TNPSC Thervupettagam

ஜூன் 19, 1975 - குழப்பவில்லை, தெளிவாக இருக்கிறார்கள்

June 19 , 2023 576 days 355 0
  • காங்கிரஸ் கட்சியினர் குழப்புகிறார்கள் என்றும் சொல்லலாம், அல்ல, மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
  • பிரதமர் பதவியேற்க மற்றொரு தலைவரை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கால அவகாசம் என்று இடைக்காலத் தடை பெற்றிருந்தாலும் தலைவரா, புதிதாகவா, இந்திரா காந்திதான் எங்கள் ஒரே தலைவர் என்று நேற்றைய கூட்டத்தில் கட்சி தெளிவுபடுத்திவிட்டது.
  • இதைப் புரிந்துகொண்டே நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார் ராஜ்நாராயண்.

ராஜ்நாராயண் மனு

  • இந்த நிலையில்தான், இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமலை 20 நாள்கள் நிறுத்திவைத்து நீதிபதி சின்ஹ பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று விடுமுறைக் கால நீதிபதி சக்சேனா முன், வழக்கில் வெற்றி பெற்ற ராஜ்நாராயண் மனுத் தாக்கல் செய்தார்.
  • நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராகப் பொறுப்பேற்கும் வரை அரசு அலுவல்கள் முடங்கி, பல சிக்கல்கள் நேரிடும் என்று தெரிவித்துதான் இந்திரா காந்தியின் தரப்பில் தடை உத்தரவு பெறப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தபோதிலும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றும் ராஜ்நாராயண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • இடைக்காலத் தடை உத்தரவின் பெயரால், இந்திரா காந்தி இன்னமும் காங்கிரஸ் தலைவராக, பிரதமராக நீடிக்கவே விரும்புகிறார் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். மனுவை நீதிபதி சின்ஹ விசாரிக்குமாறு நீதிபதி சாக்சேனா உத்தரவிட்டார்.

தொடர்ந்து மக்கள் சேவை!

  • தனது உயிருக்கு ஆபத்து என்று அடிக்கடி மிரட்டல்கள் வந்தபோதிலும் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்யத் தான் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.
  • வழக்கம்போல தனது இல்லத்தின் முன் திரண்டிருந்த ஆதரவாளர்களிடையே  இந்திரா காந்தி பேசினார்.
  • முனைப்பான திட்டங்கள் மூலம் மக்களின் மேம்பாட்டிற்குத் தமது கட்சி பாடுபடுகையில் என்னை ஒழித்துக்கட்ட முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அதையெல்லாம் நான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மக்களின் ஆதரவுதான் என்னுடைய பலம், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதிலும் மக்களுக்கு சேவை செய்யும் பாரம்பரியம் காங்கிரஸுக்கு உண்டு.
  • வடமேற்கு எல்லை மாகாணத்தில் நேருவுடன் சுதந்திரப் போராட்ட தியாகி திவான் ரோஷன் லால் சென்றபோது கற்கள் வீசப்பட்டதைக் கண்டு இருவருமே அஞ்சவில்லை. நேற்று மருத்துவமனையில் லாலைக் கண்டபோது இதை நினைவுகூர்ந்தார்.
  • இந்தியா எந்த சவாலையும் எதிர்நோக்க போதிய வலிமை படைத்தது என்பதை உலகுக்குக் காட்டுவதே இந்த வீட்டின் முன் நடக்கும் கூட்டங்களின் நோக்கம். தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் இன்னும் அனேக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு சம அந்தஸ்து உறுதி செய்யப்பட வேண்டும்."
  • இந்திரா காந்தியின் தலைமையின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் தில்லியில் இந்தியா கேட் திடலில் வரும் 20 ஆம் தேதி, நாளை,  பேரணியொன்றை நடத்துவதென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
  • இந்தக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி சிறப்புரையாற்றுவார் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

என்ன, இந்திராதான் இந்தியாவா?

  • இந்திராதான் இந்தியா என்று நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் அநீதி. இதுவொரு தர்பார் பாணி பேச்சு; ஜனநாயகவாதியின் பேச்சு அல்ல என்று ஜனதா முன்னணி கண்டனம் தெரிவித்தது.
  • குஜராத்தில் ஜனதா முன்னணி என்ற பெயரில் வென்று ஆட்சி அமைத்தபோதிலும், அகில இந்திய அளவில் அனேகமாக முதல்முறையாக ஜனதா முன்னணி என்ற பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
  • "இந்திரா காந்தி தலைமையில் நம்பிக்கையை உறுதிசெய்து நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானம், அவர் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என்பதில் அக்கறையையும் பலத்தையும் நீதிமன்றத்துக்கு எடுத்துக்காட்டுவதாகவே இருக்கிறது.
  • "நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து இந்திரா காந்திக்கு நிரந்தரமாகப் பிரதமர் பதவியை அளிக்க உறுதி கொடுக்க முடியும் என்பது விந்தையே.
  • "இந்திரா காந்தியைப் பாராட்டி மத்திய அமைச்சர்கள் ஒய்.பி. சவாணும் ஜெகஜீவன் ராமும் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அரசிடம் ஊதியம் பெற்றுக்கொண்டே இந்திரா காந்தியின் வழக்கு தொடர்பான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலே."
  • புது காங்கிரஸ் செய்யத் தவறியது ஒன்றே ஒன்றுதான், திருமதி காந்திக்குப் பிந்தைய வாரிசு சஞ்சய் காந்தி என்று அறிவிக்காததுதான் என்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது பாரதிய லோகதள பொதுச்செயலர் பிலுமோடி குறிப்பிட்டார்.
  • அரசுப் பதவியில் இருப்பவர்கள் மீது ஒரு களங்கம் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற மரபை ஜனநாயகத்தில் கௌரவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • இதனிடையே, தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஜனதா முன்னணி கட்சிகளின் கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

வெட்கங்கெட்ட அரசியல் ஒழுக்கச் சிதைவு

  • கடுமையான சொற்களுடன் அறிக்கையொன்றை பாட்னாவிலிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் வெளியிட்டார்.
  • "இந்திரா காந்தி மீது நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது புது காங்கிரஸ் தலைவர்களின் வெட்கங்கெட்ட அரசியல் ஒழுக்கச் சிதைவுக்கு எடுத்துக்காட்டு. மக்களைத் திசை திருப்புவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் விஷமத்தனமான முயற்சிக்கு உதாரணம்.
  • "இந்திரா காந்தியின் தலைமையில் புது காங்கிரஸ் எம்.பி.க்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களா என்பது அல்ல இப்போதைய பிரச்சினை. நம் நாட்டில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இன்றி எல்லார் விஷயத்திலும் சட்டம் ஒரே மாதிரிதான் செயல்படுத்தப் படுகிறதா என்பதே பிரச்சினையாகும்.
  • "இந்திரா காந்தி வழக்கின் மேல் முறையீடு பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரையில் அவருக்குப் பதிலாகத் தலைவராகச் செயல்படுவதற்கு ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக்கு அவகாசம் அளிக்கவே 20 நாள்கள் தடையுத்தரவு பெறப்பட்டது என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற புது காங்கிரஸ் கட்சியோ, இந்திரா காந்தியின் தலைமை அவசியமானது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
  • "பிரதமர் இந்திராவின் தேர்தல் வழக்கு பற்றி மற்றொரு விதமான வாதத்தைக் கிளப்பிவிட்டு, மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள். இந்திரா காந்தியின் பிழை வெறும் "நுட்பமான" அடிப்படையிலானது என்பதே இந்த வாதம்.
  • "முதலாவதாக, இது சரியான வாதமல்ல. இந்திரா காந்தி பொய் சொன்னார் என்றும் தமக்கு நன்கு தெரிந்தே அரசு வசதிகளைத் தமது தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இரண்டாவதாக, நமது நாட்டுச் சட்டத்தின் பெரும் பகுதியே நுட்ப அடிப்படையில் அமைந்ததுதான். அதுவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் முழுவதும் பல நுட்பமான அம்சங்களைக் கொண்டது.
  • "இந்திரா காந்தியின் தலைமை புது காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு வேண்டுமானால் அத்தியாவசியமானதாக இருக்கலாம். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அதுவும் அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது, அவர் பதவி விலகியே தீர வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.
  • "இந்திரா காந்தியின் 9 ஆண்டுகால ஆட்சி, இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் பொது வாழ்க்கையையும் ஏற்கெனவே சீரழித்துவிட்டது. மிகவும் அரும்பாடுபட்டுப் போராடிப் பெற்ற சுயராஜ்யத்தின் மதிப்புகளைக் குலைத்துவிட்டது. அவர் இன்னமும் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால், இந்த நாட்டின் அரசியல் மேலும் சீரழிவதுடன் சாதாரண இந்தியன் அருமையானதென மதிக்கும் ஒவ்வொன்றும் மதிப்பிழந்துபோகும்.
  • "புது காங்கிரஸின் கட்டுக்குள் இயங்குகிற பிரசார சாதனங்கள் கோயாபல்ஸ் போல பொய்ப் பிரசாரம் செய்து மக்களைத் தொடர்ந்து திசை திருப்ப முயலும். இதனின்றும் மக்களைக் காப்பாற்ற திறன் மிக்க இயக்கம் தேவை" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண்.

ஒத்துழையாமை இயக்கம்

  • ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென சோசலிஸ்ட் கட்சி முடிவு செய்து அறிவித்தது.
  • புணேயில் நடைபெற்ற கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், புது காங்கிரஸுக்கு மாற்றாக மக்கள் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது என்றார்.
  • இந்த இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்குமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ஜார்ஜ், வரிகொடா இயக்கம், அமைச்சர்களை முற்றுகையிடல், அரசு அலுவலகங்களைக் கைப்பற்றுதல், அரசு நிர்வாகத்தை முடக்குதல் ஆகியவை இயக்கத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்றார்.

பிரதமராக எப்படி நீடிப்பார்?

  • குற்றம் புரிந்த ஒருவர் பிரதமர் பதவியில் நீடிக்கலாமா என்பதுதான் பிரச்சினை. அவருடைய கட்சியின் தலைவராக இந்திரா காந்தி நீடிப்பது பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை என்று ஜனசங்கப் பொதுச் செயலர் எஸ்.எஸ். பண்டாரி குறிப்பிட்டார்.
  • தேர்தலில் ஊழல் நடைமுறைகளில் குற்றம் புரிந்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழல் நடைமுறைகளைக் கையாண்டதாகத் தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே, மத்தியப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து டி.பி. மிஸ்ர, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சென்னா ரெட்டி ஆகியோர்  விலகியுள்ளனர் என்றார் அவர்.

சிறுபிள்ளைத்தனமானது!

  • இந்திரா காந்தியிடம் நம்பிக்கை தெரிவித்து புது காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ள விசுவாச தீர்மானம், சிறுபிள்ளைத்தனமான, பொருளற்ற, மலிவான முகஸ்துதி, பச்சையான அறியாமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இந்திரா காந்தி வீழ்ந்துவிட்டார். இந்தத் தீர்மானமோ மிச்சம் மீதியுள்ளவற்றையும் வீழ்த்திவிட்டது என்று பாரதிய லோகதளத் தலைவர் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
  • இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாதென்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தாலும்கூட பிரதமராக இந்திரா காந்தியே தொடருவது என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டதாகவே கருதப் படுகிறது.
  • இடைக்காலத் தடை விஷயத்தில் நீதிமன்றம் என்ன தெரிவித்தாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்ற நிலையை எடுத்துள்ளதுடன் இதுபற்றி இந்திரா காந்திக்கும் தெரிவிக்கப் பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

நன்றி: தினமணி (19 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories