TNPSC Thervupettagam

டெல்டா பிளஸ் ஜாக்கிரதை!

October 27 , 2021 1123 days 776 0
  • உலகிலேயே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு நூறு கோடிக்கும் அதிகமான தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கும் இரண்டாவது நாடு என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறோம் என்பது நிச்சயமாக வரலாற்று சாதனைதான்.
  • அதேநேரத்தில், தடுப்பூசி போடப்படுவதற்கு முன்னால் நிகழ்ந்த பல லட்சம் பேரின் உயிரிழப்பை மறந்துவிட முடியாது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்கள் இந்தியாவைப் புரட்டிப்போட்ட இரண்டாவது அலை பாதிப்பின் தாக்கத்தை முற்றிலுமாக நாம் மறந்துவிட இயலாது.
  • இரண்டாவது அலை பாதிப்பு தொடங்குவதற்கு முன்னால், 2021 தொடக்கத்தில் காணப்பட்ட இயல்பான மனநிலைக்கு நாம் திரும்புவதாகத் தெரிகிறது.
  • செப்டம்பர் மாதம் காணப்பட்ட தடுப்பூசி போடும் வேகம் அக்டோபரில் குறைந்திருப்பது மக்கள் மத்தியில் மெத்தனப்போக்கும் அசிரத்தையும் தோன்றியிருப்பதன் அறிகுறி.
  • செப்டம்பர் மாதம் 23.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன என்றால், அக்டோபர் மாதத்தில் முதல் 20 நாள்களில் வெறும் 11 கோடி தடுப்பூசிதான் போடப்பட்டிருக்கிறது.
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடுவதற்கு இன்னும் 90 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் போடுவது என்றால், மேலும் 80 கோடி தடுப்பூசி தேவைப்படும். அதாவது இன்னும் 170 கோடி தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
  • இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்பதையும் 31% பேருக்குத்தான் இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
  • தேவைப்படும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது தவணையாக "ஊக்க தடுப்பூசி' (பூஸ்டர் டோஸ்) போடப்படுவதும் முக்கியம். இதை மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதும், பொதுமக்கள் அதை உணர்ந்து பொதுவெளியில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
  • குறிப்பாக, சர்வதேச அளவில் கிடைக்கப்பெறும் தகவல்கள் கவலையளிப்பவையாகவே இருக்கின்றன. கரோனா தீநுண்மியின் புதிய வகை டெல்டா உருமாற்றம் குறித்து கடந்த வாரம் அமெரிக்க சுகாதார பாதுகாப்புத்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
  • டெல்டா பிளஸ் என்று குறிப்பிடப்படும் தீநுண்மி குறித்த ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. கிடைத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் புதிய வகை டெல்டா பிளஸ் தீநுண்மி குறித்து எந்தவித முடிவுக்கும் உடனடியாக வர முடியவில்லை.

புதிய வகை கொவைட் 19 தீநுண்மி

  • இந்த புதிய வகை தீநுண்மி டெல்டாவைவிட சற்று வேகமாக வளர்கிறது என்றும் பரவுகிறது என்றும் கூறப்படுகிறது. எங்கிருந்து இந்த தீநுண்மி உருமாற்றம் பெற்றது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.
  • பல்வேறு நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வந்த பயணிகளிடம் இந்த தீநுண்மி காணப்பட்டதைத் தொடர்ந்து அதுகுறித்த விவரம் சேகரித்து ஆய்வுகள் நடத்தப் படுகின்றன.
  • சமீப வாரங்களாக பிரிட்டன், ரஷியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் திடீரென்று மீண்டும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கிறது. பிரிட்டனிலும் இஸ்ரேலிலும் அவற்றின் மக்கள்தொகையில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
  • பிரிட்டனின் மக்கள்தொகையில் 66.69% பேரும், இஸ்ரேலின் மக்கள்தொகையில் 65% பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அப்படியிருந்தும்கூட, கொவைட் 19-க்கு எதிரான எதிர்ப்பு சக்தி பரவலாக ஏற்படவில்லை என்பது தெரிகிறது.
  • 100 கோடி தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம் என்று நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், இந்தியாவில் பெரும்பாலானோர் இன்னும்கூட இரண்டாவது தவணை தடுப்பூசியோ, முதல் தவணை தடுப்பூசியோகூட போட்டுக்கொள்ளாதவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
  • மேலை நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கும் டெல்டா பிளஸ் என்கிற புதிய வகை கொவைட் 19 தீநுண்மி குறித்து நாம் மற்றவர்களைவிடக் கூடுதலாகவே கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
  • ஏனென்றால், அக்டோபர் 2020-இல் இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்தான் முதல்முதலாக டெல்டா உருமாற்றம் தெரிய வந்தது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்.
  • அதன் அடிப்படையில்தான் அதுவொரு கவலைக்குரிய உருமாற்றம் என்று 2021 மே மாதம் அந்த நிறுவனம் அறிவித்தது. ஆகவே மேலை நாடுகளில் பரவிவரும் டெல்டா பிளஸ் தீநுண்மி குறித்த எச்சரிக்கை உணர்வு நமக்கு அதிகம் இருந்தாக வேண்டும்.
  • நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலான நான்கு மாதங்களும் மிக மிக முக்கியமானவை. அப்போது பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகத்தில் இயங்கும் என்பதாலும், பண்டிகைக் கால நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரவிருக்கின்றன என்பதாலும் தீநுண்மி தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
  • இயல்புநிலை திரும்புவதற்கான எல்லா முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவிலான முனைப்பு நோய்த்தொற்றுப் பரவல் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதிலும் தேவை என்பதை நாம் உணர வேண்டும்.
  • பிரிட்டனில் 66.69% பேருக்கும், சிங்கப்பூரில் 80% பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டும்கூட டெல்டா பிளஸ் உருமாற்றம் பரவத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசு தடுப்பூசி தரவில்லை என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.
  • மாநிலங்களிடம் 10.85 கோடி தடுப்பூசிகள் போடப்படாமல் இருக்கின்றன. இலக்கு நிர்ணயித்திருப்பது போல ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதிப்படுத்தினால் மட்டுமே டெல்டா பிளஸ் உருமாற்றத்தை எதிர்கொண்டு தடுக்கும் தயார் நிலையில் நாம் இருப்போம். வந்தபின் எதிர்கொள்வதைவிட வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனம்!

நன்றி: தினமணி  (27 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories