TNPSC Thervupettagam

ஜூன் 15, 1975 - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே முடிவு

June 15 , 2023 389 days 322 0
  • இடைக்காலத் தடை கோரி தாக்கல் செய்யவுள்ள மனுவின் மீது உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியின் தீர்ப்பு தெரிந்த பிறகுதான் பதவியிலிருந்து விலகுவதா, நீடிப்பதா என்று பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
  • இந்திரா காந்திக்கு எதிராக நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கக் கூடாது, வாக்களிக்க முடியாது என்பன போன்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டால் ஒருவேளை அவர் தாற்காலிகமாகப் பதவி விலகக் கூடும்.
  • ஆனால், நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும் அவர் பதவியில் தொடருவார், விவாதங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதித்தால் நாடாளுமன்றத்தைக் கூட்டாமலேயே பிரதமர் சமாளிப்பார் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
  • தடை விதிக்கக் கோரும் முறையீட்டு மனு சில நாள்களில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன் விசாரணைக்கு வரும். இதுவரை நிபந்தனையற்ற தடை என யாருக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கியதில்லை. ஆனால், பிரதமரின் வழக்கு வலுவாக இருப்பதாகவே அவருடைய ஆலோசகர்களும் சகாக்களும் தெரிவித்தனர்.

இந்திரா காந்தி விலகுவதே நல்லது

  • இந்திரா காந்தியைப் பதவியிலிருந்து விலக்கக் கோரி, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்குத் தாம் தலைமை தாங்கப் போவதில்லை என்றும் அன்றைய நாளில் தமக்கு வேறு அலுவல்கள் இருப்பதாகவும் சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தெரிவித்துவிட்டார்.
  • முழுப் புரட்சி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் கிளர்ச்சிகள் தொடர்பாக வேறு எந்த மாநிலத்துக்கும் செல்லப் போவதில்லை என்று ஜபல்பூரில் மாணவர்கள், இளைஞர்கள் மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட அவர், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தாம் சுற்றுப்பயணம் செய்துள்ளதாகவும் பொதுவாக  நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜபல்பூரில் இரவு பொதுக்கூட்டத்தில் பேசினார் ஜெயப்பிரகாஷ் நாராயண்:

  • "பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலகுவது நாட்டின் நலனுக்கும் ஜனநாயக நலனுக்கும் அவர் சொந்த நலனுக்கும் ஏற்றது. அவர் பதவியில் நீடிப்பது ஜனநாயக ஒழுங்கிற்கு எதிரானது. ராஜிநாமா செய்துவிட்டு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே இந்திரா காந்திக்கு சிறந்த வழியாக இருக்கும்.
  • "உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்தால் அவர் மீண்டும் பிரதமராகிவிடுவார். இந்திராவுக்குப் பதிலாக எளிதில் வேறு ஒருவர் பதவி வகிக்க முடியுமாதலால் அவரின்றி நாடு நன்கு செயல்பட முடியும்" என்றார் ஜெ.பி.

பொய்யான செய்திகள், தவறான வதந்திகள்!

  • இன்னொரு பக்கம் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலே பேசத் தொடங்கினார்.
  • இந்தியா அதைத் தாக்கக் கூடும் என்ற பொய்ப் பிரசாரத்தில் அருகிலுள்ள ஒரு நாடு சற்றும் அவசியமில்லாமல் ஈடுபட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிய இந்திரா காந்தி, அது எந்த நாடு என்று குறிப்பிடவில்லை.
  • தொடர்ந்து அவருடைய இல்லத்தின் முன் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார் இந்திரா காந்தி.
  • "இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிகளைக் கண்டு இந்த நாடு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவில் தர்மசங்கடமான ஒரு நிலைமை இருப்பதால் அது தன் மீது தாக்குதல் தொடுக்கக் கூடும் என்று அந்த நாடு பிரசாரம் செய்கிறது. இது வெட்டிப் பேச்சு. இந்தியா யாரையும் தாக்கப் போவதில்லை.
  • "தமது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பெருமளவில் பொய்யான செய்திகளும் இதர தவறான வதந்திகளும் பரப்பப்படுகின்றன. கட்சிக்கோ, தமக்கோ கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் எதிலும் தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம்.
  • "மேல் முறையீடு செய்யப்படும் நாளில் காங்கிரஸ் கொடியுடன் சில நபர்கள் சென்று காங்கிரஸுக்கு ஆதரவாகவும் தமக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பலாம் எனத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது. காங்கிரஸ்காரர்கள் சகிப்புத் தன்மையுடனும் அடக்கத்துடனும் இருக்க வேண்டும்" என்றார் அவர்.

மனதின் குரல்!

  • சட்ட, அரசியல், தார்மிக அம்சங்களில் எப்படிப் பார்த்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை பிரதமராகத் தொடர்ந்து இந்திரா காந்தி இருப்பதுதான் நியாயம் என்று அறிக்கையொன்றில் காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவா குறிப்பிட்டார்.
  • "சட்ட அம்சங்களைக் கவனித்தால் விஷயம் தெளிவானது. அவர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு அரசியல் சாசனப்படி எவ்விதத் தடையுமில்லை. அரசியல் அம்சத்தை எடுத்துக்கொண்டால், பதவியில் உள்ள கட்சியும் மக்களில் பெரும் பகுதியினரும் அவர் பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற தங்களுடைய உறுதியான விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
  • "தார்மிக அம்சத்தை எடுத்துக்கொண்டால் அவர் பிரதமராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு உள்ள தார்மிக உரிமையைக் குறைக்கக்கூடிய அம்சம் எதுவுமில்லை. முற்றிலும் சட்ட நுணுக்கப் பிரச்சினைகளை வைத்தே தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது, இவற்றை உயர் நீதிமன்றம் சரியாகக் கவனிக்கவில்லை என்று பிரதமரின் சட்ட ஆலோசகர்கள் கூறுகிறார்கள்."
  • பிரதமர் என்ன நினைக்கிறார் என்பதைத்தான் டி.கே. பரூவாவின் இந்த அறிக்கை காட்டுவதாக அப்போது அரசியல் பார்வையாளர்களால் கருதப்பட்டது.

உடனே விலக வேண்டும்

  • ஆனால், இந்திரா காந்தி உடனடியாகப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அறிக்கையொன்றில் ராஜ்நாராயண் வலியுறுத்தினார்.
  • "எல்லா ஊழல்களுக்கும் பிறப்பிடம் இந்திரா காந்தி என்றும் பிற்போக்கின் வடிவம் என்றும் சோசலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியோ முன்னர் தெரிவித்திருந்த கருத்தை அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
  • "நாடாளுமன்ற புது காங்கிரஸ் கட்சிக்கு புதியதொரு தலைவரைத் தேர்ந்தெடுக்க அவகாசம் அளிப்பதற்காகத்தான் தடை உத்தரவு தரப்பட்டது என்றும் இந்திரா காந்தி பிரதமராக நீடிக்க அதைப் பயன்படுத்துவது நீதித்துறை செயல்பாட்டிலேயே  மோசடி செய்வதாகும்" என்றார் ராஜ்நாராயண்.

தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு எந்திரம்

  • பதவியில் நீடிக்க ஆதரவு தெரிவிக்கும்பொருட்டு மக்களைத் தம் வீட்டுக்கு அழைத்துவர அரசு எந்திரத்தைத் தவறாகப் பிரதமர் இந்திரா காந்தி பயன்படுத்துவதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.
  • போலியான ஆதரவை மிகைப்படுத்திக் காட்டுவதற்காகத் தில்லியும் புறநகர்ப் பகுதிகளும் காலிகளிடமும் பாதுகாப்புப் படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் கட்சி குறிப்பிட்டது.
  • இதனிடையே, புது தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதற்காக ஹரியாணாவிலிருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

தொடரும் போராட்டம்

  • குடியரசுத் தலைவர் மாளிகை முன் மூன்றாவது நாளாக கம்யூனிஸ்ட் அல்லாத எதிர்க்கட்சிகள் 12 மணி நேர தர்னா நடத்தினர். குடியரசுத் தலைவர் பக்ருதீன் அகமது உடனடியாகத் தில்லி திரும்பி, நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கருணாநிதி என்ன சொன்னார்?

  • என்ன சொல்கிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்று தெளிவுகொள்ள முடியாத விதத்திலேயே இருந்தது திமுக தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதியின் நிலைப்பாடு.
  • சென்னையில் மேற்கு மாம்பலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மு. கருணாநிதி பேச்சு:
  • இந்த நெருக்கடியான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும்; சாய்த்துவிட வேண்டும் என்ற கெடுநினைப்பு மற்ற எதிர்க்கட்சிகளிடம் இருப்பதைப் போல திமுகவிடம் இல்லை.
  • இந்தியா உலகு மதிக்கத்தக்க ஜனநாயக நாடு. பல்வேறு மாநிலங்களிலும் மத்தியிலும் ஆளுங்கட்சியாகவுள்ள புது காங்கிரஸ் பெரிய கட்சி. ஆகவே, ஜனநாயக பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும். இப்போது எடுக்கப்படும் முடிவுதான் எதிர்கால இந்திய அரசியலுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
  • இந்திரா காந்தி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோமா, இல்லையா என்பது வேறு விவகாரம்; ஆனால், தீர்ப்பை ஏற்று அவராகவே ராஜிநாமா செய்திருந்தால் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
  • தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் தர்னா, பந்த் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், திமுகவைப் பொருத்தவரை எந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டாலும் அறவழியில் இருக்க வேண்டும், அவற்றின் விளைவுகள் நல்லனவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள்.
  • பிரதமர் இன்று பெரிய நெருக்கடியில் இருக்கிறார். திமுகவைப் பொருத்தவரை யாருக்காவது நெருக்கடி வரும் நேரத்தில் அனுதாபப்படுமே அல்லாமல், இதுதான் நேரம் என்று அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற கெடுநினைப்பு,  இந்தியாவிலும் தமிழ்நாட்டிலுள்ள வேறு பல கட்சிகளிடமும்  இருப்பது போல, திமுகவிற்கு என்றைக்கும் இருந்ததில்லை. ஆகவே, அனுதாபத்துடன் பிரதமரை நோக்குகிறோம்.
  • சரியோ, தவறோ நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்ற மரபு இருக்கிறது. அந்த மரபை இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளும் காப்பாற்றும்போது, இந்தியாவை எல்லாம் ஆளும் கட்சி, மற்ற கட்சிகளுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய கட்சி, இன்றைய தினம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வது வருந்தத்தக்க சம்பவம். இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் இந்திரா காந்திக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் கோபம் இல்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும்தான் சர்ச்சை; தகராறு; அதுவும் மோதிக் கொள்கிற தகராறு அல்ல" என்றார் கருணாநிதி.

ராஜிநாமாவே சிறந்த மரபு

  • பிரதமர் இந்திரா காந்தி ராஜிநாமா செய்வது ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் சிறந்த மரபுகளுக்கு இசைவான நடவடிக்கையாகவும் மிகவும் பயனுள்ள முன்னுதாரணமாகவும் இருக்கும். ராஜிநாமா செய்வதைத் தாமதப்படுத்துவது அதன் சிறப்பைச் சிதைத்துவிடும் என்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஜகதீஷ் ஸ்வரூப் குறிப்பிட்டார்.

சிறந்த தலைவர் அவரே

  • தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டபோதிலும் இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியே நீடிக்க வேண்டும் என்று லண்டன் சன்டே டெலகிராப் தலையங்கம் எழுதியது. இந்திரா காந்தியிடம் தவறுகள் இருந்தபோதும் இந்தியாவின் 55 கோடி மக்களுக்குள்ள சிறந்த தலைவர் அவரே என்றும் தலையங்கம் சுட்டிக்காட்டியது.

நன்றி: தினமணி (15 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories