டிரக்கோமாவுக்கு முற்றுப்புள்ளி
- உலக நாடுகளில் 2024இல் ஒழிக்கப்பட்ட நோய்களின் பட்டியலை உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டிரக்கோமா நோய் இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அது பாராட்டு தெரிவித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 15 கோடி பேர் டிரக்கோமா நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர்.
- டிரக்கோமா என்பது கிளமிடியா டிரக்கோ மாடிஸ் (Chlamydia trachomatis) என்கிற பாக்டீரியாவால் ஏற்படும் கண் நோய். இந்நோய் பாதிப்பினால் பார்வை இழப்பு ஏற்படலாம். குழந்தைகளே டிரக்கோமாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிவந்த, எரிச்சலூட்டும் கண்கள், வீங்கிய கண் இமைகள், மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் போன்றவை டிரக்கோமாவின் அறிகுறிகளாகும்.
டிரக்கோமாவை வென்ற இந்தியா:
- 1950 முதல் 1960 வரை இந்தியாவில் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக டிரக்கோமா இருந்தது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் டிரக்கோமாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போதைய மக்கள்தொகையில் 50%க்கும் அதிகமானோர் டிரக்கோமாவால் பாதிக்கப்பட்டனர். 1971 இல் இந்தியாவில் ஏற்பட்ட பார்வையிழப்புக்கு 5% டிரக்கோமாவே காரணமாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தியா தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
- 1963இல் இந்திய அரசு, உலகச் சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆகியவற்றின் உதவியுடன், தேசிய டிரக்கோமா கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் டிரக்கோமாவை ஒழிப்பதில் இந்தியா வெற்றியடைந்துள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 12 – 2024)