TNPSC Thervupettagam

ஜோசப் லிஸ்டர்

February 26 , 2025 6 hrs 0 min 13 0

ஜோசப் லிஸ்டர்

  • அறுவை சிகிச்சை செய்த பகுதியில் ’செப்டிக் பாய்சனிங்’ என்கிற விஷம் ஏற்பட்டு உடல் முழுவதும் பரவும். அதில் பாதிப் பேர் உயிர் இழப்பர், மீதிப் பேர் உயிர் பிழைப்பர். உயிர் வாய்ப்பைக் கருதி மருத்துவ உலகம் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து செய்தது.
  • ஒரு மருத்துவர் மட்டும் அத்தனை நோயாளிகளும் உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் செய்த விடாமுயற்சியால் வெற்றி பெற்றார். ’நவீன அறுவை சிகிச்சையின் தந்தை’ என்று கொண்டாடப்படுபவர் நோய் நுண்மத் தடை (ஆண்டிசெப்டிக்) மருத்துவத்தின் முன்னோடியான ஜோசப் லிஸ்டர்.
  • லிஸ்டர் 1827, ஏப்ரல் 5இல் இங்கிலாந்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பின்போதே அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நோயால் துயரமடையும் மக்களைக் கண்டு, ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தார். குறிப்பாக அறுவை சிகிச்சையில் ஆர்வம் காட்டினார். மருத்துவர் பட்டம் பெற்றார். தான் விரும்பிய அறுவை சிகிச்சைத் துறையில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். 1853இல் அறுவை சிகிச்சை நிபுணரும், தன் ஆசிரியருமான ஜேம்ஸ் சிம்மியிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
  • 1861இல் அவர் கிளாஸ்கோ மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரானார். அங்குதான் நோயாளிகளின் இறப்பைக் கவனித்தார். தான் அறுவை சிகிச்சை செய்த ஒருவர் இறந்தால் அது தன்னுயை தோல்வி என வருந்தினார்.
  • அப்போதுதான் லூயி பாஸ்டரின் கட்டுரையைப் படித்தார். பொருள்களைப் புளிக்கச் செய்யும் உயிருள்ள கிருமிகள் காற்றில் இருக்கின்றன. அந்தக் கிருமிகளால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்பதை அறிந்தார். அதற்கான விஷ முறிவு மருந்தைக் கண்டறிய முயற்சி செய்தார்.
  • கார்போலிக் அமிலம் கலந்த ஒரு திரவத்தை நோயாளியின் மீது பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் அந்த நோயாளி இறந்தார். மனம் தளர்ந்த லிஸ்டரை, அவர் மனைவி ஆக்னஸ் சிம் ஊக்கப்படுத்தினார். அது தண்ணீர் பட்டுக் கரைந்திருக்கும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் என்றார்.
  • 1877இல் கிங்ஸ் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரானார். அங்கு முழங்கால் முறிந்த 11 வயது சிறுவனுக்குக் கம்பி மூலம் இணைக்கும் அறுவை சிகிச்சையைச் செய்தார். தந்தை இல்லை, தாயையும் தனக்குப் பிறகு பிறந்தவர்களையும் தான்தான் காப்பாற்ற வேண்டும், அதனால் உயிர்பிழைக்க வைக்கும்படி அந்தச் சிறுவன் வேண்டினான்.
  • கார்போலிக் அமிலத்தில் நனைத்த துணியைக் கொண்டு அறுவை காயத்திற்குக் கட்டுப்போட்டார். நான்காவது நாள் கட்டைப் பிரித்துப் பார்த்தபோது சீழ் பிடிக்காமல் காயம் ஆறி இருந்தது. ரணங்கள் அழுகி விஷமாவதைத் தடுக்க முடியும் என்கிற லிஸ்டரின் கண்டறிதலை மருத்துவ உலகம் பெரிதாகக் கொண்டாடவில்லை.
  • பாராட்டை எதிர்பார்க்காத லிஸ்டர், மருத்துவமனையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். சிகிச்சையின்போது கிருமிகள் நுழையக் கூடாது என்பதே அவருடைய கொள்கை. வார்டிலும் அறுவை சிகிச்சை அறையிலும் கார்போலிக் அமிலத்தைப் பயன்படுத்தி காற்றைத் தூய்மை செய்தார். மருத்துவக் கருவிகளைக் கிருமி நீக்கம் செய்தார்.
  • எந்த மருத்துவரும் லிஸ்டரின் கொள்கைகளை ஏற்கவில்லை. மாணவர்களும் லிஸ்டரைக் கிருமி வருகிறது என்று கேலி பேசினர். மருத்துவப் பத்திரிகைகள் லிஸ்டரைப் பொய்யர் என்றன. ஆனால் லிஸ்டரின் கட்டுப்பாட்டில் இருந்த வார்டில் இறப்பு விகிதத்தைக் கணிசமாகக் குறைத்துக் காட்டினார். உயிர்பிழைத்தவர்கள் மனதார வாழ்த்தினர்.
  • லிஸ்டரின் முறைகளைக் கேலி செய்தவர்களில் ஒருவரான ஜான் உட் என்கிற மருத்துவருக்குச் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்தார் லிஸ்டர். அடுத்த 5 ஆண்டுகள் ஜான் உட்டும் லிஸ்டரும் இணைந்து ஆராய்ச்சி செய்தனர். மருத்துவ முறையில் மேலும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தனர்.
  • இங்கிலாந்தின் பெருமைக்குரிய சில பட்டங்களைப் பெற்றார் லிஸ்டர். அவருடைய கட்டுரைகளை இரண்டு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டனர். உலக நோயாளிகளுக்கு மரண பயத்தைப் போக்கிய லிஸ்டர், தன் 85 வயதில் 1912, பிப்ரவரி 10 அன்று மறைந்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories