TNPSC Thervupettagam

டெங்குவின் கொடுமை!

September 22 , 2017 2631 days 4513 0

டெங்குவின் கொடுமை!

---------------

 அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்

அடித்தட்டு மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த டெங்கு காய்ச்சல் மேல்தட்டு மக்களையும் விட்டு வைக்க வில்லை என்பதற்கு பிரியங்கா காந்தி வதேராவிற்கு வந்த டெங்கு பாதிப்பே உதாரணம் ஆகும். ஆம்! நோய் மட்டும்தான் ஏழை, பணக்காரன் பாகுபாட்டினை இவ்வுலகில் பார்ப்பதில்லை.
2017ல் மட்டும் 18700 பேர் நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர். இதில் படிப்பறிவு நிறைந்து விழிப்புணர்வுடன் இருக்கும் கேரள மக்கள் 2017 ஆம் ஆண்டு ஜூலை 2 வரையிலான கணக்கெடுப்பின் படி 9104 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கு அடுத்த படியான இடத்தினை நம்முடைய தமிழ்நாடு பிடித்துச் சாதனை படைத்திருக்கின்றது. நம்மில் 4174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எத்துனை வேதனைக்குரியது! மேலும், கர்நாடகாவில் 1945 பேரும், குஜராத்தில் 616 பேரும் , ஆந்திரப்பிரதேசத்தில் 606 பேரும், மேற்கு வங்காளத்தில் 469 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுதும் வருடந்தோறும் 390 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சல் எதனால் உருவாகின்றது? இது நம் அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட, கொசுவினால் உருவாகும் நோய் ஆகும். டெங்கு வைரசினால் உருவாகும் இந்நோய் பெரும்பான்மையாக ஏடிஸ் எஜிப்டி மற்றும் அரிதாக ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுவினால் பரவக்கூடியதாகும்.
இது வெப்ப மண்டலப்பகுதிகளிலும், மித வெப்ப மண்டலப்பகுதிகளிலும் பரவலாக இருக்கக்கூடியது. இந்தக் கொசுக்கள் அதிகாலையிலும் , மாலையிலும், பகலிலும் கடிக்கக் கூடியதாகும். மேலும் அழையா விருந்தாளியாக எப்பொழுது வேண்டுமானாலும் வந்து நோய் பரப்பும் இயல்பு கொண்டது. ஒரு கொசுதானே என்று அதன் கடித்தலினை அலட்சியப்படுத்த முடியாது. ஒரே ஒரு கடியிலும் கூட நோயினைப் பரவச் செய்யும் வீரியமும் தன்மையும் கொண்டது.
தலைவலி, வாந்தி, உச்சகட்டக் காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, கண்களுக்குப் பின் ஏற்படும் வலி, அடி வயிற்று வலி, கருப்பு நிறத்தில் வாந்தி , இரத்தத் தட்டுக்கள் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைவது, மலம் கருப்பு நிறத்தில் வெளியேறுவது மற்றும் தோலில் ஏற்படும் சொறிகள் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த எல்லா அறிகுறிகளுமே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இவற்றில் சில அறிகுறிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இருப்பினும் நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவையே ஆகும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கும் பொழுது டெங்கு தன்னுடைய விஸ்வரூபத்தினைக் காட்டத் துவங்கி விடுகின்றது. அவை ரத்தம் வடிதல், குறைந்த எண்ணிக்கையிலான இரத்தத் தட்டுக்கள் , இரத்தப் பிளாஸ்மா கசிதல், உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் ஆகியன ஆகும். கொசு கடித்து 4 முதல் 7 நாட்களுக்குள் வரும் அறிகுறிகள் 3 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கின்றது.
இத்தனை கொடிய தன்மை கொண்ட டெங்கு இன்றோ அல்லது நேற்றோ தோன்ற வில்லை. கி.பி. 1779 லேயே இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த நோய்க்கான காரணங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது 20 ஆம் நூற்றாண்டில்தான். மேலும், இரண்டாம் உலகப்போர் காலத்திலும் டெங்கு தன் பங்கிற்குப் பதம் பார்த்திருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.!
டெங்கு பாதிக்கப்படுவதில் 80% மக்களுக்கு முதலில் அது சாதாரண காய்ச்சல் போலவே தோன்றும். பின்னர்தான் அவர்களுக்கு அது சாதாரணம் அல்ல; சதா ”ரணம்” ஏற்படுத்தும் என்பதினை உணர்த்தும். இது நோயாளிகளில் 5% பேருக்கு உயிருக்கு உலை வைக்கக் கூடியதாய் உள்ளது. ஏடிஸ் எஜிப்டி கொசு கடித்த மூன்று முதல் பதினான்கு நாட்களுக்குள் அதன் அறிகுறி தெரியும். குழந்தைகளுக்குச் சாதாரண சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு என்று அலட்சியமாக இருந்தால் நாம்தான் விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.
டெங்கு தசை மற்றும் எலும்பு சார்ந்தப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற காரணத்தினால் “எலும்பு நொறுக்கும் காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகின்றது. இக்காய்ச்சல் நம்மைப் பிடித்திருக்கும் காலம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. காய்ச்சல் காலம், சிக்கலான காலம், உடல்நலம் திரும்பும் காலம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றது. காய்ச்சலானது 104° ஃபாரன்ஹீட் வரையில் உயரும் . அதனுடன் உடன் பிறவா சகோதரனாக தலைவலியும் சேர்ந்து கொள்ளும். இது 2 முதல் ஏழு நாட்களுக்குத் தொடரும். வாந்தி வருவது போன்ற உணர்வும் அல்லது வாந்தியும் வந்திடலாம்.
தோலில் திட்டுக்கள் போன்ற சொறியும் ஏற்படலாம். மேலும் நான்கு முதல் ஏழு நாட்களில் தட்டம்மைக்குரியது போன்ற தழும்புகளும் தென்படலாம். இந்தத் திட்டுக்களானது “சிவப்புக்கடலில் வெள்ளைத் தீவுகள்” என்று அழைக்கப்படுகின்றது.
சிலருக்கு இதையும் தாண்டிச் சிக்கலான நிலையை நோயானது அடையும் . ஒரு சில நாட்களுக்கு இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் வடியும். இரத்தத்தில் திரவம் குறைகின்ற காரணத்தினால் இரத்த ஓட்டத்தில் திரவக் குறைபாடும், முக்கிய பாகங்களுக்கு மிகக்குறைந்த இரத்த ஓட்டத்தினையும் அளிக்கும். இது உறுப்புகளின் செயல் குறைபாட்டிற்கும் , வயிற்றுப் பாதையில் பாதிப்பினையும் ஏற்படுத்தும். குறைந்த இரத்த அழுத்தமும், அதிக அளவிலான இதயத் துடிப்பும் ஏற்படுத்தக்கூடிய அதிர்ச்சி நிலையினை ஏற்படுத்தும்.
உடல்நலம் திரும்பும் பொழுது இரத்த மண்டலத்திற்குள் மீண்டும் இழந்த இரத்த ஓட்டமானது திரும்பக்கூடிய நிலையை ஏற்படுத்தும். இந்நிலையானது இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும். இந்நிலையின் பொழுது குறைந்த இரத்தத்துடிப்பும் அரிப்பும் தோன்றும். மேலும், தோலில் தோன்றியிருந்த சொறியும் உதிரத் துவங்கும். ஏற்கெனவே கசிந்த இரத்தத் திரவம் ஈடு செய்யப்படும். இந்நிகழ்வு மூளையுடன் தொடர்பு ஏற்படுமேயானால் லேசான மயக்க நிலை தோன்றும். மேலும், உடல் சோர்வானது சில வாரங்களுக்கு நீடிக்கும்.
மேற்கண்ட படத்தில், மையத்தில் இருக்கும் கருப்புத் திட்டுக்களே டெங்குவினை உருவாக்கும் வைரஸ் ஆகும். இது இரத்தத்தின் மூலமும், உறுப்பு தானம் மூலமும் கூட பரவக்கூடியது. கருவுற்றப் பெண்களின் மூலம் சிசுக்களுக்கும் பரவக்கூடியது. நேரடித் தொடர்பினால் பரவக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவே. டெங்கு வைரஸினைக் கொண்ட கொசு மனிதனைக் கடிக்கும் பொழுது கொசுவின் எச்சிலுடன் தோலின் வழியாக உள்ளே செல்கின்றது. இரத்த வெள்ளையணுக்களுடன் இணைந்து தோல் முழுவதும் பரவுகின்றது. இரத்த வெள்ளையணுக்கள் சைட்டோகைன் மற்றும் இண்டர்ஃப்ரான் எனப்படும் புரதங்களை உருவாக்குகின்றது. இது காய்ச்சல் மற்றும் கடுமையான வலியினை உருவாக்கக்கூடியது. கடுமையான தாக்கத்தின் பொழுது உடலில் உள்ள டெங்கு வைரஸ் அதிகமாகப் பரவுகின்றது. இதனால் கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக முக்கிய உறுப்புகளுக்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை. எலும்பு மஜ்ஜையின் செயல் குறைபாடு இரத்தத்தட்டுக்கள் உற்பத்தியைப் பாதிக்கின்றது. இது இரத்தம் கசிதலினை ஊக்குவித்து மேலும் பல உபாதைகளை ஏற்படுத்துகின்றது.
ஒரு கொசு முட்டையிட்டு கூட்டுப்புழுவாக மாறி கொசுவாகப் பறந்திட பதினைந்து நாட்கள் ஆகும். இதன் வளர்ச்சி நான்கு கட்டம் கொண்டது. முதல் மூன்று கட்டங்களில் ஒழித்திட நாம் அயர்ந்து விட்டாலும் கடைசி கட்டத்தில் ஒழித்தால் கூட டெங்குவிலிருந்து நிச்சயம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
உலக சுகாதார மையம் ஒழிக்க வேண்டிய கொசுக்களின் பட்டியலில் ஏடிஸ் கொசுவினையும் இடம்பெற வைத்துள்ளது. இக்கொசுவின் பாதிப்பு நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் 130 நாடுகளில் கோலோச்சுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 200 முட்டைகள் வரை இடும் திறன் கொண்ட ஏடிஸ் கொசு 16° முதல் 30° வரையிலான வெப்பநிலையில் வளரக்கூடியதாகும். பெண் ஏடிஸ் கொசுக்களுக்கு முட்டையிடப் புரதம் தேவை என்பதால் அதன் தேடலுக்கு விடையாக மனித இரத்தம் அமைகின்றது. பாதிக்கப்பட்ட ஏழாவது நாளில்தான் ஐ.எம்.ஜி எலிசா பரிசோதனை (I.M.G ELISA) மற்றும் ஐ.ஜி.ஜி பரிசோதனை (I.G.G) மூலம் இதன் பாதிப்பை அறிந்து உறுதி செய்து கொள்ள முடியும்.
நோய் வந்த பிறகு அய்யோ என்று அலறுவதினை விட அதனைத் தவிர்த்தல்தானே புத்திசாலித்தனம். கொசுக்கள் நம் சுற்றுப்புறத்தில் சுற்றுவதினைத் தடுத்தலே, முதல் நடவடிக்கையாக அமைய வேண்டும். அதற்குச் சுற்றுப்புறத்தினில் சிறிதளவும் தண்ணீர் தங்கக்கூடாது. சன்னலினைப் பூட்டி வைப்பதும், கொசு வலை அடிப்பதும் சாலச் சிறந்தது ஆகும். முழு உடலையும் மறைக்கும் படி உடை அணிவது சாலச்சிறந்தது. ”அதுதான் என்னால் முடியாதே!” என்பது சிலரின் சிணுங்கலாக இருந்தால் டெங்கு நமக்கு சங்கு ஊதுவதற்கு அருகில் இருக்கின்றதென்று புரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் ஆரம்ப சுகாதார மையத்தின் சித்த மருத்துவப் பிரிவில் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீர் இக்காய்ச்சலுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. காய்ச்சல் நமக்கு இல்லையெனில் தினமும் ஒரு முறை என்று ஐந்து நாட்களுக்கு உட்கொண்டோமேயானால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் நம்மை அணுகாது. காய்ச்சல் வந்து விட்டால் வேறு வழியில்லை. தினமும் இரண்டு முறை நிலவேம்பு குடிநீரைக் குடித்து தான் ஆக வேண்டும். பூண்டினை அதிகமாகச் சாப்பிடுவது கொசுவினால் ஏற்படும் கொடுமையான விளைவுகளைத் தவிர்க்கும் என்று சித்த வைத்தியம் கூறுகின்றது. மேலும் பப்பாளி இலையின் சாறும் இதனைத் தவிர்க்கும் என்று கூறுகின்றது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் அதி தீவிரமாக பரவுவதற்கு என்ன காரணம்? ஆராய்ந்தே தீர வேண்டும் அல்லவா! இதற்கு முன் 21 நாட்கள் மட்டுமே வாழ்ந்த கொசுக்கள் இப்பொழுது 40 நாட்கள் வாழும் வரம் பெற்றுள்ளன. மனிதனின் சராசரி வாழ்நாள் மட்டும் அதிகரிக்கும் போது எங்களின் ஆயுள் மட்டும் அதிகரிக்கக்கூடாதா என்ன? இது கொசுக்களின் கேள்வி. தெளிவான நீரில் மட்டுமே முட்டையிட்டு வந்த ஏடிஸ் கொசுக்கள் தற்போது கிணறுகளில் கூட முட்டையிடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் மட்டும் அதிகமாக இருந்த பாதிப்பு இப்பொழுது புற நகரையும் புரட்டி எடுக்கின்றது.
பொதுவாக இக்கொசுக்களால் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்கவே முடியாது. அதனால் மலைப்பிரதேசங்கள் டெங்கு காய்ச்சலுக்கு விதி விலக்காக இருந்தது. ஆனால், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் இந்நோய் வந்துள்ளமை மருத்துவர்களை மலைக்கவும் பிரமிக்கவும் வைத்துள்ளது. மேலும், இக்கொசுக்கள் மழைக்காலத்தில் மட்டுமல்லாமல் வறட்சிக்காலத்தில் கூட வாழக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளன. என்னவென்று சொல்வது இக்கொடு(சு)மைதனை?
இப்படி சர்வ வல்லமை பெற்றுள்ள ஏடிஸ் கொசுவின் தீவிரத்தினைப் புரிந்து கொள்ள முடியாமலே உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இனி, இதுவரை அளித்து வந்த மருந்துகளை விட ஆற்றல் மிக்க மருந்தே இப்போதைய தேவையாக இருக்கின்றது. ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வெல்வோம்! டெங்குவிற்கு சங்கு ஊதும் மருந்தினைக் கண்டுபிடிப்போம்.
தகவல் பேழை
  • சீன நாட்டில் கி.மு 265 முதல் கி.மு 420 வரையிலான ஜின் வம்சாவளியின் போது பறக்கும் பூச்சிகளால்  ஏற்படும் நீர் விஷம் என்று டெங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • டெங்கு எனப்படும் பிரெஞ்சு வார்த்தையானது “டிங்கா” எனப்படும் வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. இதற்கு தீய சக்தியினால் உருவாகும் நோய் என்பது பொருளாகும்.
  • 800 வருடங்களுக்கு முன் குரங்கிலிருந்து பரவியதாகக் கருதப்படுகின்றது.
  • ஆப்பிரிக்காவில் தோன்றிய  ஏடிஸ் எஜிப்டி கொசு இன்று வெப்ப மண்டல நாடுகளிலும் காணப்படுகின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மனிதன் இருக்கும் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.
  • புவியில் 35 ° வட அட்சம் முதல் 35 ° தென் அட்சம் வரை பெரும்பான்மையாக இருக்கக்கூடியது.
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே பரவியிருந்த டெங்கு இன்று உலகளவில் பரவியுள்ளது.
  • நகரமயமாதல், மக்கள் தொகைப்பெருக்கம், அதிகரித்துள்ள சர்வதேசப் பயணங்கள், உலக வெப்பமயமாதல் ஆகியன டெங்கு பரவுவதற்கு காரணிகளாகின்றன.
  • டெங்கு வைரசானது ஐந்து வகைகள் கொண்டது.
  • டெங்கு வைரசானது ‘ஃப்ளேவே விரிடே’ குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும்.
  • உலக சுகாதார மையம் டெங்குவினைக் கண்டறிய டார்னிக்வட் சோதனையினைப் பரிந்துரை செய்கின்றது. இது நோயாளியின் இரத்தம் வடிதல் நிலையைக் கண்டறிகின்றது.
  • டெங்கு, சிக்குன் குனியா, ஸிகா காய்ச்சல் மற்றும் ஃப்ளு காய்ச்சல் ஆகியவற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே அறிகுறியுடன் காணப்படுகின்றன.
  • சர்க்கரை நோய், ஆஸ்துமா நோய் கொண்டோருக்கு டெங்கு காய்ச்சல் வரும் பட்சத்தில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது.
  • உலக சுகாதார மையம் 2009 ஆம் ஆண்டே டெங்குவினை சாதாரணக் காய்ச்சல், தீவிரக்காய்ச்சல் என வகைப்படுத்தியுள்ளது.
  • டெங்குவால் ஏற்படும் இறப்பு வீதம் 1 முதல் 5 % ஆகும்.
  • குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவோருக்கு இறப்பு நிலையானது 26% ஆகும்.
  • உலகில் ஒவ்வொரு வருடமும் டெங்குவிலிருந்து நலம் பெற செலவிடப்படும் தொகை 9 அமெரிக்க பில்லியன் டாலர்கள் ஆகும்.
  • டெங்குவின் தீவிர நிலையானது பிலிப்பைன்ஸ் நாட்டில் 1953 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு பன்னாட்டு மருந்து நிறுவனம் சனோஃபி, டெங்குவிற்கான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்தது.
  • டை எத்தில் டோலுமைடினைத் தோலில் தடவுவதன் மூலம் கொசுக்கடியினைத் தவிர்க்கலாம்.
  • 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெங்குவிற்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • ஜீன் 15 ஆம் நாள் சர்வதேச டெங்கு எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகின்றது. இதன் நோக்கம் நோய்த் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories