TNPSC Thervupettagam

டிஜிட்டல் காலக் கருத்துருவாக்கமும் விளிம்புநிலைச் சமூகத்தின் சவால்களும்

August 23 , 2024 143 days 137 0

டிஜிட்டல் காலக் கருத்துருவாக்கமும் விளிம்புநிலைச் சமூகத்தின் சவால்களும்

  • ஒரு சமூகம் தமது கருத்தைப் பொதுவான​தாகச் சித்தரித்து அதிகாரத்தின் கவனத்தைப் பெறுவதும், அதன்வழி கிடைக்கும் அரசியல், பொருளாதார லாபத்தைத் தம் பக்கம் திருப்​பிக்​கொள்​வதுமான நடைமுறையைச் சமூக வரலாறு நெடுகிலும் பார்க்க முடியும்.
  • வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அச்சமூகமே அதிகார​மாக​வும்கூட மாறும். சமூகத்தின் இயங்கியலில் இதுவொரு வழமையான உத்தி என்றபோ​தி​லும், காலந்​தோறும் அதை அனைத்துச் சமூகங்​களும் பயன்கொண்டு இருக்க​வில்லை.
  • உத்தியை வகுப்​பதும் செயலாக்கு​வதும் அதிகாரத்தின் பாற்பட்டது என்பதால், ஒரு குறிப்​பிட்ட காலப்​பகு​தியில் எந்தச் சமூகம் அதிகாரத்தை அணுக்​க​மாக்​கிக்​கொண்​டிருக்​கிறதோ அதுவே அந்த உத்தியின் வழி பயனடைந்தது.
  • ஏனைய சமூகங்கள் விளிம்​புநிலைக்குத் தள்ளப்​பட்டன. மையநிலைச் சமூகம் – அதிகாரம் – விளிம்​புநிலைச் சமூகம் என்னும் முக்கோணத் தன்மையிலான ஊடாட்​டத்தில் மையம் விளிம்​பாவதும் விளிம்பு மையமாவதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் பொருட்டே நிகழ்ந்தன.
  • இந்த அம்சம், கடந்த காலத்தைப் போலவே இன்றைய டிஜிட்டல் காலத்தில் தொடர்ந்​தா​லும், முன்னெப்​போதைக் காட்டிலும் அது நுணுக்கமான வேறுபாடு​களைக் கொண்டிருக்​கிறது. விளிம்​புநிலைச் சமூகங்கள் அதீத நெருக்​கடிக்கு உள்ளாக்​கப்​பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அந்த வேறுபாடு​களையும் அதற்கான காரணங்​களையும் பேசியாக வேண்டும்.

கருத்​துரு​வாக்​கமும் விளைவு​களும்:

  • அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்​களின் தாக்கம் ஏற்படாதவரை அதிகார அணுக்கம் கொண்ட சமூகத்தால் நிகழ்த்​தப்பட்ட கருத்​துரு​வாக்​கங்​களில் ஒருவித நிதானம் இருந்தது. அதன் வழி அக்கருத்​துரு​வாக்​கங்கள் கொண்டு​வரும் விளைவு​களைக் கணிக்க முடிந்தது.
  • விரும்பத்தகாத விளைவு​களைக் கொண்டு​வரும் என்று தெரிந்​தால், அந்தக் கருத்​துரு​வாக்கம் உடனடி​யாகக் கைவிடப்​பட்டது. சான்றாக, சமூக ஊடகங்​களின் பெருக்​கத்​துக்கு முன்னிருந்த அச்சு ஊடகங்​களில் சந்தேகத்​துக்கு இடமான செய்தியை வெளியிடு​வதைவிட, நிறுத்தி வைப்பது ஓர் அறமாக இருந்தது.
  • இன்றைக்கு நிறுவனமாக இயங்கும் அனைத்து ஊடகங்​களிலும் அந்நிலைப்பாடு தொடர்ந்​தாலும் தனிநபர்​களிடம் பரவியுள்ள திறன்​பேசிகளின் (Smart Phones) வழியாக உண்மைத்​தன்மை உறுதி செய்யப்படாத செய்திகள் அவசரக​தியில் பகிரப்​படு​கின்றன. அவற்றின் வழியாக உருவாகும் கருத்​துரு​வாக்​கங்கள் பெரும்​பாலும் சமூகத்​துக்குள் குழு மனப்பான்​மையின் வேறுபாடுகளை அதிகரித்து, சமூகப் பிளவை உண்டாக்​குபவையாக இருக்​கின்றன.
  • நிதானம் தவறியிருக்கும் இன்றைய டிஜிட்டல் காலக் கருத்​துரு​வாக்​கத்தில் விரும்பத்தகாத விளைவுகளை உடனே கணிக்க முடிவ​தில்லை. ஆதலால், அந்தக் குறிப்​பிட்ட கருத்​துரு​வாக்​கத்தைத் தொடக்க நிலையிலேயே சரிசெய்யவோ கைவிடவோ வாய்ப்​பின்றிப் போய்விடு​கிறது. அதன் விளைவாக மையம் x விளிம்​புநிலைச் சமூகங்​களுக்கு இடையிலான முரண்பாடு வளர்கிறது.
  • இதற்குச் சமீப காலத்தில் நிகழ்த்​தப்பட்ட அரசியல் கைதுகளையும் கொலைகளையும் சார்ந்து பரப்பப்பட்ட நிறுவனம் அல்லாத தனிக் குழுக்​களின் சமூக ஊடகப் பதிவு​களைச் சான்றாகச் சொல்ல முடியும்.
  • இவற்றோடு, கடந்த காலச் சம்பவங்​களின்போது பகிர்ந்​து​கொள்​ளப்பட்ட பதிவு​களையும் இணைத்துப் பார்த்​தோ​மானால் அவை ஆதரவு, எதிர், மெளனம் என்னும் மூன்று வகைமை​களில் அமைந்​திருப்​பதைப் பார்க்க முடியும்.
  • இவ்விடத்தில் ‘மெளனம்’ கருத்​தாகுமா என்கிற கேள்வி எழக்கூடும். கருத்​தாகும் என்பதே பதில். மெளனமாக இருப்​பதும் கருத்தை வெளிப்​படுத்தும் வகைமைக்குள் ஒன்று​தான். அது எப்போதும் அதிகாரத்தின் கருத்​துரு​வாக்​கத்​துக்குத் தனது நிபந்​தனையற்ற ஆதரவை வழங்கிக்​கொண்டே இருக்​கும்.
  • அதிகார / மையநிலைச் சமூகத்தின் நடவடிக்கைகள் மக்களைப் பாதிக்​கு​மானால், ஜனநாயகத்தை விரும்​புகிற குரல் ஒருபோதும் மெளனமாக இருக்​காது. இன்றைக்கு அரசியல் கட்சிகள் அனைத்துமே தமக்கென்று சமூக ஊடகப் பிரிவை வைத்துள்ளன. தம்முடைய கருத்தைப் பரப்புவது, எதிர்க் கருத்தை மறுப்பது என்னும் இரண்டு நிலைப்​பாடுகள் அவற்றுக்கு இருந்​தாலும் ஒப்பீட்​டளவில் எதிர்க் கருத்தை மறுப்​ப​தற்​குத்தான் பெருமளவு கவனம் செலுத்துகின்றன.
  • அவை பல நேரம் தமது நோக்கத்​துக்கு அப்பாற்​பட்டுத் தனிமனிதத் தாக்குதலாகவும் அவதூறாகவும் மாறிவிடு​கின்றன. அதாவது, சரியான சொல் தேர்வு, காரண விளக்கம், தர்க்க நியாயம் ஆகியவற்றுக்குத் தேவைப்​படும் பக்குவ மனம் இல்லா​திருப்​பவர்​களால் உருவாக்கிப் பரப்பப்​படும் கருத்துகள், அக்கருத்​துரு​வாக்​கத்தின் உண்மையான நோக்கத்தைச் சிதைப்​பதுடன் திசைதிருப்பும் வேலையையும் செய்கின்றன. இதனால், சமூக முரண்​களும் அரசியல் பகைகளும் ஊற்றெடுக்​கின்றன.
  • குறிப்பாக, சமீப காலங்​களில் சாதி, மதரீதியிலான மோதல்கள் அதிகரித்​திருப்​ப​தற்கு ஊடகங்​களில் பகிரப்​படும் சமூகப் பொறுப்பற்ற கருத்​து​களும் முக்கியப் பங்கு வகித்​திருக்​கின்றன.
  • அவை உடனடி​யாகத் தீர்வு காணப்பட வேண்டிய விளிம்​புநிலைச் சமூகத்தின் முக்கியப் பிரச்சினை​களைக் கூட இயல்பாக்கம் செய்து, மக்கள் குற்றவுணர்​வின்றிக் கடந்து​ போவதற்கான வழிகளை ஏற்படுத்தும் வேலையையும் ஒருசேரச் செய்கின்றன. விளிம்​புநிலைச் சமூகத்​தினருக்கான பிரச்​சினை​களைப் பொதுக் கவனத்​திலிருந்து விலக்கு​வதற்​காகத் திட்ட​மிட்டு ‘இயல்​பாக்கம் செய்தல்’ டிஜிட்டல் காலத்தில் ஓர் உத்தி​யாகவே மாறியிருக்​கிறது.

சந்தேகத்​துக்கு இடமாகும் உண்மைத்​தன்மை:

  • டிஜிட்டல் காலக் கருத்​துரு​வாக்​கத்தின் மற்றொரு பிரச்​சினை, உண்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற மாதிரியான பொய்மைகளை உருவாக்கிப் பரப்புவது. அப்படிச் செய்வதால் பொய்மைகள், உண்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்து​வதோடு, உண்மையின் இடத்தில் தம்மை நிறுவிக்​கொள்​கின்றன.
  • அதோடு, உறுதிப்படுத்​தப்படாத ஒரு கருத்​துரு​வாக்​கத்தை கண்மூடித்​தனமான சார்புநிலை காரணமாக, அது சரியல்ல என்று நன்கு தெரிந்​திருந்தும் அக்கருத்​துரு​வாக்​கத்தைக் கண்மூடித்​தனமாக ஆதரிப்​பதும், அதுவே தங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்​தால்... எவ்வளவுதான் உண்மையாக இருந்​தாலும் மிகக் கடுமையான வார்த்​தைகளால் வெறுப்பு கக்கி அதை எதிர்ப்​பதும் டிஜிட்டல் பயனாளிகள் செய்யும் பெருந்​தவறாகும்.
  • இத்தகைய கண்மூடித்​தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைக்குக் கிடைக்கும் வரவேற்பு, இதைப் பரப்பு​பவர்​களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்​து​விடு​வதும் ஒரு அவலம்! இதிலும் விளிம்​புநிலை சமூகத்​திற்கு உண்டாகும் பாதிப்புகளே அதிகம்.
  • ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ ஆராய்ச்​சி​யாளரும் சமூகவியல் பேராசிரியருமான ஜென் ஐக்கர்ஸ், ஆய்வாளர் மத்தியாஸ் ராத் ஆகியோர் இணைந்து எழுதிய ‘விளிம்​புநிலைச் சமூகமும் டிஜிட்டல் மாற்ற​மும்: விளிம்​புநிலைகளில் டிஜிட்டல் ஊடகத்தை நோக்கிய அணுகு​முறைகளை மாற்றுதல்’ (Digital change and Marginalized Communities: Changing Attitudes towards digital media in the margins) என்னும் கட்டுரையில் அதிகார அணுக்கம் கொண்ட​வர்​களின் டிஜிட்டல் செயல்​பாடுகள் விளிம்​புநிலை​யினருக்கான உண்மைகள் மீது சந்தேக மனப்பான்மையையும் நம்பிக்கைப் பற்றாக்​குறையையும் உருவாக்குவதாக மாறியிருக்​கின்றன எனச் சுட்டி​யுள்ளமை இவ்விடத்தில் குறிப்​பிடத்​தக்கது.
  • பண்பாட்டுத் தளத்தில் உண்மைகளை உண்மை​களாகவே பராமரிப்பது பல நேரம் அதிகாரத்​துக்கு எதிரானதாக அமையக்​கூடும். ஆதலால், அதிகாரம் ஒரு பண்பாட்டைப் புறந்​தள்ளி, அதற்கு மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைக்க விரும்​புமே​யானால், ஏற்கெனவே இருக்கும் பண்பாட்டின் இருப்​புக்குப் பலம் சேர்க்கும் உண்மைகளை அழிக்​கும்.
  • அதாவது, மாற்றுப் பண்பாட்டை விரும்​புகிற அதிகாரம், எப்போதும் தமக்கு எதிரானவை​யாகக் கருதுவது ஏற்கெனவே இருந்​து​வரும் உண்மை​களைத்​தான். உண்மை​களைத் திரிப்​பதும் அழிப்​பதுமான போக்கு சமூக ஊடகங்​களில் இன்றைக்கு அதிகரித்து​விட்டது. இது அனைத்துச் சமூகங்​களுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும் என்றாலும், கூடுதலாக விளிம்புநிலைச் சமூகங்​களின் அடையாளப் பூர்வி​கத்​துக்கும் எதிராக அமையும்.

டிஜிட்டல் ஜனநாயகத்தில் நேர்மையின் அவசியம்:

  • டிஜிட்டல் ஜனநாயகத்தில் (Digital Democracy) நேர்மையை இழப்பது வணிகம், அரசியல், அடிப்படை உரிமை​களைப் பாதுகாத்தல் என அனைத்​திலும் தனிமனித, கூட்டு ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்கிறார் டிஜிட்​டல்​மய​மாக்​கலின் ஆதரவாளரான ஸ்டீவன் கிளிஃப்ட். இது விளிம்புநிலைச் சமூகத்​துக்கு எதிராகப் பகிரப்​படும் கருத்து​களுக்கும் பொருந்தும்.
  • விளிம்​புநிலைச் சமூகத்​துக்கு எதிராக அதிகார அணுக்கக் குழுக்​களால் திட்ட​மிட்டுப் பகிரப்​படும் கருத்​துக்கள், அதிகாரத்தின் வேலையைச் சத்தமில்​லாமல் செய்து​விடும் குணாதிசயம் கொண்ட​வையாக இருக்​கின்றன என்பதைத் தனது எழுத்​துக்​களில் பல இடங்களில் குறிப்​பிடும் ஸ்டீவன் கிளிஃப்ட், மையநிலை எதிர் விளிம்​புநிலைச் சமூகங்​களுக்கு இடையிலான டிஜிட்டல் உரையாடலைக் கண்காணித்து, உண்மையைத் தக்கவைப்​ப​தற்கு அவ்விரண்டு சமூகங்​களுக்கும் அப்பாற்பட்ட செயல்​பாட்டுக் குழு வேண்டும் என்கிறார். விளிம்​புநிலைச் சமூகங்கள் மீதான அரசியல், பண்பாட்டுத் தாக்குதல்கள் பற்றிப் படர்ந்​து​கொண்டு இருக்கும் சூழலில், அவரது கருத்​துகள் முக்கி​யத்துவம் பெறுகின்றன.
  • எளிதாகவும் விரைவாகவும் வெறுப்பை விதைத்து​விடு​வதற்கான வாய்ப்புகள் அதிகரித்​துள்ள இன்றைய டிஜிட்டல் காலத்​தில், கருத்துருவாக்கத்​தின்போது கைக்கொள்ள வேண்டிய நிதானமும் உண்மை மீதான வேட்கையுமே சமூகத்தின் நல்லிணக்கத்துக்கு வழி அமைக்​கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories