- அன்றாடச் சமையலில் முக்கியப் பொருளான தக்காளி, சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.100ஐத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது; தலைநகர் டெல்லியில் ரூ.200ஐத் தொட்டு விட்டது. தக்காளி மட்டுமல்லாமல் சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், பீன்ஸ் உள்படப் பல காய்கறிகளும் கடும் விலையேற்றம் கண்டுள்ளன. இது அனைத்துத் தரப்பு மக்களின் வாங்கும் சக்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- தக்காளி, வெங்காயம் போன்ற முக்கியமான காய்கறிகள் ஆண்டுதோறும் நிலையான விலையைக் கொண்டிருப்பதில்லை. பருவமழை பாதிப்பு, விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவு எனப் பல்வேறு காரணங்களால் விலையில் மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கைதான். 2022 ஜூலையில், சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.15; 2023 ஜூலையில் அது ரூ.120 ஆக உயர்ந்திருக்கிறது.
- சில வாரங்களுக்கு முன்னர் தக்காளிக்குப் போதிய விலை கிடைக்கவில்லை என்பதற்காகக் கால்நடைகளுக்குத் தீவனமாகவோ சாலையிலோ விவசாயிகள் கொட்டிச் சென்ற அவலம் நேர்ந்தது. இன்றோ வாங்கவே முடியாத அளவுக்கு அதன் விலை உச்சத்தில் இருக்கிறது.
- நியாயமாகப் பார்த்தால், காய்கறிகளின் விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழ்வதில்லை என்று பரவலான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் அவற்றை வாங்கும் நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள்தான் விலை உயர்வால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
- காலங்காலமாக நீடித்துவரும் இந்தச் சங்கிலி வர்த்தக முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். காய்கறிகளின் விலை உயரும்போது, அதைப் பயன்படுத்திப் பதுக்கல் மூலம் செயற்கையாக விலை உயர்வு நடப்பதும் உண்டு. தேசிய அளவில் இதற்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.
- மறுபுறம், நியாய விலைக் கடைகள், பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள், கூட்டுறவு அங்காடிகள், நடமாடும் கடைகள் மூலம் சற்று குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் விவசாயிகளிடமிருந்து காய்கறிகள், பழங்களை வேளாண் தோட்டக் கலைத் துறை கொள்முதல் செய்து, மலிவு விலையில் விற்பனை செய்தது அரசு.
- அதேபோல, இப்போதும் அதை அரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடியாகப் பிணைப்பு ஏற்படுத்தும் உழவர் சந்தைத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டியதும் அவசியம்; திட்டத்தில் உள்ள சிறுசிறு குறைகளை நீக்கி, உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும்.
- நாட்டிலேயே முதன்முறையாகக் காய்கறிகளுக்குக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையைக் கேரள அரசு 2020இல் செயல்படுத்தியது. அதன்படி காய்கறிகளைக் கொள்முதல் செய்து மக்களுக்கு அரசே நேரடியாக விற்பனை செய்வதை அம்மாநிலம் சாத்தியப் படுத்தியிருக்கிறது.
- அதுபோன்ற ஒரு நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசும் மேற்கொள்வதன் மூலம், எல்லாக் காலத்திலும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பதற்கு வாய்பபு உருவாகும். இது விவசாயிகள், நுகர்வோர் என இரு தரப்புக்குமே பலன் தரும்; நிரந்தரத் தீர்வுக்கும் வழிவகுக்கும். இதைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (12 – 07 – 2023)