TNPSC Thervupettagam

ட்ரோன் கண்ணீர்ப் புகைகுண்டு

May 16 , 2023 605 days 434 0
  • கோவை மாநகரக் காவல் துறையினர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கண்ணீர்ப் புகைகுண்டு வீசும் ட்ரோன் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், அதற்காகக் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள்’ வரிசையில் இந்த ட்ரோன் விரைவில் இணையப்போவதாகவும் தெரிகிறது. தமிழகம் போன்ற அமைதிப் பூங்காவில், அதுவும் கோவை போன்ற நகரில் எந்தத் தேவையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது என்கிற தகவல் இல்லை.
  • இது போன்ற ஆயுதங்கள் காவல் துறையில் இடம்பெற மாநில அமைச்சரவையில் அல்லது சட்டமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெற்றதாகவும் தெரியவில்லை. பெரும் அமைதியின்மை நிகழும் மாநிலங்களில்கூட இது போன்ற சாதனங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கப்படாத நிலையில், இங்கே இது போன்ற முயற்சிகள் ஏன் எனும் கேள்வி எழுகிறது.

ஜனநாயக அத்துமீறல்:

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது ‘வஜ்ரா’ வாகனத்திலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டு வீசப்பட்டதைப் பார்த்தோம். விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்திலும் அது வீசப்பட்டது. நாடு முழுதும் ஜனநாயக உரிமைப் போராட்டங்கள், சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பல போராட்டங்களில் இந்தக் குண்டு வீசப்படுவதைப் பார்க்க முடிகிறது.
  • இந்த CS gas (2-chlorobenzalmalononitrile) வகை கண்ணீர்ப் புகைகுண்டுகளின் புகை கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். சுவாசப் பாதையில் எரிச்சலையும் குமட்டலையும் ஏற்படுத்துவதுடன், தற்காலிகப் பார்வை பாதிப்பையும் உண்டாக்கும்.
  • தோல், சில நரம்புப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். குழந்தைகள், முதியோர், உடல் ஊனமுற்றோர், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் சுவாசித்தால் உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம்.
  • ஜனநாயகச் சமூகத்தில், சங்கமாகச் சேரும் உரிமை அடிப்படை உரிமையாக உள்ள நிலையில், அந்தச் சங்கத்தின் வழியே அமைதியான போராட்டத்தின் மூலம் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அரசைப் பணியவைப்பதும் மக்கள் உரிமையின் நீட்சிதான்.
  • ஆனால், பல வேளைகளில் அமைதியான போராட்டம்கூடக் கலவரமாகச் சித்தரிக்கப்படுகிறது. கள நிலவரத்தைக் காட்டிலும் அரசியல் காரணங்கள் இதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூட்டங்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைகுண்டு வீசுவது விவாதத்துக்கு உரியது. இது ஒருவகையில் ஜனநாயக அத்துமீறல்.
  • நடைமுறைக்கு வராத வரையறைகள்: பொதுவாக, சட்டவிரோதக் கூட்டம் என முடிவுசெய்து அதைக் கட்டுப்படுத்துவதற்கு, 1962இல் நடைபெற்ற காவல் துறைத் தலைவர்களின் மாநாட்டில் அடிப்படை நடைமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அதுபோன்ற நடைமுறைகளைக் காவல் துறையினர் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
  • பொதுவாக, கண்ணீர்ப் புகைகுண்டு என்பது ஒரு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதம் என்றே காவல் துறையினர் நியாயப்படுத்துகின்றனர். ஆனால், இந்த ஆயுதங்கள் விற்பனை தொடர்பாக உலகம் முழுதும் வெளிப்படைத்தன்மை இல்லை.
  • 1993இல் பாரீஸில் நடைபெற்ற ரசாயன ஆயுதங்கள் தொடர்பான மாநாட்டில் இந்தியாவும் பங்கெடுத்து, மாநாட்டு வரையறைகளில் கையொப்பமிட்டது. அவற்றை நடைமுறைப்படுத்த 2000இல் ரசாயன மாநாட்டு வரையறை சட்டம் (The Chemical Weapon Convention Act, 2000) உருவாக்கப்பட்டது. இதன்படி உறுப்பு நாடுகள், போரில் பயன்படுத்துவதுபோல ரசாயன ஆயுதங்களை, கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்துவதில்லை என முடிவுசெய்தது. இச்சட்டத்தின் பிரிவு 13(1) இதை உறுதிசெய்கிறது.

அப்பட்டமான சித்ரவதை வடிவம்:

  • இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரின்போது, ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்தி, ரசாயனக் குண்டுகளை வீசுவது போன்ற செயலே ட்ரோன்கள் மூலம் கண்ணீர்ப் புகைகுண்டு வீசுவது. ஒரு ராணுவம் கொலைசெய்யும் நோக்கில் குண்டுவீச்சு நிகழ்த்துகிறது. ஆனால், காவல் துறையோ மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட வேண்டிய அமைப்பு.
  • இத்துறைக்கு ட்ரோன் புகைகுண்டு போன்ற தொழில்நுட்பத்துக்கான தேவையோ சட்ட அனுமதியோ இல்லை. போர்களில்கூட இது போன்ற கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசுவது தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கான ரோம் வரையறையானது (Rome Statute of the International Criminal Court), விஷ வாயு, மூச்சுத் திணறடிக்கும் வாயு உருவாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது போர்க் குற்றம் என வரையறுக்கிறது.
  • இது கண்ணீர்ப் புகைகுண்டுக்கும் பொருந்தும். மேலும், ஐநா அவையின் சட்டத்தைப் பாதுகாக்கும் முகமைகளின் நெறிமுறைகளின்படி, அவை எல்லா மனிதர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும். காவல் துறை அதிகாரி, யாரையும் சித்ரவதை செய்வதோ, மோசமாக நடத்துவதோ, இழிவுபடுத்துவதோ கூடாது.
  • கூட்டத்தைக் கலைக்க காவல் துறை நடத்தும் தாக்குதல்கள், கண்ணீர்ப் புகைகுண்டு வீசுவது போன்றவற்றைச் சித்ரவதையின் வடிவம் என ஐநா சபையின் சித்ரவதைக்கு எதிரான குழு கருதுகிறது. இந்நிலையில், ட்ரோனிலிருந்து கூட்டத்தின்மீது வேகமாக வீசப்படும் கண்ணீர்ப் புகைகுண்டுகள் அப்பட்டமான சித்ரவதை வடிவமே.
  • ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைகுண்டு வீசும் தொழில்நுட்பத்தை முறைப்படுத்துதல் அல்லது அதன் பாதிப்பில்லாத் தன்மை குறித்து காத்திரமான எந்த ஆய்வும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இந்த வகைத் தொழில்நுட்பங்கள் (Tear Gassing by remote control) எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஜெர்மானிய நிறுவனம் தயாரித்த இது போன்ற ஒரு தொழில்நுட்பம், வழிப்பறி செய்ய உதவும் வாய்ப்புள்ளதாகவும், பிறரால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.
  • இது போன்ற தொழில்நுட்பங்களை அடக்குமுறைக் கருவியாக மக்கள்மீது ஏவ காவல் துறைக்குச் சட்டரீதியான உரிமை இல்லை. குறிப்பாக, கல்வி நிலையங்கள் இது போன்ற கருவிகளைச் செய்துதருவது அநீதியானது; அறிவியல் அறத்துக்கு எதிரானது. இந்தக் கருவிக்கு அரசு தடை விதிக்க வேண்டும். மக்களை எப்போதும் குற்றவாளிகளாக அல்லது குற்றம் செய்யக்கூடியவர்களாகக் கருதும் அதிகார மனப்பான்மையை ஆட்சியாளர்கள் எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (16 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories