- ஞெகிழி ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஐநா சுற்றுச்சூழல் அவை (UNEA) 2022இல் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, ஞெகிழி மாசுபாடு குறித்த பன்னாட்டுப் பேச்சுவார்த்தைக் குழு (INCPP) உருவாக்கப்பட்டது.
- ஞெகிழி ஒழிப்பு சார்ந்து 2022 மார்ச் மாதம் தொடங்கி, பல சுற்றுகளாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், 2024இன் இறுதியில் தென் கொரியாவில் நடைபெறும் இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில், சர்வதேச உடன்படிக்கையில் 192 உறுப்பு நாடுகள் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு நாளும் 2,000 குப்பை லாரிகள் அளவுக்கு ஞெகிழிக் கழிவுகள் பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் என உலகின் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 1.9-2.3 கோடி டன் அளவுக்கு ஞெகிழிக் குப்பை நீர்நிலைகளில் கொட்டப்படுவதால், சூழலியல் சீர்கேடு தீவிரமடைந்துகொண்டே செல்கிறது.
- ஞெகிழி மாசுபாடு என்பது வாழிடத்தின் தன்மையைத் திரித்து இயற்கையின் போக்கை மாற்றிவிடக் கூடியது; அது காலநிலை மாற்றத்துக்குத் தகவமைத்துக்கொள்ளும் சூழலியல் மண்டலங்களின் தன்மையை அழிக்கிறது; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தி முறை, சமூக நலம் எனப் பல்வேறு நிலைகளில் அது நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
- ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டம், ஞெகிழி மாசுபாட்டினை ஒரு தனிப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. ஞெகிழியால் ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார, உடல்நலப் பாதிப்புகள் காலநிலை மாற்றம், சூழலியல் தொகுப்பு சார்ந்த சீர்கேடு, குறைந்துவரும் இயற்கை வளம் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய பிரச்சினையாக அது அடையாளப்படுத்துகிறது.
- உலகின் முன்னணி ஞெகிழி மாசுபாட்டாளர்களில் ஒன்றாக இந்தியா உள்ளது; நாளொன்றில் சுமார் 26,000 டன் அளவுக்கு ஞெகிழிக் கழிவு இந்தியாவில் உருவாகிறது. ஞெகிழியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, ஞெகிழிக் கழிவு மேம்பாட்டு (திருத்த) விதிகள் (2021)இன் அடிப்படையில், 19 வகையான ‘ஒற்றைப் பயன்பாட்டு’ ஞெகிழிகளை 2022இல் இந்திய அரசு தடைசெய்தது.
- உலக மக்கள், ஆண்டொன்றில் சராசரியாக 50,000 கோடி ஞெகிழிப் பைகளை உபயோகிக்கின்றனர். இதில் வெறும் 14% மட்டுமே மறுபயன்பாட்டுக்காகச் சேகரிக்கப்படுகின்றன; மற்றவை எரிக்கப்படுகின்றன அல்லது நிலத்தில் கொட்டப்படுகின்றன. மறுசுழற்சி செய்வதைவிடவும் ஞெகிழியைப் புதிதாக உற்பத்தி செய்வதே, நடைமுறையில் பெரிய நிறுவனங்களுக்கு லாபம் தரும். இதனால் மறுசுழற்சிச் செயல்பாடுகள் பெரிய அளவில் தாக்கம் பெறாமல் போகின்றன.
- இந்தப் பின்னணியில்தான், ஞெகிழியை ஒழிக்கும் நடவடிக்கையை ஞெகிழி மாசுபாடு குறித்த பன்னாட்டுப் பேச்சுவார்த்தைக் குழு தீவிரப்படுத்தியிருக்கிறது. உலகளாவிய ஞெகிழி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதில் பேச்சுவார்த்தை மையம் கொண்டிருப்பதால், ஞெகிழி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள், கச்சா எண்ணெய்-இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். நாம் பயன்படுத்தும் ஞெகிழி (synthetic plastic) புதைபடிவ எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதே எதிர்ப்புக்குக் காரணம்.
- நுகர்வுத் தேவையைக் காட்டிலும் புதைபடிவ எரிபொருள் சார்ந்த எண்ணெய்ப் பொருளாதாரத்தோடு ஞெகிழி உற்பத்தி நெருங்கிய தொடர்புள்ளது. எனவே, நாம் பிரச்சினையின் வேர்களை நோக்கிச் செல்வதே அவசியம். அந்த வகையில், ஞெகிழி ஒழிப்புக்கான உடன்படிக்கையானது முழுமையான தீர்வை நோக்கியதாக உருவாக்கப்படுவது அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 05 – 2024)