- தக்காளி இல்லாமல் செய்யப்படும் சமையலுக்கான யோசனைகள் குறித்து யூடியூப் காணொளிகள் வரும் அளவுக்குக் கடந்த சில நாள்களாகத் தக்காளி விலை ஏறுமுகம் கண்டுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் பெய்த மழை இந்த விலையேற்றத்துக்குப் பின்னால் உள்ள காரணம் எனச் சொல்லப்பட்டாலும், விவசாயிகள் இதனால் பலன் அடையவில்லை. இந்த விலை ஏற்றத்துக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதற்குமான காரணத்தை அசோக் தல்வாய் குழுவின் அறிக்கை ஆராய்ந்துள்ளது.
- விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் தொடர்பான பரிந்துரைகளை தல்வாய் குழு சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை தக்காளி விலையேற்றம் தொடர்பான காரணத்தை ஆராய்ந்துள்ளது. தக்காளி விவசாயிகளில் 58 சதவீதம் பேர் தனி வியாபாரிகளிடம்தான் தங்கள் விளைபொருளை விற்கிறார்கள்.
- அரசு முகமைகளோ கூட்டுறவுச் சங்கங்களோ தக்காளியைக் கொள்முதல் செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை. இதனால் தக்காளி விவசாயிகள் தங்கள் விளைபொருளை விற்க வேறு வழி இல்லாமல் போவதாக அறிக்கை சொல்கிறது. மேலும் தக்காளி இருப்பு வைத்து விற்க முடியாத விளைபொருள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
- இதைத் தடுப்பதற்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நுகர்வோருக்கு விளைபொருளைக் கொண்டுசெல்லும் வகையில் ’பசுமைச் செயல்பாடு திட்டம்’ 2018இல் தொடங்கப்பட்டது. ஆனால், அதனால் தக்க பலன் இல்லை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
- கிராமப்புறங்களில் விளைபொருளுக்கான குளிர்பதனக் கிடங்கு, போக்குவரத்து வசதி, நவீன பொதிகட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அமைப்பதில் இன்னும் கவனம் செலுத்தப் பட வில்லை என்பதும் இந்த விலையேற்றத்துக்கும் விவசாயிகள் பலன் அடையாமல் போவதற்குமான காரணங்களில் சில என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- தக்காளி போன்ற பயிர்கள் குறித்து முன்வழிகாட்டுதல்களை வழங்க மத்திய, மாநில அரசுப் பிரதிநிதிகள், வேளாண் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப் படவில்லை என்பது காரணங்களுள் கவனம் கொள்ளப்பட வேண்டியது என்றும் அறிக்கை சொல்கிறது.
- நுகர்வோர் துறை கண்காணிப்புக் குழுவின் கணிப்பின்படி கடந்த ஜூன் கடைசி வாரத்தில் தக்காளி கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.122க்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் தக்காளி கிலோ ஒன்றை அதிகபட்சமாக ரூ.10க்குத்தான் விற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
- கோதுமைக்கு மாற்றாகச் சோளம்: மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகம், யேல் பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம், சீனா வேளாண் பள்ளி போன்ற பல கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு, இந்தியாவில் கோதுமைக்கு மாற்றாகச் சோளத்தைப் பயிரிடலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.
- கடந்த வருடம் வீசிய வெப்ப அலையால் கோதுமை விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனால் கோதுமை பயிரிடுதல் குறைந்துவருவதாகவும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. கோதுமை விளைவதற்கு அதிக தண்ணீர் தேவைப் படுகிறது. எதிர்காலத்தில் மாற வாய்ப்புள்ள காலநிலையால் இப்போது தேவைப்படும் தண்ணீரைவிட அதிக அளவு தண்ணீர் கோதுமை விளைச்சலுக்குத் தேவைப்பட வாய்ப்புள்ளது என்பதும் இந்த ஆய்வுக் குழுவின் துணிபு.
- கோதுமையுடன் ஒப்பிடும்போது சோளம் வெப்ப அலையைத் தாங்கக்கூடியது; குறைந்த அளவு தண்ணீர்தான் தேவைப்படும். இந்தப் பண்புகளால் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ற இந்தியப் பயிராகச் சோளத்தை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
நன்றி: தி இந்து (15 – 07 – 2023)