TNPSC Thervupettagam

தங்க நகைகளுக்கு ‘ஒரே நாடு ஒரே விலை’

July 22 , 2024 175 days 236 0
  • இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகை விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. விலையை நிர்ணயம் செய்வதில் இந்திய தங்கம் மற்றும் நகை விற்பனையாளர்கள் சங்கம் (ஐபிஜேஏ) முக்கிய பங்கு வகிக்கிறது. தேவை மற்றும் அளிப்பு (Demand and Supply), அமெரிக்க டாலர் மதிப்பு, உள்நாட்டு பொருளாதார நிலவரம், வரிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • அதேநேரம் பெட்ரோல், டீசலைப் போல தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் சிறிய அளவில் வேறுபடுகிறது. இதற்கு வரி, போக்குவரத்து செலவு, உள்ளூர் தேவை மற்றும் அளிப்பு மற்றும் அரசின் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறலாம். பொதுவாக பெருநகரங்களைவிட சிறிய நகரங்களில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.
  • சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வர்த்தகர்கள் மொத்தமாக அதிக அளவில் தங்கத்தை கொள்முதல் செய்கின்றனர். இதனால் இத்தகைய நகரங்களில் மற்ற சிறிய நகரங்களைவிட விலை சற்று குறைவாக இருக்கும்.
  • பல்முனை வரியை மாற்றி ‘ஒரே நாடு - ஒரே வரி' என்ற ஜிஎஸ்டி வரி நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதுபோல, நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை ஒரே விலையில் விற்பனை செய்ய ஏதுவாக, ‘ஒரே நாடு - ஒரே விலை' கொள்கையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து இந்திய தங்கம் மற்றும் நகை விற்பனையாளர்கள் சங்கம் அனைத்து இந்திய ஜெம் & ஜூவல்லரி டொமஸ்டிக் கவுன்சில் அதிகாரிகள் இத்துறை சார்ந்த பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி கலந்துரையாடி வருகின்றனர்.
  • இதனிடையே, இந்தக் கொள்கையை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் நம்பிக்கை அதிகரிக்கும்:

  • இதுகுறித்து அனைத்து இந்திய ஜெம் & ஜூவல்லரி டொமெஸ்டிக் கவுன்சில் தலைவர் சயாம் மெஹ்ரா, கூறும்போது, ‘‘ஒரே நாடு ஒரே விலை திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் வெளிப்படைத் தன்மை ஏற்படுவதுடன் சீரான விலை கட்டமைப்பு உருவாகும். மேலும் தங்க நகை சந்தையில் முரண்பாடுகள் களையப்பட்டு நுகர்வோர் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் விலையேற்றத் தாழ்வுகளை நீக்குவதன் மூலம் தங்க நகைகளின் விலை குறைவதற்கு வழி வகுக்கக் கூடும்.
  • இடைத்தரகு வாய்ப்புகளை கட்டுப்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து நகைக் கடைக்காரர்களுக்கும் நியாயமான போட்டிச் சூழலை வழங்குவதற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்” என்றார். இந்தியாவில் நகை வணிகத்துக்கு தேவையான ஹால்மார்க் பிரத்தியேக அடையாள எண்கள், ஜிஎஸ்டி போன்ற வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நகைத் தொழில் துறை வேகமாக முன்னேறி வருகிறது. இந்த சூழலில் இந்த திட்டத்தால் இத்துறை மேலும் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
  • இந்திய தங்கம் மற்றும் தங்க நகை வர்த்தகர்கள் சங்கத்தின் (ஐபிஜேஏ) தேசிய செய்தித் தொடர்பாளர் குமார் ஜெயின் கூறும்போது, "ஒரே நாடு ஒரே விலை தொடர்பாக பல்வேறு நகைத் தொழில் சார்ந்த சங்கங்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் சாதகமான பதிலை கூறி வருகின்றனர்.
  • எல்லாம் சரியாக இருப்பின் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் முன்னணி நகை வர்த்தக நிறுவனங்கள் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரக்கூடும். தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் தங்கத்துக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீபாவளிக்கு முன்பு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.80,000-த்தை எட்டக் கூடும்” என்றார்

வெளிப்படைத்தன்மை ஏற்படும்:

  • ரித்திசித்தி புல்லியன்ஸ் நிர்வாக இயக்குநர் பிருத்விராஜ் கோத்தாரி கூறும்போது, “பெரும்பாலான முக்கிய நகை வணிக நிறுவனங்கள் தங்கத்துக்கு ‘ஒரே நாடு ஒரே விலை’ கொள்கையை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளன. இது நாட்டில் வெளிப்படையான, சீரான தங்கச் சந்தையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
  • நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தங்க விலை நிர்ணய முறையை செயல்படுத்துவது இந்திய தங்கச் சந்தையை சீரமைப்பதோடு பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, நுகர்வோருக்கு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். இந்த விலைக் கொள்கை தங்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும். வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய அதே வேளையில், உலகளாவிய உலோகச் சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும்" என்றார்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories