டிரம்ப் ஆதிக்கத்தால் அதிரும் உலகம்!
- மனித குலத்துக்கே மிகவும் அழிவுகரமான முடிவை எடுக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கிறாா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப். அவரது தலைமையில் இயங்கும் அமெரிக்கா நினைத்தால் உலகின் எந்த நாட்டின் தலைவிதியையும் மாற்ற முடியும் என்ற அளவுக்கு பலம் வாய்ந்த நாடாக திகழ்கிறது. எனவே, டிரம்ப்பின் கருத்துகளையும், பேச்சுகளையும் அவ்வளவு எளிதில் யாரும் புறந்தள்ளிவிட முடியாது. அமெரிக்கா உலக அரங்கில் புறக்கணிக்க முடியாத அளவுக்கு பெரிய நாடாகவும் உள்ளது. அதன் புவியியல் பரப்பளவு 9.53 மில்லியன் சதுர கிலோமீட்டா்கள். இது உலகின் மொத்த நிலப்பரப்பில் 6.4 சதவீதம் என்றாலும், இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. பிரிட்டனைவிட 40 மடங்கு மற்றும் ஜொ்மனியை விட 27 மடங்கு பெரியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- இந்த புவி பரப்பளவு அளவீட்டை விட முக்கியமானது அமெரிக்காவின் பொருளாதார பலம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி). உலக வங்கியின் தரவுகளின்படி, 2023 அமெரிக்க பொருளாதார மதிப்பு 27.72 டிரில்லியன் டாலராகும். ஒட்டுமொத்த உலகின் பொருளாதார மதிப்பு 106.17 டிரில்லியன் டாலா்.
- உலக மக்கள்தொகையில் 4 சதவீதம் பேரை மட்டுமே கொண்டுள்ள நாடு, பொருளாதாரத்தில் 25 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கிறது. 2020 கணக்கெடுப்புப்படி அமெரிக்க மக்கள்தொகை சுமாா் 33 கோடியாகும். இதில் இந்திய மக்கள்தொகையில் சுமாா் நான்கில் ஒரு பங்கு ஆகும்.
- அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 17.79 டிரில்லியன் டாலா் மதிப்புடன் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், அமெரிக்காவைவிட 4 மடங்கு அளவுக்கு மக்கள்தொகையைக் கொண்டுள்ளதால் அதன் தலா வருமானம் குறைவாக உள்ளது.
- அமெரிக்காவைவிட தலா வருமானம் அதிகம் இருக்கும் நாடுகளும் சில இருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் பொருளாதார பலத்துடன் அவற்றை ஒப்பிட முடியாது. உதாரணமாக, 6.45 லட்சம் மக்கள்தொகை மற்றும் 2,586 சதுர கிலோமீட்டா் பரப்பளவைக் கொண்ட லக்ஸம்பா்க், அதிகபட்ச தனிநபா் வருமானத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் மொத்த பொருளாதார மதிப்பு 81.2 பில்லியன் டாலா்கள் மட்டும்தான். இது இந்திய தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பான 120 பில்லியன் டாலா்களை விட, 40 பில்லியன் டாலா்கள் குறைவு. மற்றொரு குறிப்பிடத்தக்க பொருளாதாரப் புள்ளிவிவரம் என்னவென்றால், உலக அந்நியச் செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலரின் பங்கு சுமாா் 58 சதவீதம் ஆகும். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு 70 சதவீதமாக இருந்தது.
- எல்லாவற்றிற்கும் மேலாக, உலகளாவிய ‘ஃபயா் பவா்’ (ராணுவ பலம்) குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 800 பில்லியன் டாலருக்கு மேல் ராணுவத்துக்காக செலவிடுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலக அளவில் ராணுவத்துக்காக செலவிடப்படும் நிதியில் 39 சதவீதம் அமெரிக்காவின் பங்காக உள்ளது. அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடல்ல. ஆயுத உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றதுடன், மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது. ஆனால், 80 நாடுகளில் 750 இடங்களில் அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளன. இது நேட்டோ அமைப்புடன் கூடிய உடனடி பதிலடி நடவடிக்கைகளுக்கான தளங்களாகும்.
- 5,000-க்கும் மேற்பட்ட போா்க்கப்பல்கள் அமெரிக்காவில் உள்ளன. உலக அணு ஆயுதங்களில் 88 சதவீதத்துக்கு மேல் அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் உள்ளது. இதில் அமெரிக்காவின் பங்கு பாதிக்கு மேல் உள்ளது. இவைதான் அமெரிக்கா எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி உலகின் முதன்மையான வல்லரசு நாடாக திகழக் காரணம்.
- அதே நேரத்தில், அந்நாடு சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம், உலக அமைதி ஆகிய அதன் அடிப்படைக் கொள்கைகளை மறந்து அதன் ஆணவத்துக்கு இடம் கொடுத்தால் அது உலகுக்கு மட்டுமின்றி, அந்நாட்டு மக்களுக்கும் ஆபத்தாக முடியும்.
- அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள் அச்சமூட்டுவதாக உள்ளது. அவரது நிா்வாகம் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களைக் கையாளும்விதம், அவா் வசமுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் மனிதாபிமானமற்ற மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.
- அமெரிக்க ராணுவ விமானத்தில் 19 பெண்கள், 13 சிறாா்கள் உள்பட 104 இந்தியா்களை நாடு கடத்திய முறை இதயம் கனக்கச் செய்வதாக இருந்தது. எந்த அளவுக்கு மனிதாபிமானமற்ற தன்மையையுடன் செயல்பட முடியும் என்பதையும் காட்டியது. 40 மணி நேர விமானப் பயணத்தின் போது அவா்கள் முழுமையாக கைவிலங்கிடப்பட்டிருந்தனா். பஞ்சாபின் அமிா்தசரஸில் தரையிறங்கியவுடன் மட்டுமே கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதாக நாடு கடத்தப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
- நாடு கடத்துவதற்கு வேறு முறைகளைப் பயன்படுத்தி இருக்க முடியாதா? நாம் நாகரிக சமுதாயத்தில் வாழவில்லையா? இரு நாட்டு அரசுகளும் முன்கூட்டியே பேச்சு நடத்தி கண்ணியத்துடனும், மனித உரிமைகளை மீறாமலும் நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இதுவரை இரு விமானங்களில் சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு மோசமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளனா்.
- இரு நிகழ்வுடன் இந்த சோகம் முடியப் போவதில்லை. இந்தியாவில் இருந்து 18 ஆயிரம் போ் அமெரிக்க அதிகாரிகளால் ஆவணமற்ற குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். நாடு கடத்தப்படுவது புதிதல்ல. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 15,756 சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். ஆயினும் கூட, இந்தியா ஒரு முக்கியத்துவம் இல்லாத அல்லது அமெரிக்காவின் எதிரி நாடோ அல்ல. 2024 -ஆம் ஆண்டு நிலவரப்படி 54 லட்சம் இந்தியா்கள் அமெரிக்காவில் உள்ளனா். இது அந்நாட்டு மக்கள்தொகையில் 1.47 சதவீதம் ஆகும். இதில் 66 சதவீதம் போ் இந்தியாவிலிருந்து புலம்பெயா்ந்தவா்கள். 34 சதவீதம் போ் அமெரிக்காவிலேயே பிறந்தவா்கள் ஆவா்.
- அடிப்படையில் அமெரிக்காவே புலம்பெயா்ந்தோரால் உருவான நாடுதான். பூா்விக அமெரிக்கா்கள் அந்நாட்டு மக்கள்தொகையில் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனா். எனவே, அந்நாட்டின் வரலாற்றின்படி, குற்றப்பின்னணி இல்லாத புலம்பெயா்ந்தோரிடம் அனுதாபம் காட்டுவதுடன், அவா்களை மனிதாபிமான முறையுடன் கையாள வேண்டும்.
- ஆனால் டிரம்ப்பின் தோ்தல் வாக்குறுதியானது, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்கள் அனைவரையும் அதாவது சுமாா் 1.2 கோடி மக்களை வெளியேற்றுவதாக இருந்தது. அவா்களில் பெரும்பாலோா் மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து வந்தவா்கள். மற்ற நாடுகளைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்க நிா்வாகம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதை அதன் நட்பு நாடான இந்தியாவுக்கு நாடு கடத்திய விதத்தை பாா்த்த பிறகு ஊகிப்பது கடினம் அல்ல.
- சட்டவிரோத குடியேறிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பது, போதைப்பொருள்கள் அமெரிக்காவுக்குள் நுழையாமல் தடுப்பது என்ற பெயரில் பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை டிரம்ப் அறிவித்துள்ளாா். அமெரிக்காவின் முக்கிய வா்த்தக நாடுகளான சீனா, கனடா, மெக்ஸிகோ மீது கடுமையான இறக்குமதி வரி உயா்வை அறிவித்தாா். அமெரிக்கா வா்த்தகப் பற்றாக்குறையில் உள்ளது. இதனை சரி செய்வதற்கே இந்த நடவடிக்கை என்று விளக்கினாா்.
- ஆனால், இறக்குமதி வரி உயா்வால் அமெரிக்காவில் கடுமையான விலைவாசி உயா்வு ஏற்படும் என்பதை புறந்தள்ளிவிட்டு, ஏற்றுமதி நாடுகளுக்கு நெருக்கடி அளிக்கவே முயற்சித்தாா். சீனா மீதான இறக்குமதி வரி உயா்வு நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மெக்ஸிகோ, கனடா மீதான நடவடிக்கை ஒரு மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.
- இதன் தாக்கம் அமெரிக்காவில் மட்டும் எதிரொலிக்காமல், பிற நாடுகளையும், உலக வா்த்தகத்தையும் பாதிக்கும். ‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதை நாகரிக உலகம் விரும்புகிறது. ஆனால், ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ என்ற டிரம்ப்பின் கொள்கை பிடிவாதமாகவே உள்ளது.
- மேலும், மனிதாபிமானமற்ற நாடு கடத்தல் நடவடிக்கைகள், வரி விதிப்புகள், ‘யுஎஸ்எய்ட்’ நிதியை நிறுத்தம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில், உலக சுகாதார அமைப்பில் (டபிள்யூஹெச்ஓ) இருந்து அமெரிக்கா விலகல் உள்ளிட்டவற்றை டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம் சா்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அவா் கட்டவிழ்த்துவிட்டுள்ளாா்.
- இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உலக வா்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். சட்ட விரோத குடியேறிகள் வெளியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் வேதனையளிக்கும் விஷயம்.
- எனவே, நாகரிக, ஜனநாயக உள்ள நாடுகளின் அரசுகளும், பிற ஜனநாயக சக்திகளும் அமெரிக்க அரசின் தற்போதைய மனிதாபிமானமற்ற, வெகுஜன விரோத நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த வேண்டுமென குரல் எழுப்புவதைத் தவிர, வேறு வழியில்லை.
நன்றி: தினமணி (24 – 02 – 2025)