டென்ஷனை விடுங்க, ரிலாக்ஸா இருங்க!
- உலகமயமாக்கல் காரணமாக மாறிவரும் சூழலில் பணியிடச் சிக்கல்களால் ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இப்படியான சூழலில் சிகிச்சைக்காக வந்த குமாரிடம் மனப்பதற்றத்துக்கு அவர் மட்டும் காரணம் அல்ல என்றும் சமூக, பொருளாதாரச் சூழல் எவ்வாறு மனிதர்களைப் பல்வேறு விதமான மனநலச் சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது என்பதைப் பற்றியும் சொல்லப்பட்டது. ஆனால், சிக்கலான சமூகச் சூழலை ஒருவரால் சமாளிக்க முடியுமா? முடியும்.
தனி மனித மாற்றம்:
- ஒருவருக்கு ஏற்படும் மனப்பதற்றத்துக்கு முக்கியக் காரணிகளில் இந்தச் சமூகமும் ஒன்று என்கிறபோதும், தனி மனிதனாகத் தன்னளவில் சில விஷயங்களைப் பின்பற்றினால் பதற்றத்தில் இருந்து மீண்டுவர முடியும். ஒருவருக்குக்குறைந்தது எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம் என்பதால் முதலில் நிறைவான உறக்கத்துக்குச் சில ஒழுங்கு முறை களைக் கடைப்பிடிக்க வேண்டும். பணி நிமித்தமாகவோ இதர காரணங்களாலோ உறக்கத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.
- நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத் துக்குப் படுக்கைக்குச் செல்வது, மாலை 6 மணிக்குப் பிறகு காபி, டீ குடிப்பதைத் தவிர்ப்பது, இரவு நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியைத் தவிர்ப்பது, திறன்பேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
- இதில் குறிப்பாகச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சரியான உறக்கம் வரவில்லை எனில் கதைப் புத்தகங்களைப் படிக்கலாம். நாள்தோறும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உணவில் கவனம்:
- நீர்சத்துக் குறை பாடு (Dehydration) மனப்பதற்றத்தை அதிகப்படுத்தும், எளிதில் எரிச்சலை ஏற்படுத்தும், தூக்க மின்மையைத் தரும். எனவே, ஒருவர் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாளொன்றுக்குக் குறைந்தது 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது அது மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடாது. தாகம் எடுத்ததற்குப் பின்பு தண்ணீர் குடிப் பதைவிட அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண் டால் நீர்சத்துக் குறைபாடு ஏற்படாது. உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரையில் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. நிறைவாக உண்ண வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சத்தான உணவைச் சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனி, துரித உணவைத் தவிர்க்க வேண்டும்
சமநிலை வேண்டும்:
- தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள், பணி சார்ந்த பொறுப்புகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். அன்றாடம் இவற்றுக்கு இடையேயான முன்னுரிமைகளை வகுத்துச் செயல்பட வேண்டும். பணியிடங்களில் பதற்றம் அதிகமாகும் போது தன் முன் இருக்கும் வேலை அல்லது சூழல் தனது கட்டுப்பாட்டில் உள்ளதா என்கிற கேள்வியை முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும். பிரச்சினை வந்தால் சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஒருவர் அவ்வப் போது பதற்றமாக உணர்கிறார் என்றால் நாள்தோறும் காலையில் 3-4 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்யலாம். நிதானமாக, கவனத்துடன் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றும் பயிற்சியை மேற்கொள்ளலாம். பதற்றம் அதிகமாகும்போது செய்யக்கூடிய இன்னோர் எளிய பயிற்சி தசைத் தளர்வுப் பயிற்சி. விரல்களை மடக்கி ஒரு பந்தை உள்ளங்கையில் வைத்து அழுத்துவது போலப் பிடித்து நிதானமாக விரல்களை விரித்து ‘ரிலாக்ஸ்‘ செய்யும் பயிற்சியைச் செய்தால் உடனடியாகப் படபடப்பு குறையும்.
நேர மேலாண்மை:
- ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பதற்கான திட்டம் நினைத்தபடி கைகூடாதபோது பதற்றம் அதிகரிக்கலாம். அப்போது அந்த வேலையைத் தன்னால் செய்து முடிக்க முடியாது என்கிற எண்ணம் எழலாம். இந்த எண்ணத்தைப் போக்க ஒருவர் தனது துறை சார்ந்து தன்னுடைய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பணியிடத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த முறை அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான உத்தியைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அதைப் பார்க்க வேண்டும்.
- முடிந்தவரை அந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்படாதவாறு திறமையாகச் செயல்பட வேண்டும். ஆனால், பிரச்சினை வந்துவிட்டதே, இதில் இருந்து மீளவே முடியாது என்கிற எண்ணத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது. முக்கியமாக நேர மேலாண் மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- நேரத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்த ஒரு வருக்குப் பதற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. பணியிடங்களில் ஒருவருக்கு இன் னொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகக் கவனமாகவும் தெளி வாகவும் இருந்தால், பெரும்பாலான நெருக்கடிகளையும் அதை ஒட்டி வரக்கூடிய பதற்றத்தையும் தவிர்க்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)