TNPSC Thervupettagam

தங்க சிந்து!

August 28 , 2019 1915 days 1131 0
  • இந்தியாவின் விளையாட்டுத் துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணங்களில் ஒன்று பி.வி. சிந்துவின் பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் வெற்றி. 
  • 38 நிமிஷங்களில் ஜப்பானிய பாட்மிண்டன் வீராங்கனை நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றெடுத்த முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை என்கிற பெருமையை அடைந்திருக்கிறார் ஹைதராபாதைச் சேர்ந்த 24 வயது பி.வி. சிந்து. 
வெற்றிப் பயணம்
  • பி.வி. சிந்துவின் வெற்றிப் பயணம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தனது 18-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்பின் அரையிறுதி ஆட்டம் வரை சென்றது; 19-ஆவது வயதிலும், 21-ஆவது வயதிலும் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்றது; 22-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிச்சுற்றை எட்ட முடிந்தது; கடந்த ஆண்டு இரண்டு மிகப் பெரிய பாட்மிண்டன் பந்தயங்களில் இறுதிச்சுற்றை எட்டியது; இப்போது அவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல தனது 24-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்பை வென்று தனக்கும், தான் பிறந்த நாட்டுக்கும் சர்வதேசப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார் புஸர்லா வெங்கட சிந்து.
  • இந்த முறை ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை 21-7, 21-7 என்கிற கேம் கணக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப்பின் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பதன் பின்னணியில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இது அவரது இடைவிடாத மூன்றாவது முயற்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே ஒகுஹராவிடம் இறுதிச் சுற்றில் பதக்கத்தை நழுவவிட்டார் சிந்து.
விடாமுயற்சி
  • கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின் என்பவரிடம் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். சிந்துவால் இறுதிச் சுற்றில் வெற்றியடைய முடியாது என்று பலரும் சந்தேகப்பட்ட நிலையில், அனைத்தையும் பொய்யாக்கி, தனது விடா முயற்சியால் வெற்றியை நிலைநாட்டியிருக்கிறார் அவர். 
  • சிந்துவின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இருந்த வேகமும், அழுத்தமும் எதிராளியான நஸோமி ஒகுஹராவை நிலைகுலைய  வைத்தது. 310 கி.மீ. வேகத்திலான அவருடைய ஸ்மாஷ்கள் ஆச்சரியப்பட வைத்தன. கொஞ்சம்கூட பதற்றமில்லாமல், அதே நேரத்தில் அதீத சுறுசுறுப்புடனும், சாதுர்யத்துடனும் விளையாடிய சிந்துவின் பேக் ஹேண்ட் டிபன்ஸ், பாட்மிண்டன் விளையாட்டு வல்லுநர்களையே திகைப்பில் ஆழ்த்தியது. தன்னுடைய ஒவ்வொரு ஷாட்டும் எதிராளி சற்றும் எதிர்பார்க்காத இடத்தை குறிவைத்தது என்றால், ஒகுஹராவின் பந்துகளை அவர் எதிர்கொண்ட விதம் பாட்மிண்டன் விளையாட்டில் சிந்துவிற்கு இருக்கும் அதீதமான சாதுர்யத்தை வெளிப்படுத்தியது.
    இந்தியாவின் பாட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் இதுவரை உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்றதில்லை.
  • பிரகாஷ் பதுகோன் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். சாய்னா நெவால் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த முறைதான் முதல் முறையாக சாய் பிரணீத் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.
உலக  சாம்பியன்ஷிப் 
  • உலக  சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கும் நிலையில், இனி பி.வி. சிந்துவின் அடுத்த இலக்கு 2020 ஒலிம்பிக் போட்டி. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஐந்து முறை உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என்று ஒன்றன் பின் ஒன்றாகத் தனது சாதனைப் பட்டியலை அதிகரித்து வரும் சிந்து, டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனுக்கான தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை உயர்ந்திருக்கிறது.
  • சிந்துவையும், சாய்னா நெவாலையும் தவிர, பாட்மிண்டன் உலக பெடரேஷனின் முதல் 60 பாட்மிண்டன் வீராங்கனைகளின் பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. ஆடவர் பிரிவில் முதல் 41 வீரர்களில் சாய் பிரணீத் உள்பட 7 இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். சிந்துவை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, இனிமேல் அதிக அளவில் பாட்மிண்டன் விளையாட்டில் சாதனை புரிவதற்கு வீராங்கனைகள் உருவாகக்கூடும். 
  • சிந்துவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது, வாலிபால் விளையாட்டு வீரர்களான அவரது பெற்றோர் தந்த ஊக்கம். அவர்களைப் போல ஏனைய வீராங்கனைகளுக்கும்  பெற்றோரின் ஊக்கமும், ஆதரவும் இருந்தால் சிந்துவைப் போல இன்னும் பல வீராங்கனைகள் இந்தியாவில் உருவாக முடியும். 
  • சிந்துவின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்தும், அவர் ஹைதராபாதில் நடத்தி வரும் பயிற்சிக்கூடமும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய பாட்மிண்டன் பெடரேஷனின் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது. தென்கொரியாவைச் சேர்ந்த கிம்  ஜி ஹியூன் பயிற்சியாளராக இந்திய பாட்மிண்டன் பெடரேஷனால் நியமிக்கப்பட்டது சிந்துவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. 
  • தலைசிறந்த சர்வதேசப் பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளிப்பதன் மூலம், சர்வதேசப் போட்டிகளில் அதிக அளவில் இந்தியா வெற்றிக் கோப்பைகளைக் குவிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு, சிந்துவின் பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் வெற்றி. ஹிமா தாஸ், மானு பாக்கர் போன்றவர்களுக்கும் இதுபோல வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கை நிறைய தங்கப் பதக்கங்களுடன் இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் இந்தியாவின் பதாகையை தூக்கிப் பிடிப்பார்கள்!

நன்றி: தினமணி(28-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories