TNPSC Thervupettagam

டி.என்.சேஷன்: வாக்குரிமையின் காவலர்!

November 13 , 2019 1892 days 1494 0
  • நவீன இந்திய வரலாற்றை சுதந்திரத்துக்கு முன்பு, பின்பு என்று காலவரிசைப்படுத்துவதைப் போல சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றை டி.என்.சேஷனுக்கு முன்பு, பின்பு என்று காலப்பகுப்பு செய்யலாம். 1990-களின் தொடக்கத்தில் தேர்தல் ஆணையராகப் பதவியேற்ற டி.என்.சேஷன் (1932-2019) தேர்தல் ஆணையத்தின் முகத்தையும் அகத்தையும் மாற்றியமைத்தவர்.
  • அவருக்கு முன்னால் தேர்தல் என்பது சடங்காகவே நடந்துவந்தது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது, வாக்குச் சாவடிக்குப் பணியாளர்களை நியமிப்பது, வாக்குகளை எண்ணுவது, தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கிற அமைப்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் இருந்துவந்தது.
  • டி.என்.சேஷன், இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் முழு இறையாண்மையும் மக்களிடமே இருக்கிறது என்பதை அரசியல்வாதிகளுக்கும் வாக்களிக்கும் மக்களுக்கும் ஒருசேர உணர்த்த முற்பட்டவர். இந்திய அரசமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய முழு அதிகாரத்தையும் கையிலெடுத்த அவர், ஆட்சியாளரின் அதிகாரங்களை இடைநிறுத்தி வைத்ததோடு, அவர்களின் செல்வாக்கு தேர்தல் நடைமுறையில் குறுக்கீடுகளை விளைவிக்காதவண்ணம் புதிய நடைமுறைகளை உருவாக்கினார். வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதிலும் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.

மதுரை மாவட்ட ஆட்சியர்

  • டிசம்பர் 15, 1935 பாலக்காட்டில் பிறந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த சேஷன், 1955-ல் இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்த 1965-67 காலக்கட்டத்தில் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பில் இருந்தவர் சேஷன்.
  • போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடுமையாக நடந்துகொண்டார் என்ற விமர்சனம் அப்போது அவர் மீது எழுந்தன. எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் தொழில் துறை செயலராகவும் விவசாயத் துறை செயலராகவும் பணியாற்றிய சேஷன் மாநில அரசோடு எழுந்த முரண்பாடுகளால் மத்திய அரசுப் பணிக்குப் பணிமாறுதல் பெற்றுக்கொண்டார்.
  • மத்திய அரசுப் பணிக் காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, பாதுகாப்புத் துறை, ராணுவத் துறை ஆகியவற்றில் செயலராகப் பணியாற்றினார். தொடர்ந்து அமைச்சரவைச் செயலராகப் பதவி வகித்தவர், ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்துக்குப் பிறகு திட்டக் குழு உறுப்பினரானார். டிசம்பர் 1990-ல் சந்திரசேகர் பிரதமராகப் பொறுப்பு வகித்தபோது தலைமைத் தேர்தல் ஆணையராக சேஷன் நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

  • டி.என்.சேஷன் தனது பதவிக்காலத்தில் நடைமுறைக்குக் கொண்டுவந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆணையத்துக்கு வழங்கின. 1960-கள் தொடங்கி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தாலும், அதைப் பற்றிய விழிப்புணர்வைக் கடைசி வாக்காளர் வரைக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவர் சேஷன். நடத்தை விதிகள் என்பதைப் பெயரளவுக்கு அறிவிக்காமல், அதைத் தீவிரமாகச் செயல்படுத்தவும் கண்காணிக்கவும் செய்தார்.
  • நடத்தை விதிகள் மீறப்பட்டதற்காகப் பல சந்தர்ப்பங்களில் தேர்தல் பிரச்சாரங்களையும் தேர்தல்களையும் அவர் நிறுத்தியிருக்கிறார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளோடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடுகிறது என்பதால் விதிமீறல்களைத் தண்டிக்கும் வாய்ப்பையும் ஆணையம் இழந்துவிடுகிறது.
  • ஆணையம் தனது அதிகாரத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்காக, சேஷன் கையில் எடுத்த இன்னொரு அஸ்திரம், விதிமுறைகள் மீறப்பட்டால் தேர்தல் தேதி தள்ளிவைக்கப்படும் என்ற அறிவிப்பு. பஞ்சாபில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் ஆளுங்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியைக் காரணம் காட்டியும், ஹரியாணாவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய சமூக நலத் திட்டங்களை அறிவித்ததற்காகவும் இடைத்தேர்தலை நிறுத்திவைத்தது உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் ஆளுங்கட்சியினரின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன.

அரசியல் குறுக்கீடு கூடாது

  • 1994-ல் ஆந்திரப் பிரதேசம், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிய இரண்டு மத்திய அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்குப் பரிந்துரைத்தார். இதுபோல் இனி நடக்காது என்று உறுதியளித்தார் நரசிம்ம ராவ். ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவர்கள், தேர்தல் நடக்கும் பகுதிகளில் அரசுமுறைப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறையொன்றையும் சேஷன் உருவாக்கினார்.
  • நடத்தை விதிமுறைகளின் கீழ் பொதுச் சொத்துகளைத் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது, அனுமதி பெறாமல் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது, இரவில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று வழிகாட்டுதல்களையும் வழங்கினார். மாநில அரசுகள் தேர்தலுக்குப் பிறகு செய்ய வேண்டியவை என்றும் சில வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன்படி, கட்டிடச் சுவர்களைப் பிரச்சாரத்துக்காக உருக்குலைத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுவரொட்டி ஒட்டியவர்கள் அவற்றைச் சுத்தம் செய்து சுவரில் வெள்ளையடிக்க வேண்டும் என்றெல்லாம் அந்தப் பட்டியல் நீண்டது.
  • ஏறக்குறைய ஒரு எதிர்க்கட்சியைப் போலவே அவர் செயல்பட்டார். தேர்தலின்போது எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பதோடு பிரச்சாரத்தின்போது எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பிரச்சாரம் நடக்கும் இடங்கள் என்னென்ன, அங்கு பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கியின் எண்ணிக்கை என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கண்காணித்தார்.
  • தேர்தல் ஜனநாயகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தாங்கள் ஆட்சியில் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் நீதியில் வாக்காளர் மீது செல்வாக்கு செலுத்தவே விரும்புவார்கள். அதைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் தேர்தலின் நோக்கமே கேள்விக்குறியாக மாறிவிடும். இந்தியத் தேர்தல்கள் குறித்து நீண்ட காலமாகச் சுட்டிக்காட்டப்பட்டுவந்த இந்தக் குறையைக் களையும் முயற்சி சேஷனின் காலத்தில்தான் முன்னெடுக்கப்பட்டது. அவரது இந்த முயற்சியைப் பாராட்டி அவருக்கு 1996-ல் ‘ரமோன் மகசேசே’ விருது வழங்கப்பட்டது.

ஆணையரின் அதிகாரம்?

  • டி.என்.சேஷன் ஆணையராகப் பதவியேற்றபோது தேர்தல் ஆணையத்துக்கு ஒருவரை மட்டுமே ஆணையராக நியமிக்கும் நடைமுறைதான் இருந்துவந்தது. சேஷனின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரது பதவிக்காலத்தில் மேலும் இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆணையர்களில் மூத்தவரான சேஷன் தலைமை தேர்தல் ஆணையர் என்று குறிப்பிடப்பட்டார்.
  • ஆணையர்களின் பெரும்பான்மை முடிவின்படியே ஆணையம் செயல்பட வேண்டும் என்ற நிலையும் உருவானது. இதை எதிர்த்து சேஷன் வழக்கு தொடர்ந்தார். அரசமைப்புச் சட்டத்தின்படி இந்த மாற்றத்தில் எந்தத் தவறுமில்லை என்றும், அவ்வாறு கூடுதல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த சேஷனே பின்பு குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆட்சிப் பணித் துறையில் பணியாற்றிய காலத்தில் பெரும்பாலும் அரசியல் தலைவர்களால் விரும்பப்படாத அதிகாரியாகவே அவர் இருந்தார். என்றாலும், தேர்தல் முறையானது அதன் சரியான அர்த்தத்தின்படி இயங்க வேண்டும் என்ற குடிமைச் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கியவர் சேஷன்தான்!

நன்றி: இந்து தமிழ் திசை (13-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories