TNPSC Thervupettagam

டிக்டாக்,தொடரும் தடை

January 6 , 2025 5 days 38 0

டிக்டாக்,தொடரும் தடை

  • ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் டிக்டாக் தடையோடு இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. டிக்டாக் பயன்பாடு பல நாடுகளில் பிரச்சினைக்குரியதாக இருப்பதுபோல, அல்பேனியாவிலும் இருக்கிறது. அண்மையில் 14 வயது மாணவர் ஒருவர், சக மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார். டிக்டாக் தளத்தில் வாக்குவாதமாக வெடித்து வளர்ந்த மோதலே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. விரிவான விசாரணைக்குப் பிறகு டிக்டாக் சேவைக்குத் தடை விதிக்க முடிவானது. “ஓராண்டுக்கு டிக்டாக்கைத் தடை செய்கிறோம். அல்பேனியாவில் டிக்டாக் இருக்காது” என அல்பேனிய அரசு அறிவித்துள்ளது.

யூடியூப்பில் புதிய வசதி:

  • யூடியூப்பில் என்ன வீடியோ பார்ப்பது என்கிற குழப்பத்துக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப்பை அணுகும்போது அதன் முகப்புப் பக்கத்தில் கீழே, ‘பிளே சம்திங்’ எனும் வசதியை ‘கிளிக்’ செய்தால், ஏதேனும் ஒரு காணொளி தானாக ஓடத் தொடங்கும். ஷார்ட்ஸ் சேவையில் பிரதானமாக அறிமுகமானாலும், நீள் காணொளிகளையும் இதில் காணலாம். இந்த அம்சம் சோதனை முறையில் அறிமுகமாகியிருப்பதாக 9டூ5கூகுள் தளம் தெரிவிக்கிறது. எனவே, இச்சேவை அனைவருக்கும் அறிமுகமாகத் தாமதமாகலாம்.

ஆங்கில உச்சரிப்பு சரியா?

  • ஆங்கிலத்தை நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பது இருக்கட்டும், உங்கள் ஆங்கில உச்சரிப்பு எந்த வகையில் இருக்கிறது என்பதைச் சோதித்துப் பார்க்க ஒரு வழி இருக்கிறது, தெரியுமா? ‘ஆக்சண்ட் ஆரகில்’ எனும் சேவையில் அளிக்கப்படும் ஆங்கிலப் பகுதியை வாசித்துக் காண்பித்தால், உங்கள் ஆங்கில உச்சரிப்பு எந்த முறையில் அமைந்துள்ளது என்பதை ஊகித்துச் சொல்கிறது.
  • பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலதரப்பட்ட மக்கள் பேசும் ஆங்கில உச்சரிப்புகளின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதன் கணிப்பு துல்லியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த வசதி ஒரு துணை சேவைதான். இதன் பின்னே இருக்கும் போல்ட்வாய்ஸ் (https://start.boldvoice.com/) நிறுவனம், ஆங்கிலப் பயிற்சி அளிக்கும் சேவையை வழங்குகிறது. ஆனால், இந்தச் சேவை, ஆங்கிலம் பேசவோ இலக்கணமோ கற்றுத்தருவதில்லை. மாறாக அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தைப் பேசப் பயிற்சி அளிக்கிறது.

கூகுள் டாக்ஸ் சேவைக்கு மாற்று!

  • 2024இல் அறிமுகமான புதிய செயலிகளில், கவனத்தை ஈர்த்தவை பல இருந்தாலும், ‘புரோட்டான் டாக்ஸ்’ (https://proton.me/drive/docs) சேவை தனித்து நிற்கிறது. இணையத்தில் பரவலாக அறியப்பட்ட சொல் தொகுப்பான்களில் ஒன்றான கூகுள் டாக்ஸிற்கான மாற்றாக இந்தச் சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. புரோட்டான் டாக்ஸின் சிறப்பம்சம் என்னவெனில், புரோட்டான் குடும்பத்தின் தனித்தன்மையான தனியுரிமை பாதுகாப்பை மேம்படுத்தும் என்கிரிப்ஷன் அம்சத்தை இது கொண்டிருப்பதுதான்.
  • ஆக, இதில் உருவாக்கப்படும் ஆவணங்களின் விவரங்களைப் பயனாளிகள் தவிர வேறு யாரும் அறிய முடியாது. புரோட்டான் டிரைவ் சேவைக்குள் இந்த வசதியை அணுகலாம். என்கிரிப்ஷன் பூட்டு கொண்ட தனியுரிமைப் பாதுகாப்பை வலியுறுத்தும் மின்னஞ்சல் சேவைக்காகப் புரோட்டான் அறியப்படுகிறது. கட்டணச்சேவை என்றாலும், தனியுரிமையின் தேவையை உணர்த்துவது.

உங்கள் ஏஐ பயிற்சியாளர்!

  • புத்தாண்டு என்றதும் கொண்டாட்டத்திற்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது, புத்தாண்டு உறுதிமொழிதான். மாற்றத்தை நாடி, புதிய பழக்கத்தை விரும்பி எனப் பலவற்றுக்கான புத்தாண்டு உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அந்த உறுதிமொழியைப் பின்பற்றுவதுதான் சவாலானது. புத்தாண்டு உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிடாமல் திட்டமிட்டப்படி பின்பற்ற வழிகாட்டும் வகையில் ரெசல்யூஷன்கோச் (https://resolutioncoach.co/) சேவை அறிமுகம் ஆகியுள்ளது. இந்தத் தளத்தில் புத்தாண்டு உறுதிமொழியைத் தெரிவித்தால், அதைப் பின்பற்ற வழிகாட்டும் ஏஐ பயிற்சியாளரை அது அளிக்கிறது. தினசரி நினைவூட்டல் மூலம் இலக்கை அடைய இந்தப் பயிற்சியாளர் உதவுவார்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories