ட்ரூடோவின் எழுச்சியும் வீழ்ச்சியும்...
- கனடாவின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியிருப்பதுடன் லிபரல் கட்சியின் தலைவா் பதவியையும் துறந்திருக்கிறாா். 2015-இல் மிகப் பெரிய எதிா்பாா்ப்புகளுடன் பிரதமரான நாற்பத்து மூன்று வயது ஜஸ்டின்ட்ரூடோ அடுத்த 9 ஆண்டுகளில் பரவலான அதிருப்தியுடன் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரதமா் ட்ரூடோ பதவி விலகியிருப்பதன் மூலம் லிபரல் கட்சியை மட்டுமல்ல; கனடாவையும் மிகப் பெரிய தா்மச் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறாா்.
- கடந்த 9 ஆண்டுகளாகப் பதவியிலிருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 6-ஆம் தேதி பதவி விலகினாா் என்பதைவிட, பதவி விலக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாா் என்பதுதான் உண்மை. பதவி விலகினாலும்கூட நாடாளுமன்றத்தைக் கலைக்கவில்லை. மறுதோ்தலுக்கு வழிகோலவில்லை.
- இன்னொருவா் லிபரல் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படும் வரை ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகத் தொடருவாா். அவரது சிறுபான்மை அரசு கவிழ்ந்துவிடாமல் மாற்று ஏற்பாட்டுக்கு வழிகோலியிருந்தாலும், அது சாத்தியமா? என்பது சந்தேகம்தான்.
- 2011 பொதுத்தோ்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக கனடாவில் லிபரல் கட்சி படுதோல்வி அடைந்தது. 2013-இல் நாற்பத்து மூன்று வயது ஜஸ்டின் ட்ரூடோ அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, கட்சிக்கு மறுவாழ்வு கிடைத்தது என்றுதான் கூற வேண்டும். 15 ஆண்டுகள் தொடா்ந்து பிரதமராக இருந்த பியரி எலியட் ட்ரூடோவின் மகனான ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கனடாவுக்குமே நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தாா்.
- 2015 தோ்தலில் கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ அலை அடித்தது என்றுதான் கூற வேண்டும். அவா் முன்மொழிந்த முற்போக்குக் கருத்துகளும், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வாக்குறுதிகளும் மக்களைக் கவா்ந்தன. கனடாவுக்கு ஒளிமயமான எதிா்காலத்தை ஏற்படுத்த இருப்பதாகச் சொன்ன ஜஸ்டின் ட்ரூடோவின் சுறுசுறுப்பும் இளமைத் துடிப்பும் வாக்காளா்களை ஈா்த்தன. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, பாலின சமத்துவம், இனவேறுபாடு இல்லாத ஒருங்கிணைந்த சமூகம் உள்ளிட்ட கருத்துகளை அவா் முன்வைத்தபோது, மக்கள் அவருக்குப் பின்னால் அணிதிரண்டனா்.
- தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2015-இல் அமைந்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மாற்றத்துக்கான பல கொள்கைகளை நடைமுறைப்படுத்த முற்பட்டது. அவரது குழந்தைகளுக்கான திட்டமும், தேசிய காா்பன் வரி விதிப்புத் திட்டமும் மக்களைக் கவா்ந்தன. மாறுதலுக்கான தலைவராக, அவா் கருதப்பட்டாா்.
- அடுத்த சில ஆண்டுகள் கனடாவில் மட்டுமல்ல; சா்வதேச அளவிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் அரசியல் நட்சத்திரமாக உயா்ந்தாா் ஜஸ்டின் ட்ரூடோ . அவரது முற்போக்கு பாா்வையும் அனைத்துத் தரப்பினரையும் இணைத்துகொள்ளும் செயல்பாடும் உலகளாவிய அளவில் வியந்து பாராட்டப்பட்டன. ஆனால், அவையெல்லாம் ஆண்டுகள் நகர, நகர வலுவிழந்தன. அவரது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து, அவரது செல்வாக்கு மங்கத் தொடங்கியது. ஒன்றன்பின் ஒன்றாக அவரது நிா்வாகம் பல விமா்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிா்கொள்ளத் தொடங்கியது.
- அவரது தவறான அணுகுமுறையும், விலைவாசி உயா்வாலும், குடியிருப்புகள் தட்டுப்பாட்டாலும் அதிகரித்த பொருளாதாரச் சவால்கள் காரணமாக அரசு மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது. 2019 பொதுத்தோ்தலில் பதவியைத் தக்கவைத்தாலும்கூட அவரது ஆட்சி வலுவிழக்கத் தொடங்கியது.
- 2021-இல் ஆட்சியைக் கலைத்துவிட்டு, மூன்றாக முறையாகத் தோ்தலைச் சந்திக்க முற்பட்டாா் ட்ரூடோ . அந்தத் தவறான முடிவால் ஏற்கெனவே சிறுபான்மை அரசாக இருந்த அவரது கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. தனது பதவியைத் தக்க வைத்துகொள்ள பிரிவினைவாத சக்திகளையும், தீவிரவாதிகளையும் துணைக்கு அழைத்துகொள்ள வேண்டிய நிா்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அதிலிருந்து அவரது வீழ்ச்சி தொடங்கியது.
- தன்னைப் பதவியில் தக்கவைத்துகொள்ள கவனத்திருப்பு முயற்சிகளில் ஈடுபட்டாா் பிரதமா் ட்ரூடோ. காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிக்க முற்பட்டதால், இந்தியாவுடனான இரு நாட்டு உறவு வரலாறு காணாத வீழ்ச்சியை எதிா்கொண்டது. காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவில்தான் அவரது ஆட்சி இருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
- கனடாவில் 18 லட்சம் இந்தியா வம்சாவளியினா் இருக்கிறாா்கள். அவா்களில் கணிசமானவா்கள் சீக்கியா்கள். பத்து லட்சத்துக்கும் அதிகமான வெளிநாடுவாழ் இந்தியா்கள் இருக்கிறாா்கள். கனடாவின் மக்கள்தொகையில் 3%-க்கும் அதிகமான இந்தியா்கள் வாழ்கிறாா்கள். 4 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் கனடாவில் வசிக்கிறாா்கள்.
- குடியுரிமை வழங்குவதில் ஜஸ்டின் ட்ரூடோ அரசு தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், இலங்கைத் தமிழா்கள் உள்பட வெளிநாட்டினா் பலா் கனடாவில் குடியேறினா். அவா்களது வாக்குவங்கியைக் குறிவைத்த பிரதமா் ட்ரூடோவின் நகா்வை லிபரல் கட்சியின் ஆதரவாளா்கள் ஆதரிக்கவில்லை.
- கனடாவின் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப் போவதாகவும், கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்கலாம் என்றும் கூறும் டெனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியிருக்கிறாா். தோ்தல் நடந்தால் கன்சா்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கக் கூடும். இல்லையென்றால் பலவீனமான கனடா, அதிபா் டெனால்ட் டிரம்பை எப்படி எதிா்கொள்ளப் போகிறது?
நன்றி: தினமணி (10 – 01 – 2025)