்சிகோவின் கோஹுய்லாவில் குடியேறிய பிளாக் செமினோல்ஸின் வழித்தோன்றல்களான மஸ்கோகோஸால் மக்களாலும் கொண்டாடப்படும் அளவுக்கு ஜூன்டீன்த் விரிவாக்கம் பெற்றது.
  • அண்மைக் காலமாக ஜூன்டீன்த்தின் துணை நிகழ்வாக ‘மிஸ் ஜூன்டீன்த்’ என்பதும் முன்னெடுக்கப்படுகிறது. இதை ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்கள் சிறப்பிக்கிறார்கள். வளமான ஆப்ரிக்க அமெரிக்கச் சமூகத்தை உருவாக்குவதற்கான தேவை, பல்வேறு கலை இலக்கிய வடிவங்களின் வழி அவர்களிடம் எடுத்துச்சொல்லப்படுகிறது. தொழில் முனைவோராகவும் தற்சார்புப் பொருளாதாரம் கொண்டவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அரசியல் தளத்தில் ஜூன்டீன்த்

  • ஆப்ரிக்க அமெரிக்கர்கள் 1890களின் தொடக்கத்தில் ‘ஜூன்டீன்த்’ வார்த்தையை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர், டெக்சாஸ் இதழான ‘தி கரண்ட் இஷ்யூ’, 1909இல் இந்த வார்த்தையை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தியது. அதே ஆண்டு வெளியான சான் அன்டோனியோ பற்றிய புத்தகத்திலும் அது தொடர்ந்தது. அதன் பிறகு ஜூன்டீன்த் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டமாக மாறியது. இதன் விளைவாக, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜூன்டீன்த் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் பொது விடுமுறை நாளாக 2021இல் அறிவித்தார்.
  • ஆப்ரிக்க அமெரிக்கர்களில் கருத்துவேறுபாடுள்ள பிராந்தியத் தலைவர்கள் அனைவரும் ஜூன்டீன்த் பொதுக் கொண்டாட்டத்தில் தனிப்பட்ட வேறுபாடுகளைக் கடந்து பங்கெடுக்கின்றனர். வளரும் தலைமுறையினருக்கும் இளைஞர்களுக்கும் பாரம்பரியத்தையும் பெருமித உணர்வையும் ஊட்டுவதற்கு ஜூன்டீன்த் உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
  • மேற்கு மிஷிகன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரான மிட்ச் கச்சுன், ஜூன்டீன்த் கொண்டாட்டங்களின் நோக்கம் ‘கொண்டாடுதல், கற்பித்தல், கிளர்ச்சி செய்தல்’ என்னும் மூன்று இலக்குகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடுகிறார். ஜூன்டீன்த்தைச் சமூக, அரசியல் விடுதலை நாளாகக் கொண்டாடும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள், அதன் வழி சமூகத்துக்கும் கற்பித்தலை தருகின்றனர். அது அவர்களின் உரிமையைப் பிரகடனப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு சமூகத்துக்கும் விடுதலையை நோக்கி நகர்வதற்கான ஒரு செய்தி அந்தக் கொண்டாட்டத்தில் இருக்கிறது.
  • ஜூன்​ 19 - ஜூன்​டீன்​த்​ நாள்- 160ஆவது ஆண்​டுத்​ தொடக்​கம்​

நன்றி: தி இந்து (20 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories