TNPSC Thervupettagam

ஜூன் 23, 1975 - நாளை தெரியும்! நீதிமன்றத்தில் இரு தரப்பும் வாதம்

June 23 , 2023 569 days 399 0
  • பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாதென்ற அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமலை எவ்வித நிபந்தனையுமின்றி நிறுத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி தாக்கல் செய்திருந்த மனுவின் மீது மறு நாள் (ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை) பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அறிவித்தார்.
  • இதன் மீதான தீர்ப்பைப் பிற்பகல் 3.45 மணிக்குத் தன்னுடைய அறையில் வெளியிடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணய்யர், இந்த உத்தரவு ஜூன் 23 முதலே நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஏற்பாட்டை இந்திரா காந்தி, ராஜ்நாராயண் தரப்பு வழக்கறிஞர்களும் ஒப்புக்கொண்டனர்.
  • இன்று நீதிமன்றம் தொடங்கியதும் வழக்கின் விசாரணைக்கு பிரதமர் இந்திரா காந்தி தரப்பில் வழக்கறிஞர் பால்கிவாலாவும் ராஜ்நாராயண் தரப்பில் வழக்கறிஞர் சாந்திபூஷணும் ஆஜரானார்கள்.
  • காலை 11.30 மணிக்கு தொடங்கிய வாதங்கள், இடைவேளை எதுவுமின்றி ஏறத்தாழ 5.30 மணி நேரம், மாலை வரையிலும் நடைபெற்றது, விசாரணை தொடங்கும்போதே இரு தரப்பு வழக்கறிஞர்களும் இந்த ஏற்பாட்டுக்கும் இடைக்காலத் தடை உத்தரவொன்றுக்கு அவசியமில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.
  • நீதிமன்றத்துக்கு நீதிபதி கிருஷ்ணய்யர் வந்தவுடன், பிரதமரின் மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அமலை நிறுத்திவைப்பதற்கான மனு இரண்டையும் அவரிடம் பிரதமரின் வழக்கறிஞரான பால்கிவாலா அளித்தார்.
  • அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த அமல் நிறுத்த உத்தரவைத் தற்காலிகமாக நீடிக்க வேண்டும், அல்லது இதுதொடர்பான வாதங்கள் முடிந்த பின் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக்க் கருதப்பட வேண்டும் என்று இரு தரப்பு சம்மதத்தையும் பெற வேண்டும் என்று பால்கிவாலா கேட்டுக்கொண்டார்.
  • "இந்திரா காந்தி ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டார் என்று தீர்ப்பளித்ததன் மூலம் (உயர் நீதிமன்ற) நீதிபதி சட்டத்தைத் தாண்டிச் சென்றுவிட்டார். அவர் சட்டத்துக்கு விளக்கம் சொல்லும்போது, தன்னுடைய தீர்ப்பில் முற்றிலும் தவறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் பற்றிய 123 (7) விதி மிகவும் தெளிவாக இருக்கிறது.
  • "பிரசார மேடை அமைத்தது, மின்வசதி அளித்தது ஆகியவை ஊழல் நடத்தைகள் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த மேடை மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க அமைக்கப்பட்டது. 1969 நவம்பரில் மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. இது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. பாதுகாப்பு கருதி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மேடை அமைக்கப்பட வேண்டும் என்று இதில் கூறப்பட்டிருக்கிறது.
  • "ஒலிபெருக்கிகளுக்கு மின்சாரம் வழங்க மாநில அரசு அமைப்பைப் பயன்படுத்தியதும் இந்திரா காந்தி ஊழல் புரிந்தார் என்பதற்குக் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்த மின்வசதி ஒரு தனியார் நிறுவனத்தால் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான கட்டணத்தைக் கட்சி கொடுத்திருக்கிறது.
  • "தன்னுடைய தேர்தல் வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்காக யஷ்பால் கபூர் என்ற அரசிதழ் பதிவுற்ற அலுவலர் ஒருவரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது மூன்றாவது குற்றச்சாட்டு.
  • "ராணுவத்துக்குச் சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியது மற்றும் இதர புகார்களை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
  • அவர் (இந்திரா காந்தி) எந்தக் குற்றச்சாட்டுகளின் மீது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறதோ, அவற்றைப் பற்றி விளக்குவதற்கு, குறிப்பிட்ட அந்த ஷரத்தை விரிவாக அலசிப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
  • "இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்காக மாநில அரசு மேடை அமைத்தது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒன்றல்ல என்று உயர் நீதிமன்றம் கருதினால், அது மிகவும் பீதியளிக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடக் கூடும்.
  • "பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மேடை அமைக்க வேண்டியது அவசியமல்ல என்று இன்று ஒரு நீதிபதி கூறுகிறார். பாதுகாப்பு அலுவலர்களோ காவல் அதிகாரிகளோ தங்கள் பணிநேரச் சீருடைகளுடன் வருவது பாதுகாப்புக்கு அவசியமல்ல என்று நாளை இன்னொரு நீதிபதி கூறலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மறிப்புகள், தடுப்புகள் அவசியமில்லை என்று பின்னர் மற்றொரு நீதிபதி கூறலாம். இதற்கு முடிவே இராது.
  • "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊகங்களையும் அனுமானங்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது.
  • "ஒரு வேட்பாளரின் தேர்தல் செல்லாதென்று கூற வேண்டுமானால், அந்த வேட்பாளர் தானாகவோ, அல்லது தன்னுடைய முகவர் மூலமாகவோ ஓர் அரசு அலுவலரின் உதவியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். வேட்பாளர் அப்படி எதுவும் செய்யாமல் ஓர் அதிகாரி தானாக வந்து உதவி செய்திருந்தால், அப்போது அது பொருந்தாது.
  • "வேட்பாளரோ அல்லது அவருடைய முகவரோ அல்லது வேட்பாளரின் சம்மதத்துடன் வேறு யாராவதோ அத்தகைய உதவியைப் பெற்றிருந்தால்தான் குற்றம் என்பது அந்த விதியை அலசிப் பார்த்தாலே தெரியும். வேட்பாளரோ அல்லது அவருடைய முகவரோ இதுபற்றிய முயற்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். உதவியைப் பெற மனமறிந்து முயன்றிருக்க வேண்டும். அத்துடன், தன்னுடைய தேர்தல் வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்காக அப்படிச் செய்திருக்க வேண்டும். ஒருவர் உதவி பெற்றார் என்பது மட்டுமே போதாது. வேட்பாளரின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக அந்த உதவி அளிக்கப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும்".
  • இந்த இடத்தில் குறுக்கிட்ட ராஜ்நாராயணின் வழக்கறிஞர் சாந்திபூஷண், இத்தகைய தேர்தல் வழக்குகளில் நிபந்தனையுடன் கூடிய தடை மட்டுமே தருவதென்ற வழக்கத்தை இப்போது கைவிட நியாயமில்லை. சாதாரண உறுப்பினர் ஒருவருக்குத் தடை விதிக்கும் விஷயத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் காரணங்கள் உயர் பதவி வகிக்கும் ஒரு உறுப்பினர் விஷயத்தில் இன்னும் அதிகமாகப் பொருந்தும். இத்தகைய மனுக்களில் நிபந்தனையுடன் கூடிய தடை தரும் கடந்தகால வழக்கத்திலிருந்து நீதிமன்றம் பின்வாங்குவதற்கு எவ்விதக் காரணமுமில்லை என்றார்.

பிரதமராக நீடித்தால் நாட்டுக்கு தர்மசங்கடம்

  • நீதிமன்றத் தீர்ப்பையொட்டி இந்திரா காந்தி பதவி விலகுவதால் நாட்டுக்கோ அல்லது அவருக்கோ எவ்விதத் தீங்கும் நேரிட்டுவிடாது என்று ராஜ்நாராயணின்  வழக்கறிஞர் சாந்திபூஷண் குறிப்பிட்டார்.
  • உச்ச நீதிமன்றத்தில் பால்கிவாலாவின் வாதங்களுக்குப் பதிலளித்தார் பூஷண்.
  • "உயர் நீதிமன்றம் பாதகமான தீர்ப்பைக் கூறிய பிறகும் பிரதமராகப் பதவியில்  அவர் நீடிப்பது தர்மசங்கடமான, கவலை தரும் நிலைமையை ஏற்படுத்துவதுடன், முறையற்ற முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தும்.
  • "நீதிமன்றம் ஒரே சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிரதமர் பதவியிலிருக்கும் ஒரு நபருக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது. நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பதால் இந்திரா காந்தி பதவி விலகும் கட்டாயம் நேரிடுமானால், பயங்கர விளைவுகள் ஏற்படும், அபாயகரமான அரசியல் நிலைமை ஏற்படும், அதன் விளைவாக உள்நாட்டில் சங்கடங்களும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அபாயங்களும் ஏற்படலாம் என்ற பால்கிவாலாவின் வாதங்கள் ஏற்கத்தக்கவையல்ல.
  • "கடந்த கால அனுபவங்களைக் கொண்டு பார்க்கும்போது இந்த வாதம் ஏற்க முடியாதது. புதிய பிரதமர்கள் எவ்வித சிக்கலுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • "நாடாளுமன்றக் கட்சிக்குப் புது தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் பிரதமரை நியமிக்கவும் அரசியல் சட்டம் தகுந்த ஏற்பாட்டை அளித்திருக்கிறது. நாடாளுமன்ற ஆட்சிமுறையில் தமக்குப் பதில் புது தலைவரைத் தேர்ந்தெடுத்தால் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை இராது என்றும் சர்வதேச அரங்கில் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் மேல் முறையீட்டாளர் முழுமையான தடைக்குக் காரணம் காட்ட முடியாது.
  • "ஊழல் குற்றங்களின் பேரில் தேர்தல் செல்லாது என்று தீர்ப்புக் கூறப்பட்ட பின் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் பிரதமர், காமன்வெல்த் கூட்டம் போன்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டால் அது நாட்டு மக்களுக்கு வேதனையையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும், வேறு நாட்டின் பிரதமர் எவரேனும் இத்தகைய ஒருவர் கலந்துகொள்வதை ஆட்சேபிக்கலாம்.
  • "ஆகவே,  மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் டி.பி. மிஸ்ர, முன்னாள் மத்திய அமைச்சர் சென்னா ரெட்டி உள்பட அனேக முன்னாள் அமைச்சர்கள், முதல்வர்களைப் போல இந்திரா காந்தியும் பதவியிலிருந்து விலகுவதே விரும்பத் தக்கதாகும்.
  • "உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் இந்திரா காந்தி பதவியிலிருந்து விலகியிருந்தால் அவருடைய கௌரவம் உயர்ந்திருக்கும். அவருடைய செயல் சீரிய நடைமுறையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்தியிருக்கும்.
  • (அப்போது நீதிபதி கிருஷ்ணய்யர் குறுக்கிட்டு, சீரிய அரசியல் நடைமுறை என்று குறிப்பிட, சாந்திபூஷணோ சீரிய அரசியல் நடைமுறையல்ல, சீரிய தார்மிக நடைமுறை என்று பதிளித்தார். தொடர்ந்து, தார்மிக, அரசியல் நடைமுறைகளுக்கும் சட்ட ரீதியான நடைமுறைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கிருஷ்ணய்யர் தெரிவித்தார்).
  • "நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக இருந்தபோதிலும் தாம் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற மேல் முறையீட்டாளரின் கோட்பாடு ஏற்கப்பட்டால் ஜனநாயக ஆட்சிமுறைக்கு அபாயகரமானதாகும்.
  • "அலாகாபாத் நீதிமன்றத்தில் முறையிட்டவாறு, ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தமக்குப் பதிலாகப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு கட்சியைப் பிரதமர் அறிவுறுத்தியிருக்க வேண்டும்.
  • "அரசிதழ் பதிவுபெற்ற அரசு அலுவலர்களின் ராஜிநாமாவை வாய்மொழியாக ஏற்கும் கொள்கை அரசியல் சட்ட விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணானது.
  • "எனவே, மேல் முறையீட்டாளருக்கு இனியும் தடை வழங்கக் கூடாது"
  • இதற்குப் பதிலளிக்கும் வகையில் குறுக்கிட்ட இந்திரா காந்தியின் வழக்கறிஞர் பால்கிவாலா, முழுமையான தடை வழங்கப்பட்டால் நாட்டுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும் என்ற சாந்திபூஷணின் கருத்தை நிராகரித்தார்.
  • "இது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கலாம். தேசிய நலன்தான் முக்கியம். இங்கே சொந்த விருப்பு வெறுப்புகள் இடம் பெறக் கூடாது. பிரச்சினை முழுவதையும் ஆக்கரீதியில் பார்க்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையிலேயே வாதங்கள் இருக்க வேண்டும்.
  • "தற்போது அசாதாரணமான நிலைமை தோன்றியுள்ளது. இந்திரா காந்தியே தலைவர் என்றும் தற்போதைய தலைவரே கட்சித் தலைவராகவும் நீடிப்பார் என்றும் கட்சியே கூறுகிறது" என்றும் பால்கிவாலா குறிப்பிட்டார்.
  • முழுத் தடை, நிபந்தனைகளுடன் கூடிய தடை என்பன பற்றி இரு வழக்கறிஞர்களும் விரிவாக வாதிட்டனர்.
  • இரு தரப்பு  வாதங்களையும் கேட்டு முடித்த பின், இது எளிதில் தீர்மானிக்கக் கூடிய விஷயமல்ல. எப்படியிருந்தாலும் சரி, உங்கள் இருவரில் யாருடைய ஆலோசனையையும் நான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்த நீதிபதி கிருஷ்ணய்யர், மறுநாள் பிற்பகல் 3.45 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் இந்த உத்தரவு முந்தைய நாளிலிருந்தே அமலுக்கு வந்துவிடுவதாகக் கருதப்படும் என்றும் அறிவித்தார்.

மேல் முறையீடு, ஆவணங்கள்

  • இன்றைய வாதங்கள் முடிந்த பின், மேல் முறையீடு, வழக்கு ஆவணங்கள் தொடர்பாக நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் பிறப்பித்த உத்தரவு:
  • விடுமுறைக்குப் பின் ஜூலை 14 ஆம் தேதி நீதிமன்றம் திறக்கும்போது, தலைமை நீதிபதியின் முன், மேல் முறையீட்டாளர் (இந்திரா காந்தி) இந்த மேல் முறையீட்டை முன்வைத்து, விசாரணைக்கு விரைவில் தேதி நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்ள உரிமையுண்டு.
  • ராஜ்நாராயணின் தேவைகளுக்கேற்ப ஆவணங்களை அச்சிட்டுத் தருவதாக மேல் முறையீட்டாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றை ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். அதற்கேற்ப அச்சிடும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
  • உச்ச நீதிமன்றப் பதிவாளரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, வழக்கின் அசல் ஆவணங்களைச் சிறப்புத் தூதர் மூலம் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அனுப்பிவைக்க வேண்டும். சிறப்புத் தூதருக்கான செலவை மேல் முறையீட்டாளர் ஏற்பார்.
  • உயர் நீதிமன்றத்தின் ஆவணங்கள் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள மேல் முறையீட்டாளர் இணங்குவதால், ஆவணங்களின் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அவசியமில்லை.
  • ஹிந்தியிலுள்ள ஆவணங்களை இந்த நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மேல் முறையீட்டாளர் மொழிபெயர்க்கச் செய்வார்.
  • வ்விஷயங்களில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால் நீதிபதியிடம் எதிர் மனுதாரர் எடுத்துக்கூற உரிமையுண்டு.
  • இவ்விஷயம் அவசரமானது என்பதால், மொழிபெயர்ப்புகள் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கும் வேலையைச் செய்துமுடிக்குமாறு பதிவாளர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இடைவேளையின்றித் தொடர்ந்தது ஏன்?

  • இந்த வழக்கின் விசாரணை மதிய உணவு இடைவேளையின்றித் தொடர்ந்தது. காரணம்தான் சற்று வித்தியாசமானது.
  • நீதிமன்ற அறைக்கு வெளியே திரளான கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் சிரமம் ஏற்பட்டது. வழக்கம்போல உணவு இடைவேளைக்காகக் கூட்டம் கலைவதாயிருந்தால் அறைக்கு வெளியேயுள்ள மக்கள் கூட்டம் வாதங்களைக் கேட்கும் ஆவலில் உள்ளே நுழைந்துவிடக் கூடும். தவிர, இடைவேளைக்கு நீதிமன்ற அறையைவிட்டு வெளியே சென்றவர்களால் மீண்டும் நீதிமன்றத்துக்குள் திரும்பிவர இயலாமலும் நேரிடலாம்.
  • இதை நீதிபதி கிருஷ்ணய்யரே சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து, இடைவேளையின்றி வாதங்களைத் தொடர்ந்து முடிப்பதென இரு வழக்கறிஞர்களுமே ஒப்புக்கொண்டு தொடர்ந்தனர்.
  • முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே கூட்டம் திரண்டிருந்ததால், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் போன்றோர் நீதிமன்ற அறைக்குள் செல்வதற்காகப் பாதுகாப்பு அலுவலர்களுடனும் காவல் துறையினருடனும் பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் எஸ்.என். மிஸ்ர, ஜோதிர்மயி பாசு, மது லிமயே, பிலுமோடி, ராஜ்நாராயண் போன்ற தலைவர்கள் உள்பட பலரும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் (அப்போது அவர் விமானி. அரசியல் களத்திலும் இல்லை. காலம்தான் எப்படியெல்லாம் மாறிவிட்டது, இந்திரா காந்தி கொல்லப்பட்டு, ராஜீவ் காந்தியே பிரதமராகி, பின்னர் அவரும்  கொல்லப்பட்டுவிட்டார்).
  • உச்ச நீதிமன்றத்தில் அண்மைக்காலத்தில் இப்படியொரு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டதில்லை என்று அப்போது பெரும் பேச்சாக இருந்தது. காவல் குதிரைப் படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தீர்ப்பு வந்த பிறகு... எதிர்க்கட்சிகள் முடிவு

  • உச்ச நீதிமன்றம் மறுநாள் உத்தரவு பிறப்பிக்கும் என்ற நிலையில், சத்தியாக்கிரக போராட்டம் தொடங்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒத்திவைத்தன. உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்பதைப் பார்த்துக்கொண்டு முடிவு செய்யலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர்.
  • இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் நீங்கலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் கலந்துகொண்டார். இந்திரா காந்தியை விலக வலியுறுத்துவதற்கான சத்தியாக்கிரக போராட்டம் பற்றி மூன்று மணி நேரத்துக்கும் மேல் விவாதிக்கப்பட்டது.
  • கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுடன் பேசிய பழைய காங்கிரஸ் தலைவர் மனுபாய் பட்டேல், சத்தியாக்கிரகத் திட்டம் பற்றிய முடிவு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
  • இந்தக் கூட்டத்தில் ஜனதா இயக்கம் அல்லது சமஷ்டி கட்சி அமைப்பது பற்றியும் யோசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொதுக் கருத்து மட்டுமே உருவாகியிருப்பதாகவும் விரிவான திட்டங்கள் பின்னரே தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்குத் திட்டம்

  • எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் கூடிப் பேசுவது எனத் திட்டமிட்டுள்ளனர்.
  • இதற்குள்ளாக ஒற்றுமைத் திட்டம் தயாராகிவிடலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், எல்லா கட்சிகளும் ஒரே கட்சியாக ஒன்றிவிடலாம் என்று சரண் சிங் குறிப்பிட்டுள்ளார். பழைய காங்கிரஸ், ஜனசங்கம், சோசலிஸ்ட்களில் ஒரு பகுதியினர் எல்லாம் குஜராத் பாணி ஜனதா முன்னணியை ஆதரித்தனர். இதன் மூலம் கட்சிகள் ஒத்துழைப்பதுடன், தங்கள் தனித்தன்மையையும் காத்துக்கொள்ள முடியும் என்றும் கருதினர்.

சோசலிசம் எப்படி சாத்தியம்?

  • இந்திரா காந்தியால் எப்படி சோசலிசத்தைக் கொண்டுவர முடியும் என வினா எழுப்பினார் சரண்சிங்.
  • இந்திரா காந்திக்குப் பெரிய தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தப் பெரிய தொழிலதிபர்களின் நிதி உதவியைக் கொண்டு தேர்தல்களிலும் பேரணிகளிலும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டு வருகிறது ஆளுங்கட்சி. இதை வைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைவர் பரூவாவும் இந்திரா காந்தியும் எப்படி சோசலிசத்தை நிலைநாட்ட முடியும்? இப்போது நிலைமை தெளிவுபட்டுவிடும் என்றார் அவர்.

இந்திரா ஒழிக என்பது புதிதல்ல

  • இல்லத்தின் முன் நடந்த கூட்டங்களில் இந்திரா காந்தி பேசினார்:
  • "வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஜனநாயக சோசலிச திட்டத்தைக் குலைக்க எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சிக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணி தேவை.
  • "இந்திரா ஒழிக என்ற கோஷம் புதியது அல்ல. ஐந்தாண்டுகளாக இந்த கோஷம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுப்பப்பட்டு வந்துள்ளது.
  • "1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுண்ட பிறகு சில கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். இவை மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஓரளவு குறைக்க உதவின.
  • "இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பதா, அல்லது வேண்டாமா என்பது பிரச்சினை அல்ல. நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான பின்தங்கியவர்களின் நிலைமையை உயர்த்துவதற்கான எனது திட்டங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட அனுமதிக்கலாமா என்பதுதான் பிரச்சினை. இதுவரை சுதந்திரத்தின் பலனை அனுபவிக்காத மக்களுக்கு உகந்த கொள்கைகளைப் பின்பற்ற நான் முடிவு செய்ததால் இவர்கள் என்னை எதிர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உதவ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஏழைகள், தாழ்த்தப் பட்டவர்கள் அனைவரும் சம உரிமையும் முன்னேற்றத்துக்கான வாய்ப்பும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார் இந்திரா காந்தி.

நன்றி: தினமணி (23  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories