- தங்கம் நீண்ட கால அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் லாபம் கொடுப்பதாக பார்த்தோம். தங்க முதலீட்டை வங்கியில் வைப்பு நிதியாக வைப்பதைவிட சிறந்ததாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் வங்கி வைப்புக்கு சுமார் 7% வட்டி மட்டுமே கிடைக்கலாம். அதேநேரம் தங்கத்தின் விலை நாம் வாங்கிய பிறகு பாதகமாக கூட மாறலாம் அல்லவா? உண்மைதான், அதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நீண்டகால அடிப்படையில், எல்லா இலக்கங்களையும் தாண்டி தங்கம் மீண்டும் மேல்நோக்கி ஏறுகிறது. தேவைப்பட்டால், முடியும் என்றால், தங்கம் விலை குறையும்போது, இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
- தங்கத்தை நீண்டகால அளவில் முதலீடு செய்வதற்கு ஒரு சரியான வழிமுறை, கோல்ட் பாண்ட் ஆகும். இதனை தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bond – SGB) என்று அழைப்பார்கள். இது மத்திய அரசினால் உருவாக்கப்படுவது மற்றும் ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடப்படுகிறது. ரிசர்வ் வங்கியானது 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை, இந்த தங்க பத்திரங்களை வெளியிடுகிறது. இதை வாங்குவதன் மூலம் நமக்கு என்னென்ன பலன் என்று பார்க்கலாம்.
நிலையான வட்டி
- பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வது என்பது,அதன் சந்தை மதிப்பு நான் வாங்கிய பிறகு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான். அதைத்தான் நாம் முக்கிய லாபமாகக் கருத வேண்டும். ஆனால், தங்க பத்திரங்களில் முதலீடு செய்யும்போது நமக்கு வருடத்துக்கு 2.5% வட்டியாக கிடைக்கிறது. இந்த வட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு முறைஎன்று கணக்கிடப்பட்டு, ஒரு வருடத்திற்கு 6 முறை கொடுக்கப்படுகிறது. இந்த வட்டிக்கு, TDS (Tax Deducted at Source) பிடித்தம் கிடையாது. தங்கத்தை ஆபரணங்களாக வாங்கும்போது, நமக்கு எந்தவித வட்டியும் கிடைக்காது. மாறாக செய்கூலி சேதாரம் என்று முதலீட்டின் கணிசமான பகுதி காணாமல் போய்விடுகிறது. மேலும் தங்க பத்திர முதிர்வு தொகைக்கு, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும்
- பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வைக் கொண்டுள்ளன. அதற்கு முன்பாக வெளியே எடுக்க முடியாதா? என்ற கேள்வியும் வரலாம். உங்கள் தங்க பத்திர முதலீட்டை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் எடுக்காமல் இருக்க வேண்டும் (Lock in period). வேண்டுமானால் அதற்கு பிறகு நீங்கள் எப்போது வேண்டுமானாலும், விற்று முதலீட்டை வெளியே எடுக்கலாம். இப்படி 5 வருடங்கள் அல்லது 8 வருடங்கள் என நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டுமா? என்று நீங்கள் யோசிக்கலாம்.
- ஆனால் நீண்டகால முதலீடுதான் நமக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும் என்பதை, பகுதி ஒன்றில் நாம் விரிவாக பார்த்தோம். குறிப்பாக, குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது, அவர்களுக்காக தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும்போது, 8 வருடம் கழித்து அந்த முதிர்வுத் தொகை வளர்ந்த உங்கள் குழந்தைகளின் கல்லூரி படிப்புக்கு உதவலாம். இன்னும் முக்கியமாக சொல்வதாக இருந்தால், குழந்தைகளின் 10 முதல் 15 வயது காலத்தில் முதலீடு செய்தால் அவர்களின் திருமண செலவுக்குக் கூட உதவலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
- ஒரு தனி நபர், குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். ஒரு டிரஸ்ட் மூலமாக 20 கிலோ வரை முதலீடுசெய்யலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டு விலையைஅது வெளியிடும் காலகட்டத்தில் உள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யும். அதைப்போல் முதிர்வடையும் போது, சந்தை விலையின் அடிப்படையில், முதிர்வு விலையை நிர்ணயம் செய்யும். முதிர்வடையும்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில், உங்கள் வங்கிக் கணக்கில் ரொக்கமாக வரவு வைக்கப்படும்.
- எப்படி முதலீடு செய்வது?
- ரிசர்வ் வங்கி, இரண்டு முதல் மூன்று மாத கால இடைவெளியில் தங்க பத்திரங்களை வெளியிடும். இதை நீங்கள் வங்கிகள் மூலமாகவோ அல்லதுபங்குச் சந்தை தரகர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தங்க பத்திரங்களை உங்கள் டிமேட் கணக்கிலும் வரவு வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை 5 வருட லாக்கின் பீரியட் முடிந்தபின், நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தால், உங்கள் பங்குச்சந்தை தரகர் மூலமாக, தேசிய பங்குச் சந்தையில் விற்று பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
- தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும், ஆனால் நான் எப்போது வேண்டுமானாலும் அதை பணமாக மாற்ற வேண்டும். அதாவது ஒரு சில நாட்களிலும் விற்க முடிய வேண்டும், சில வருடங்கள் கழித்தும் விற்க முடிய வேண்டும். இதற்கான வழிமுறைதான் கோல்ட் இடிஎஃப்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 10 – 2023)